விராஜ்பேட்டையிலிருந்து வந்த பெண் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6659
சொல்லப்போனால்- எழுத்தச்சனின் இறுதி ஆசை எவ்வளவோ சாதாரணமானது! சதீ நம்பியாரின் கையைச் சற்று தொடவேண்டும் என்று மட்டும்தானே அவர் ஆசைப்படுகிறார்? இன்னும் சொல்லப்போனால்- அதைவிட அதிகமாகவே எழுத்தச்சன் வேறு ஏதாவது ஆசைப்பட்டிருக்கலாமே!
நான் தன்னம்பிக்கையுடன் பி.கெ. நம்பியாரின் மாளிகையை நோக்கி நடந்தேன். அப்போது மஞ்சள் வெயில் படிப்படியாக குறையத் தொடங்கியிருந்தது. எப்படி குறையத் தொடங்கியிருந்தது? கொன்றை மலர்கள் வாடுவதைப்போல குறைய ஆரம்பித்திருந்தது.
ஒற்றையடிப் பாதையிலிருந்து தார்போட்ட பாதையில் கால் வைத்தபோது, பின்னால் மூச்சுச் சத்தம் கேட்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தால், மாஸ்டர் என்னுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.
“நீ தனியாகப் போக வேண்டாம், ஆனந்தா. அந்த மனிதர் ஏதாவது செய்துவிட்டால்...? உனக்கும் ஒரு மனைவியும் மகளும் இருக்கிறார்களே?”
அஸ்ஸநாரின் பெட்டிக் கடைக்கு முன்னால் சென்றபோது, ஒரு பீடியை வாங்கிப் புகைத்தால் என்ன என்று தோன்றியது. ஆனால், எழுத்தச்சனைப் பற்றிய கவலை என்னை அந்த சிந்தனையிலிருந்து விலக்கியது. மூன்றாம் எண் சாராயக் கடைக்கு முன்னால் சென்றபோது, அங்கு நுழைய வேண்டும்போல தோன்றாமலில்லை. அப்போதும் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் எழுத்தச்சனைப் பற்றிய சிந்தனை என்னை அதிலிருந்து பின்னோக்கி இழுத்தது. நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்தேன். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இப்படி வேகமாக நடப்பதற்கான சக்தியை என்னுடைய கால்களுக்கு அளித்ததற்காக நான் முத்தப்பனுக்கு நன்றி கூறினேன்.
அதோ... சற்று தூரத்தில் மரங்களுக்கு மத்தியில் தெரிவது என்ன?
நம்பியாரின் மாளிகை!
அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு மாளிகை எங்களுடைய ஊரில் வேறொன்றுமில்லை. அந்த மாளிகை கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஊர்க்காரர்கள் பாதையில் வந்து நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாட்டுச் சந்தை இருக்கும் நாட்களில் கிழக்கு திசையிலிருந்து வரும் கிராமத்து மனிதர்கள் மாடுகளையும் கன்றுகளையும் விற்றுவிட்டும் வாங்கிக்கொண்டும் திரும்பி வரும்போது, மாளிகையைப் பார்ப்பதற்காக அங்கு சென்று நின்று கொண்டிருப்பார்கள். அந்த கிராமத்து ஆட்கள் தங்களின் கைகளில் மாடுகளையும் கன்றுகளையும் கட்டும் கயிறுகளுடன் வாயைப் பிளந்து கொண்டு அந்த இடத்தில் பொழுது சாயும் நேரம் வரை நின்று கொண்டிருப்பார்கள்.
நாராயணன் மாஸ்டர் சற்று தூரத்தில் விலகி நின்று தன் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்தார். அவர் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். வியர்வையில் அவர் நனைந்து விட்டிருந்தார்.
“நீ பங்களாவிற்குச் செல். நான் இதோ... இந்த மரத்தடியில் நின்று கொஞ்சம் காற்று வாங்கிக் கொள்கிறேன். ஹா... என்ன வெப்பம்!”
மாஸ்டர் வானத்திலிருந்த மழை மேகங்களைப் பார்க்க ஆரம்பித்தார். எடை குறைந்த சில மேகங்கள் வானத்தில் ஓரத்தில் மெதுவாக பரவிக் கொண்டிருந்தன.
“யார் அது?” காக்கி சட்டையும் ட்ரவுசரும் அணிந்திருந்த ஒரு ஆள் கேட்டிற்கு அருகில் வந்தான். வேலைக்காரனாகவோ தோட்டக்காரனாகவோ இருக்க வேண்டும். அவன் கேட்டான்:
“உனக்கு என்னடா வேணும்?”
“அய்யாவைக் கொஞ்சம் பார்க்கணும்.”
“இப்போ பார்க்க முடியாது...”
என்னுடைய கிழிந்த காலரைக் கொண்ட சட்டையையும் அழுக்கடைந்த வேட்டியையும் பார்த்த காரணத்தால் இப்படி அதிகார தொனியில் பேசினான். எது எப்படி இருந்தாலும், அவனுடன் நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமில்லை. இரக்க குணம் கொண்ட மனிதரான எழுத்தச்சன் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார். நான் காக்கி ஆடைகள் அணிந்த மனிதனின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்காமல் முன்னோக்கி நடந்தேன். அவன் என்னைத் தடுப்பதற்கு முயன்றான். அதற்கான பலனை அவன் அனுபவிக்கவும் செய்தான்.
“திருடன்... அய்யோ... திருடன்...”
தரையிலிருந்து தட்டுத் தடுமாறி வேகமாக எழுந்து அவன் உரத்த குரலில் கத்தினான்.
காலின்மீது காலைப் போட்டு ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பியார் ஆரவாரத்தைக் கேட்டு என்னை நோக்கிப் பார்த்ததும், நான் தலைகுனிந்து வணங்கினேன். திருடர்கள் அப்படியெல்லாம் தலைகுனிந்து வணங்கமாட்டார்கள் என்ற விஷயம், நல்ல படிப்பையும் உலக அனுபவங்களையும் கொண்டிருக்கும் அவருக்கு நன்கு தெரிந்திருக்குமே! அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- நம்பியாரின் முகத்தில் எந்தவொரு பதைபதைப்பும் தெரியவில்லை.
அகலம் அதிகமான, கருப்பு நிற கரை போடப்பட்டிருந்த வேட்டியையும் ஜிப்பாவையும் நம்பியார் அணிந்திருந்தார். அவருடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்க மாலை சாயங்கால வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேணும்?”
நம்பியார் நாற்காலியில் சற்று அசைந்து உட்கார்ந்தார். அவர் என்னிடம் வராந்தாவிற்கு வரச் சொல்லவோ அமரச்சொல்லவோ இல்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தமாகவும் இல்லை. ஆனந்தன் யார்? பி.கெ. நம்பியார் யார்? அவர் எவ்வளவோ பெரிய ஆள். ஆயிரம் ஆனந்தனைவிட அவர் ஒருவருக்கு இருக்கும் மதிப்பு அதிகமாயிற்றே!
எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?
நான் தயங்கிக் கொண்டு நின்றிருந்தேன்.
பிறகு மனம் முழுவதும் முத்தப்பனை நினைத்துக் கொண்டே நான் ஒரே மூச்சில் எல்லா விஷயங்களையும் கூறி முடித்து விட்டேன். நம்பியார் முழு விஷயங்களையும் மிகவும் கவனம் செலுத்தி கேட்டார். அவருடைய முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுகளும் தெரியவில்லை.
“ஸாரி... மிஸ்டர்...” அவர் சொன்னார்: “இந்த அளவிற்கு பெரிய ஆசையை மனதில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது என்று எழுத்தச்சனிடம் கூறுங்கள். நீங்கள் போகலாம்.”
நம்பியார் பத்திரிகையை விரித்து வாசிப்பதைத் தொடர்ந்தார்.
“இறப்பதற்கு முன்னால் இந்தச் சிறிய ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லையென்றால், எழுத்தச்சனின் ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்காது சார்.”
“ஆன்மா என்ற ஒன்று இல்லவே இல்லை. விஞ்ஞானம் அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனால் மோட்சம் அது இது என்று பிரச்சினையே இல்லை. நீங்கள் புறப்படுகிறீர்களா? இல்லாவிட்டால் நானே வெளியேற்றிவிட வேண்டுமா?”
“சார்...”
நான் குனிந்து அவருடைய பருமனான, சிவந்த பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
“கடவுளை நினைத்து...”
“கடவுளும் இல்லை... விஞ்ஞானம் அதை தெளிவுபடுத்தியிருக்கிறது.”
நம்பியார் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
அவருடைய தங்கத்தால் செய்யப்பட்ட பற்கள் மாலை நேர வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
நம்பியாரின் மனம் மாறும் என்ற நப்பாசையுடன் மேலும் சிறிது நேரம் அங்கேயே நான் நின்றிருந்தேன். அதனால் எந்தவொரு பலனும் உண்டாகவில்லை. அவர் என்னை கவனிக்கக்கூட செய்யாமல், பத்திரிகை வாசிப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இனிமேலும் அங்கு நின்று கொண்டிருப்பது வீண் என்பதைப் புரிந்து கொண்டதும் நான் அங்கிருந்து நகர்ந்தேன்.