நமக்கு நல்லது காடுகள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9434
வெங்கம்மா அடுத்த நிமிடம் தாங்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதாள்.
‘‘இல்ல... நான் உங்களுக்கு தகுதி இல்லாதவளா ஆயிட்டேன்...’’
‘‘இல்ல... ஒருநாளும் இல்ல...’’
‘‘நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்...’’
‘‘இல்ல... செய்யாத தப்புக்கு வாழ்நாள் முழுவதும் ஆத்மார்த்தமா வேலை செய்த நம்மளை ‘எஜமான்’ இரக்கமே இல்லாம தண்டிச்சிட்டாரு.’’
இதைச் சொன்னபோது அவனின் குரல் தடுமாறியது. கண்களிலிருந்து நீர் ஆறென வழிந்தது. அருகில் படுத்திருந்த மகனைக் கையால் தடவியபடி வெங்கம்மா சொன்னாள்:
‘‘இவனோட அம்மாக்கிட்ட காட்டிய அநியாயத்தையும் அநீதியையும் நம்ம மகன்கிட்ட நீங்க கட்டாயம் சொல்லணும்.’’
‘‘எங்கம்மா...’’ - அவன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்தவாறு உரத்த குரலில் ஓலமிட்டான்.
தன் கணவனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வெங்கம்மா சொன்னாள்:
‘‘நாம எதற்குமே லாயக்கு இல்லாதவங்களா ஆயிட்டோம். நம்ம பிள்ளைங்க பழிக்கு பழி வாங்குவாங்க....’’
இரண்டு பேரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தார்கள்.
பொழுது புலர்ந்தபோது தனக்கருகில் தன்னுடைய மனைவி இல்லை என்பதை வெங்கய்யா தெரிந்து கொண்டான். முதல் நாள் தன் மனைவியுடன் கட்டிப் பிடித்து படுத்திருந்தது அவனுடைய ஞாபகத்தில் வந்தது.
வெங்கம்மாவின் பெயரைச் சொல்லி அவன் உரத்த குரலில் அழுததைக் கேட்டு முழு கிராமமும் விழித்துக் கொண்டது. கிராமத்து மக்கள் வெங்கய்யாவின் குடிசைக்கு முன்னால் திரண்டு நின்றார்கள். அவன் தன் மார்பில் அடித்துக் கொண்டு அழுதான்.
‘‘என் வெங்கம்மாவைக் காணோம் கோவிந்து காரு.’’
பகல் முழுவதும் அவன் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல தன் மனைவியின் பெயரை அழைத்தவாறு வயல் வெளிகளில் ஓடிக் கொண்டிருந்தான். கிணறுகளையும் குளங்களையும் போய் பார்த்தான். அவனின் குரல் காடுகளில் எதிரொலித்தது.
இரண்டு நாட்கள் வெங்கய்யா எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நெஞ்சில் அடித்தவாறு புலம்பிக் கொண்டு தன் குடிசைக்குள்ளேயே இருந்தான்.
எஜமானின் வயலில் வேலை செய்வதற்காக அவனை அழைக்க கணக்குப் பிள்ளை வந்தார்.
‘‘அவள் போகட்டும் வெங்கய்யா. பெண்கள் கிடைக்கிறதா கஷ்டம்’’
அவ்வளவுதான் - வெங்கய்யா உரத்த குரலில் கத்தியவாறு வெட்டுக்கத்தியை எடுத்துக் கொண்டு அந்த மனிதருக்குப் பின்னால் ஓடினான்.
மூன்றாவது நாள் மீண்டும் அவனை அழைக்க ஆள் வந்தது.
‘‘போலீஸ் உன்னை கூப்பிடுது வெங்கய்யா.’’
வெங்கய்யா வெறித்துப் பார்த்தான் : ‘‘போலீஸா ? என்னையா ?’’
தன்னுடைய மனைவியின் பிணம் ஒரு வேளை போலீஸ்காரர்களிடம் கிடைத்திருக்குமோ ? தண்ணீர் குடித்து வீங்கிப் போய் காயங்களுடன், காட்டு மிருகங்கள் கடித்துத் தின்ற தன்னுடைய மனைவியின் இறந்து போன உடலை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக தன்னை போலீஸ் அழைக்கிறதோ ? இப்படி நினைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் வெங்கய்யா.
தான் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு இல்லாமலிருந்தது.
‘‘வெங்கய்யா காரு, சீக்கிரம் வா...’’
‘‘எதுவும் பேசாமல் கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல வெங்கய்யா தேடி வந்த மனிதனுக்குப் பின்னால் நடந்தான்.
போகும் வழியில் கிராமத்திற்கு வெளியே ஒரு மரத்தின் கீழேயிருந்த சௌடம்மம தேவியின் சிலையின் முன்னால் அவன் நின்றான். அவன் தேவியையே வெறித்துப் பார்த்தான். தேவியின் தலையில் சில நாட்களுக்கு முன்பு பலி தந்த ஆட்டு இரத்தம் காய்ந்து போய் காணப்பட்டது. இப்போது அவன் பலி கொடுத்தது தன்னுடைய மனைவியை... வெங்கம்மாவை... தன்னுடைய எல்லாமுமாக இருந்த வெங்கம்மாவை.
‘‘பழிக்குப் பழி வாங்குற கடவுளாகவும், கோபம் கொண்ட மகா காளியாகவும், கிராமத்தைக் காத்து நிக்கிற தேவியாகவும் இருக்குற நீ என் வெங்கம்மாவை முழு நிர்வாணமாக்கி கிராமத்து வீதிகள் வழியா நடத்திக் கொண்டு போனப்போ... அவளை அவமானப்படுத்தினப்போ... மவுனமா இருந்தே... கண்களை மூடிக்கிட்டு இருந்தே, இல்லியா ? இப்போ என் வெங்கம்மாவைக் காணோம். அவ எங்கே போனா ? நீ ஒரு சிலை சாதாரண சிலை... உன்னால் பார்க்க முடியுமா ?- பேசத்தான் முடியுமா ?’’
வெங்கய்யா தேவியின் மீது காரித் துப்பினான். தேவியை மிதிப்பதற்காக காலைத் தூக்கிய போது உடனிருந்த ஆள் வந்து பிடித்து அவனை அதைச் செய்ய விடாமல் தடுத்தான்.
‘‘என்ன செய்யிறீங்க காரு ?’’
வெங்கய்யா எதுவும் பேசாமல் தலையைக் குனிந்தவாறு அந்த ஆளைப் பின்பற்றி நடந்தான். போகும்போது வெங்கய்யா மெதுவான குரலில் என்னவோ முனகிக் கொண்டே இருந்தான்.
எஜமானின் வீட்டைத் தாண்டியிருக்கும் ஆலமரத்திற்குக் கீழே கிராமத்து மக்கள் ஏராளமாக கூடி நின்றிருந்தார்கள். உயரமான மேடை மீது எஜமான் உட்கார்ந்திருந்தார். அவருக்கருகில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.
வெங்கய்யாவைப் பார்த்ததும், அங்கு ஒருவித சலசலப்பு உண்டானது. அவன் எல்லோரையும் பார்த்தான். எஜமானையும், போலீஸ்காரனையும் பார்த்து தலையைக் குனிந்து வணங்கினான். தொடர்ந்து மற்றவர்களுடன் போய் நின்று கொண்டான்.
ஆலமரத்தின் இலைகள் காற்றில் விழுந்து ஓடி ஓசை உண்டாக்கின. மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தன. மரத்திற்குக் கீழே வாயை மூடிக் கொண்டு கிராமத்து மக்கள் நின்றிருந்தனர்.
‘‘வெஙகய்யா உன் பொண்டாட்டியை எங்கே ?’’
‘‘நாகு தெலிது சாமி...’’
அடுத்த நிமிடம் போலீஸ்காரனின் குரல் உயர்ந்தது.
‘‘நீ அவளை எங்கேயோ மறைச்சு வச்சிருக்கே !’’
அதைக் கேட்டு வெங்கய்யாவின் மனதிற்குள் நெருப்பு பற்றியெறிந்தது. கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. உள்ளே சிங்கங்கள் கர்ஜித்தன.
‘‘எஜமானோட சகோதரி இன்னொருத்தன் கூட வீட்டை விட்டு ஓடுறதுக்கு உன் பொண்டாட்டி உதவியா இருந்திருக்கா. உன் மனைவி பேர்ல அரெஸ்ட் வாரண்ட் வந்திருக்கு...’’
வெங்கய்யா எதுவும் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.
நாராயணன் என்ற அந்த இளைஞன் ஆட்களுக்கு மத்தியிலிருந்து எழுந்தான்.
‘‘சாமி... பாவம் இந்த வெங்கய்யாவோட பெண்டாட்டியை மூணு நாட்களுக்கு முன்னாடி குண்டர்கள் முழு நிர்வாணமா ஆக்கி தெருத் தெருவா அழைச்சிட்டு போனாங்க...’’
‘‘நீ பேசாம இருக்கிறியா என்ன ?’’ - போலீஸ்காரன் எச்சரித்தான்.
‘‘உங்களுக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லைன்னா கிராமத்து ஆளுங்கக்கிட்ட கேட்டு பாருங்க, சாமி...’’
போலீஸ்காரன் எஜமானைப் பார்த்தான்.
எஜமான் சொன்னார் :
‘‘கேட்டு பாரு சாமி...’’
போலீஸ்காரன் கிராமத்து மனிதர்களைப் பார்த்து கேட்டான் :
‘‘இந்த இளைஞன் சொல்றது உண்மையா ?’’
ஒரே அமைதி.