அடிமை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7015
கேட்டில் கார் வந்து நின்றது. நான் தலையை உயர்த்திப் பார்த்தேன். சில்க் பேண்ட்டும் சில் புஷ்கோட்டும் பொன் நிறத்தால் ஆன கைக்கடிகாரமும் ஷுவும் அணிந்த ஒரு மனிதன் காரை விட்டு இறங்கினான். அவன் டிரைவரிடம் என்னவோ சொல்லிவிட்டு கேட்டைத் தாண்டி உள்ளே வந்தான்.
நான் வராந்தாவிலிருந்த வாசலுக்கு வந்தேன். ஆச்சரியப்பட்டு நின்று விட்டேன். என்னுடைய கையைப் பிடித்து குலுக்கியவாறு அவன் கேட்டான்.
“என்னை ஞாபகம் இல்லியா?”
நான் பதிலெதுவும் கூறவில்லை. நான் என்ன பதில் சொல்வது? நான் அவனை மறந்து விட்டேன் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், கேட்டைக் கடந்து வந்தபோது நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். ஞாபகம் வந்ததால் தான் நான் ஆச்சரியப்பட்டு நின்றதே. அவன் என்னுடைய வீட்டைத் தேடி வருவான் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை.
அவன் ஏறி வந்த அந்த ஸெடான் கார் திரும்பிப் போய்விட்டிருந்தது. முகத்தில் சற்று பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு அவன் சொன்னான்.
“என்னை நீங்கள் மறந்திருந்தீங்கன்னா, அதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. நான்...”
அவனின் கையைப் பிடித்தவாறு நான் சொன்னேன்.
“ஞாபகம் இருக்கு. வரணும்...”
நாங்கள் வராந்தாவிற்கு வந்தோம். ஒருவரையொருவர் பார்த்தவாறு அமர்ந்தோம். நான் அவன் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தேன். அவனிடம் பெரிய அளவில் மாறுதல்கள் உண்டாகி விட்டிருந்தன. நான் பொறாமையுடன் பார்த்த கண்களுக்குச் சொந்தக்காரன் அவன். அன்று அந்தக் கண்களில் உணர்ச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது ஒளியற்று மங்கிப் போய் இருந்த உயிரோட்டமில்லாத இரண்டு விழிகளை நான் பார்த்தேன். சிறகற்று, துடித்துத் துடித்து கடைசியில் எந்தவித சலனமும் இல்லாமல் நடக்கும் உயிரிலிருந்து தெறித்த இரத்தத்தைப் போல அந்தக் கண்களில் இரத்தம் தேங்கி நின்றிருந்தது.
என்னுடைய முகத்தைப் பார்க்காமலே, தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டையும், தீப்பெட்டியையும் எடுத்தவாறு அவன் சொன்னான்.
“என்னை எல்லாரும் மறந்துட்டீங்க... இல்லாட்டி, எதற்கு என்னை ஞாபகப்படுத்திப் பார்க்கணும்? கோடிக்கணக்கான பேர் பிறக்கிறாங்க. கோடிக்கணக்கான பேர்களைப் பிறக்க வைக்கிறாங்க. யார் யாரை ஞாபகத்துல வச்சிக்கணும்? எதற்காக ஞாபகத்துல வச்சிருக்கணும்?”
அந்தக் கண்களின் ஆழத்தில் சிறகற்று அசையாமல் விழுந்து கிடந்த உணர்ச்சிப் பறவை இலேசாக துடிப்பது போல் எனக்குத் தோன்றியது.
அவன் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எனக்கு நேராக நீட்டினான். நான் நன்றியுடன் அதை வேண்டாமென்று சொன்னேன். அவன் ஒரு சிகரெட்டை எரிய வைத்தான். நான் வெற்றிலை போட ஆரம்பித்தேன்.
ஒருவகை ஈடுபாட்டுடன் புகைபிடித்துக் கொண்டிருந்த அவன் ஆகாயத்தையே உற்றுப் பார்த்தான். அந்த துடிப்பற்ற கண்கள் வழியாக ஆத்மாவிற்குள் நெளிந்து இறங்க முயற்சித்துக் கொண்டிருந்த அவன் மவுனமாக அமர்ந்திருந்தான்.
எதையோ தேடிப்பிடிப்பதற்காக அவன் கடந்த காலத்தின் அலைகளில் நீந்திக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
“அந்தக்காலம்... அந்தக்காலம்...” -இப்படி என்னவோ அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அந்தக் காலத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்போது அவன் மாணவனாக இருந்தான். அப்போது நான் யாராக இருந்தேனென்றும், என்னவாக இருந்தேனென்றும் எனக்கே நிச்சயமாகக் கூற முடியவில்லை. மாணவனாக இருந்த அவன் உணர்ச்சிகரமான ஒரு கவிஞனாகவும், திறமையான ஒரு பேச்சாளனாகவும் இருந்தான். அன்று அவன் மாணவர்களின், குறிப்பாகச் சொல்லப்போனால் மாணவிகளின் மரியாதைக்குரிய ஒரு மனிதனாக இருந்தான். மேடையில் ஏறி கவிதை பாடிய அந்த இளம் நட்சத்திரத்தை ஆசிரியர்கள் மனப்பூர்வமாகப் பாராட்டினர்.
விலை குறைவாக உணவு கிடைக்கும் ஒரு ஹோட்டலில் தான் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். நாங்கள் இருவருமே ஏழைகளாக இருந்தோம்.
நாங்கள் இருவரும் நண்பர்களானோம். எங்களின் நட்பு ஒருவரையொருவர் மதிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், எங்கள் பழக்க வழக்கத்திலும், வாழ்க்கை மீது கொண்ட பார்வையிலும், குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. போராட்டங்கள் என்றால் ஆவேசமாக கோதாவில் இறங்கும் நானும், போராட்டங்களில் விலகி நின்று நட்பு கீதம் பாடும் அவனும் ரசிக்கக்கூடிய முறையில் ஒருவருக்கொருவர் பலமாக வாதிட்டிருக்கிறோம்.
அவன் தன்னுடைய அறைக்கு சில நாட்கள் என்னை அழைப்பதுண்டு. என்னுடைய அறைக்கு அவனை அழைக்க, அன்று எனக்கென்று ஒரு அறை இல்லை என்பதே உண்மை. சில நேரங்களில் என்னுடைய ஆவேசமும், அட்டகாசங்களும் அவனுக்கும் பக்கத்து அறைகளில் தங்கியிருந்த அவனுடைய நண்பர்களுக்கும் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. ஒருநாள் கவிதையைப் பற்றி நாங்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நான் செய்த விமர்சனங்கள் மிகவும் காரமுடையதாக இருந்தன. வாழ்க்கையைத் தொடாத, ஆகாயத்தைத் தாண்டி வேறெங்கோ இருக்கும் கற்பனை உலகத்தில் மலரின் மணத்தைத் தேடி பறந்து திரியும் வண்டின் பாட்டினைப் பாடிக் கொண்டிருக்கும் கவிஞர்களை நான் பலமாகத் தாக்கிப் பேசினேன். அவனுடைய மணிநாதம் போன்ற இனிய குரலை என்னுடைய ஆவேசமான குரல் இருந்த இடம் தெரியாமல் ஆக்கியது. மூச்சுவிட முடியாத அளவிற்கு ஒரு திணறல் உண்டானதைப் போல அவன் கட்டிலில் அமர்ந்தவாறு இப்படியும் அப்படியுமாய் நெளிந்தான்.
“ஆகாயத்தின் இருட்டைப் பார்த்து ஊளையிடுகிற நாய்கள்!” என்று காட்டமாக கூறியவாறு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
அதற்குப் பிறகு இருபத்து நான்கு வருடங்கள் கடந்தோடி விட்டன.
தேர்வுகளில் பெரிய அளவில் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றான். அவன் ஒரு பட்டதாரியாக ஆனான். அதற்குப் பிறகு அவன் பல பெரிய அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களின் கவனத்தில் படும் மனிதனாக ஆனான். ஒரு மிகப்பெரிய அதிகாரியின் அழகான மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவன் உயர்கல்வி கற்பதற்காக இங்கிலாந்திற்குச் சென்றான். பெரிய பட்டங்கள் பலவற்றையும் பெற்றுக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தான். அவன் சில நாட்களில் ஒரு பெரிய அதிகாரியாக மாறினான். உயர்வான நிலையில் இருக்கும் அந்த அதிகாரியின் மகளை ஒரு நாள் திருமணமும் செய்து கொண்டான்.
அவனுடைய தொழில் ரீதியான உயர்வு ஆச்சரியப்படும் விதத்தில் படு வேகத்தில் நடந்தது. மிகக் குறுகிய காலத்தில் அவன் அரசாங்கத்தின் ஒரு பிரிவுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான். அவனுடைய தொழில் ரீதியான உயர்வுகளுக்கு அவனுடைய மனைவி உதவியாக இருந்தாள் என்று அப்போது பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது எனக்கு தெரியாது.