வைரமாலை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7263
அந்தப் பெண்ணின் மனதில் தான் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம் என்ற திருப்தி உண்டானது. ஆனந்தம் அங்கு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வேறு மூன்று பெண்களின் கணவர்களுடன் அவளுடைய கணவனும் அரைத் தூக்கத்தில் இருந்தான்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது தங்களுடன் கொண்டு வந்திருந்த சாதாரண உடைகளை அவன் அவள்மீது போர்த்திவிட்டான். அந்த ஆடைகளின் கேவலமான தன்மை நடன ஆடைகளின் பகட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனியாகத் தெரிந்து, அவள் அதை நன்கு உணர்ந்தாள். விலை மதிப்புள்ள உரோமத்தாலான ஆடைகளை அணிந்திருந்த வசதி படைத்த பெண்களுக்கு முன்னால், தன்னுடைய வறுமை நிலையை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அவள் வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டாள். லாயிஸல் அவளைப் பிடித்து நிறுத்தினான். “நில்லு... நடந்து போனால் குளிரும். நாம ஒரு வண்டியை அழைப்போம்” என்றான் அவன்.
ஆனால், அவன் கூறியதை அவள் காதிலேயே வாங்கவில்லை. வேக வேகமாக அவள் படிகளில் இறங்கினாள். சாலையை அடைந்தபோது, ஒரு வாகனம்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு வண்டிக்காக அவர்கள் அங்கு பல இடங்களிலும் தேடினார்கள். சற்று தூரத்தில் நின்றிருந்த ஒரு வண்டிக்காரனை அவர்கள் உரத்த குரலில் அழைத்துப் பார்த்தார்கள்.
குளிரில் நடுங்கிக் கொண்டு ஸீல் நதிக்கு நேராக அவர்கள் நடந்தார்கள். இறுதியில் இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சுற்றிக் கொண்டிப்பவர்களுக்காக இருக்கும் தரித்திரத்தின் அடையாளமான அந்தச் சிறிய வண்டி அவர்களுக்குக் கிடைத்தது.
அந்த வண்டி அவர்களை ஏற்றிக்கொண்டு மார்ட்டியர் தெருவில் இருக்கும் அவர்களின் வீட்டு வாசலில் போய் நின்றது. மிகவும் களைத்துப் போய்க் காணப்பட்ட அவர்கள் வீட்டிற்குள் சென்றார்கள். அவளைப் பொறுத்தவரையில் எல்லா விஷயங்களும் முடிந்துவிட்டன. ஆனால், காலையில் பத்து மணிக்கு அவன் தன்னுடைய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே!
கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவள் தன்னுடைய உடலில் அணிந்திருந்த மேலாடைகளைக் கழற்றினாள். நடன ஆடைகளுக்குள் மறைந்திருந்த தன் அழகை இன்னொரு முறை பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். திடீரென்று அவள் உரத்த குரலில் கத்தினாள். அவளுடைய கழுத்தில் இருந்த அந்த நெக்லஸ் காணாமல் போயிருந்தது.
“என்ன ஆச்சு?” - ஆடையை மாற்றிக் கொண்டிருந்த அவளுடைய கணவன் கேட்டான்.
“என்... என்... திருமதி. ஃபாரஸ்டியரின் நெக்லெஸ்ஸைக் காணோம்...” - பைத்தியம் பிடித்ததைப்போல அவள் சொன்னாள்.
பதைபதைத்துப் போய் அவன் எழுந்து நின்றான். “என்ன? எப்படி நடந்தது அது? அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே!” என்றான் அவன்.
ஆடைகளின் மடிப்புகளிலும் பாக்கெட்களிலும் வேறு இடங்களிலும் அவள் தேடிப் பார்த்தாள். அவர்களால் அந்த நெக்லெஸ்ஸைக் கண்டுபடிக்க முடியவில்லை.
“அங்கேயிருந்து புறப்படுறப்போ அது உன் கழுத்துல இருந்ததுன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?” - அவன் கேட்டான்.
“ம்... நாம வெளியே வர்றப்போ வாசல்ல வச்சு நான் பார்த்தேன். அப்போ அது என் கழுத்துலதான் இருந்தது.”
“நாம சாலையில நடந்து வர்றப்போ அது கீழே விழுந்திருந்தால், அது விழுந்த சத்தம் நமக்குக் கேட்டிருக்கும். ஒருவேளை அந்த வண்டிக்குள் அது விழுந்திருக்கலாம்.”
தாங்க மடியாத மனக் கவலையுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இறுதியில் லாயிஸல் ஆடை அணிந்துகொண்டு வெளியே போனான்: “நாம வந்த பாதையில் நான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன்.”
அவன் வெளியேறினான். ஆர்வங்களும், யோசனைகளும் இழக்கப்பட்டு, படுக்கையில் படுக்க முடியாமல் அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் போய் கால்களை நீட்டிக்கொண்டு படுத்தாள்.
ஏழு மணி ஆகும்போது அவளுடைய கணவன் திரும்பி வந்தான். அவனுக்கு அந்தக் கழுத்து மாலை கிடைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களிலும் அவன் விசாரித்துப் பார்த்தான். உரிய பரிசு தருவதாகச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தான். சந்தேகமும் யோசனையும் தோன்றிய இடங்களிளெல்லாம் அவன் விசாரித்தான். அதற்காகத் தன்னால் முடிந்ததையெல்லாம் அவன் செய்தான்.
அந்தத் துயர நிகழ்ச்சியை நினைத்து அதிர்ந்துபோய் அன்று முழுவதும் அவள் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சாயங்காலம் வேதனை பரவிய வெளிறிப்போன முகத்துடன் அவளுடைய கணவன் திரும்பி வந்தான். அவனுக்குக் கழுத்து மாலையைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
“அந்தக் கழுத்து மாலையின் ஒரு கண்ணி அறுந்து போயிடுச்சு. அதை சீக்கிரம் சரி பண்ணிகொண்டு வர்றேன்னு உன் சினேகிதிக்கு உடனடியாக ஒரு கடிதம எழுது. இதற்கிடையில் இந்த விஷயத்துக்கு என்ன பண்ணலாம்னு நாம யோசிக்க முடியும்” - அவன் சொன்னான். அவன் கூறியதைப்போல அவள் எழுதினாள்.
அந்த வாரத்தின் இறுதி வந்தபோது அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக இல்லாமற் போனது. அவளைவிட ஐந்து வயது அதிகமான அவளுடைய கணவன் சொன்னான்: “நாம் அந்த நெக்லஸுக்குப் பதிலாக வேறொண்ணை வாங்கிக் கொடுத்திடுவோம்.”
மறுநாளே நகைப்பெட்டியில் எழுதியிருந்த அந்த வியாபாரியைத் தேடி அவர்கள் அந்தப் பெட்டியுடன் சென்றார்கள். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுத்துப் பார்த்துவிட்டு அந்த மனிதர் சொன்னார் : “அம்மா, இந்த நகையை விற்பனை செய்தது நான் அல்ல. நான் கொடுத்தது இந்தப் பெட்டியை மட்டும்தான்.”
அந்த வியாபாரியிடமிருந்து இன்னொரு வியாபாரியிடம்... அங்கிருந்து வேறொரு வியாபாரியிடம்... தங்களுடைய நினைவில் இருந்த அந்த நெக்லஸைப் பற்றிய விளக்கங்களைக் கூறிய அவர்கள் களைத்துப்போய் ஏமாற்றத்துடன், மனதில் ஆழமான பதைபதைப்புடன் அலைந்து திரிந்தார்கள்.
பலேஸ் சாலையில் இருந்த ஒரு நகைக்கடையில் அதைப் போன்ற ரத்தினங்கள் பதித்த ஒரு கழுத்து மாலையை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதன் விலை 40,000 ஃப்ராங்க். அந்த மாலையை 34,000 ப்ராங்கிற்கு அவர்களுக்குத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர். மூன்று நாட்களுக்கு அந்த மாலையை விற்கக்கூடாது என்று அவர்கள் அந்தக் கடைக்காரரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். பிப்ரவரி மாதம் முடியும்போது காணாமற்போன கழுத்து மாலை கிடைத்துவிட்டால், அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவர்கள் சொல்ல, அதற்கு அந்தக் கடைக்காரரும் சம்மதித்தார்.
அவனுடைய தந்தை கொடுத்திருந்த 18,000 ப்ராங்க் மட்டுமே சம்பாத்தியம் என்று அவனிடம் இருந்தது. மீதிப் பணத்தைப் பலரிடமிருந்தும் அவர்கள் கடன் வாங்கினார்கள். ஒருவரிடம் 1000 ஃப்ராங்க் கடன் வாங்கிய அவர்கள் இன்னொருவரிடம் 500 ஃப்ராங்கைக் கடனாக வாங்கினார்கள். அந்த வகையில் சிறு சிறு தொகைகளாக பலரிடமிருந்தும் அவர்கள் கடனாகப் பணத்தை வாங்கிச் சேர்த்தார்கள்.