Lekha Books

A+ A A-

வைரமாலை - Page 4

vairamaalai

வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அவன் தன்னிடமிருந்த சொத்து முழுவதையும் அடமானமாக வைத்தான். தன்னுடைய கையெழுத்துக்களை அவன் எல்லா இடங்களிலும் தயங்காமல் போடடான். எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வு காரணமாக தான் செய்யும் காரியங்களில் எது நல்லது, எது கெட்டது என்பதை யோசித்துப் பார்க்கக்கூட அவன் முயற்சி செய்யவில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் கடுமையான துயரத்தில் மாட்டிக்கொண்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சகல விதமான கஷ்டங்களையும் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எப்படியோ அந்த நகைக்கடையின் சொந்தக்காரரிடம் 36,000 ஃப்ராங்க் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் அந்தப் புதிய மாலையைத் தன் கைகளில் வாங்கினான்.

அவனுடைய மனைவி அந்தப் புதிய மாலையுடன் திருமதி ஃபாரஸ்டியரின் வீட்டிற்குச் சென்றாள். “எனக்கு இந்த நெக்லஸ் முன்பே தேவைப்பட்டது. நீங்க இந்த அளவுக்கு திருப்பித் தர தாமதித்திருக்க வேண்டாம்” - வெறுப்பு கலந்த குரலில் திருமதி ஃபாரஸ்டியர் திருமதி லாயிஸலிடம் கூறினான்.

ஆனால், லாயிஸல் பயந்ததைப்போல அவளுடைய சினேகிதி அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை. அவளுடைய பழைய மாலைக்கு பதிலாக தான் புதிய ஒரு மாலையை விலைக்கு வாங்கியிருக்கும் விஷயம் தெரிந்தால் அவள் என்ன நினைப்பாள்? அவள் என்ன கூறுவாள்? அவள் தன்னை ஒரு ஏமாற்றுக்காரி என்று நினைப்பாளோ? - இப்படிப் பலவிதப்பட்ட சிந்தனைகள் அவளுடைய மனதிற்குள் ஓடின.

ஆடம்பரமான உலகத்தைவிட்டு, வாழ்க்கையின் தேவைகளைப்பற்றி திருமதி லாயிஸல் இப்போது புரிந்துகொண்டிருந்தாள். அவள் தன் பங்கை சரிவர நிறைவேற்றினாள். அந்த மிகப்பெரிய கடனைத் தீர்க்க வேண்டுமே! அவள் அதை எப்படியும் கொடுத்துத் தீர்ப்பாள் என்பது வேறு விஷயம். வேலைக்காரியை அவள் வேலையிலிருந்து போகச் சொல்லிவிட்டாள். வசித்துக் கொண்டிருந்த வீட்டைவிட்டு வெளியேறி ஒற்றை அறை மட்டுமே இருந்த வேறொரு வீட்டிற்கு அவர்கள் தங்களின் இருப்பிடத்தை மாற்றினார்கள். வீட்டு வேலைகளின் கடுமையை அவள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். ரோஜாப் பூக்களைப்போன்ற தன்னுடைய நகங்களால் கரி படிந்த முரட்டுத்தனமாக பாத்திரங்களை கழுவ அவள் பழகிக்கொண்டாள். அழுக்கு ஆடைகளையும் உள்ளாடைகளையும் சலவை செய்து அவள் கொடியில் வரிசையாக உலர விட்டாள். வீட்டிற்குள்ளிருந்த குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து, அவள் வெளியே கொண்டுபோய் போட்டாள். வெளியிலிருந்து நீர் முகந்து கொண்டுவந்தாள். நீர் நிறைக்கப்பட்ட அந்தப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறும்போது அவள் மேலும்மூச்சு கீழ்மூச்சு விட்டாள். வறுமையில் உழலும் பெண்கள் அணியக்கூடிய ஆடைகளை அவள் அணிய ஆரம்பித்தாள். ஒரு பெரிய கூடையைக் கையில் வைத்துக்கொண்டு மளிகை சாமான்கள் விற்பவனிடமும் காய்கறிகள் விற்பவனிடமும் பொருட்களுக்காக அவள் பேரம் பேசினாள். ஒவ்வொரு மாதமும் புதுப்புது விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டியதிருந்தது. வேறு சில கடன்களைத் தீர்ப்பதற்காக அவர்கள் அதைச் செய்துதான் ஆக வேண்டும். காலையிலிருந்து மாலைவரை இருக்கக்கூடிய வழக்கமான வேலைக்கு மேல், அவளுடைய கணவன் சில கடைகளில் கணக்கு எழுதுவதற்காகப் போனான். அதுவும் போதாதென்று இரவு நேரங்களில் உறங்காமல் விழித்திருந்து ஒரு பக்கத்திற்கு ஐந்து ஸெனஸ் என்ற கணக்கில் அவன் சில தாள்களைப் பிரதி எடுத்துக் கொடுத்தான். சுமார் பத்து வருடஙக்ள் இந்த வகையில் அவர்களின் வாழ்க்கை ஓடியது.

அந்தப் பத்து வருடங்களின் இறுதியில் வட்டிக்குக் கடன் கொடுத்தவர்களின் அசல், வட்டி, கூட்டு வட்டி எல்லாவற்றையும் அவர்கள் கொடுத்து முடித்திருந்தார்கள்.

திருமதி லாயிஸல் இப்போது ஒரு கிழவியைப்போல ஆகிவிட்டிருந்தாள். வறுமையின் கொடும்பிடியில் சிக்கிக் கிடக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப்போல முதிர்ச்சியும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு பெண்ணாக அவள் மாறிவிட்டிருந்தாள். தலைமுடியை அழகாக வாரிக்கட்டும் வழக்கமெல்லாம் அவளிடமிருந்து விடைபெற்றிருந்தன. ஆடைகள் நைந்துபோய் விட்டிருந்தன. கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. அவள் உரத்த குரலில் பேசினாள். பெரிய பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து தரையைக் கழுவி சுத்தம் செய்தாள். தன் கணவன் அலுவலகத்திற்கு போய்விட்டால், அபூர்வமாக பயப்படும் சில வேளைகளில், சாளரத்திற்கு அருகில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பழைய நடன விருந்தைப் பற்றியும், அன்று தான் வசீகரமான தோற்றத்தில் இருந்ததையும் அவள் நினைத்துப் பார்ப்பாள். அந்தக் கழுத்து மாலை மட்டும் காணாமற் போகாமல் இருந்திருந்தால், அவளுடைய நிலை எப்படியிருந்திருக்கும்? யாருக்குத் தெரியும்? வாழ்க்கை என்பது எந்த அளவிற்கு விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. எப்படிப்பட்ட மாறுதல்கள் எல்லாம் வாழ்க்கையில் நடக்கின்றன! இவ்வளவு ஏன்...? ஒரு ஆளை அழிக்கவோ காப்பாற்றவோ ஒரு சாதாரண விஷயம் போதும்!

ஒரு ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வாழ்க்கையின் அன்றாடச் செயல்களிலிருந்து சற்று விடுபட்டு, சாம்பஸ் எல்ஸுக்கு நடந்து போய்விட்டு வரலாம் என்று போன அவள், சற்று தூரத்தில் ஒரு சிறு குழந்தையுடன் நடந்துபோய்க கொண்டிருந்த அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டாள். திருமதி ஃபராஸ்டியர்தான் அது. அந்த  அழகும் இளமையும் வசீகரத் தனிமையும் அவளிடமிருந்து போகாமல் இன்னும் அப்படியே இருந்தன. திருமதி லாயிஸல் அதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துபோய் விட்டாள். அவளிடம் பேசினாள் என்ன? அதனால் என்ன... கட்டாயம் பேசலாமே! அவளுக்குத் தரவேண்டியதைத்தான் கொடுத்தாகிவிட்டதே! இனி எல்லாவற்றையும் மனம் திறந்து கூறலாமே! பிறகு எதற்குப் பேசாமல் இருக்க வேண்டும்?

அவள் அந்தப் பெண்ணின் அருகில் சென்றாள். “குட்மார்னிங் ஜீன்.”

அந்த சினேகிதிக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. இந்த அளவிற்கு நெருக்கத்தைக் காட்டி தன்னிடம் பேசும் அந்தப் பெண்ணை திருமதி ஃபாரஸ்டியருக்கு யார் என்று புரியவில்லை. அவள் சந்தேகத்துடன் பார்த்தாள். “மேடம், உங்களை யார் என்று எனக்குத் தெரியலையே! ஒருவேளை நீங்கள் என்னை வேற யாரோ என்று நினைத்து...” - என்றாள் அவள்.

“இல்ல... நான் மெட்டில்டா லாயிஸல்”

அடுத்த நிமிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் ஒரு உரத்த குரல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. “ஓ... என் மெட்டில்டா... உனக்கு என்ன ஆச்சு? என்ன - இப்படி ஒரேடியா மாறிட்டே!”

“சரிதான்... அன்னைக்கு நாம பார்த்து பிரிந்த பிறகு, எனக்குக் கஷ்டங்கள் நிறைந்த நாட்களாயிருச்சு... உண்மையாக சொல்லப்போனால், கடுமையான அனுபவங்கள் நிறைந்த நாட்கள்... அதுக்கெல்லாம் காரணம் நீதான்.”

“நான் காரணமா? அது எப்படி?”

“கமிஷனர் ஏற்பாடு செய்த நடன விருந்தில் கலந்துகொள்வதற்காக வைரக்கற்கள் பதிக்கப்பட்ட உன்னோட கழுத்து மாலையை நான் கடனாக வாங்கியது உனக்கு ஞாபகத்துல இருக்கா?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel