வைரமாலை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7263
எனக்குப் பொருத்தமான ஆடைகள் இல்லாததால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவது இல்லை. உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது இந்த அழைப்பிதழைக் கொடுத்திடுங்க. அவங்களோட மனைவிமார்களில் யாராவது என்னைவிடத் தகுதிகள் கொண்டவர்களாக இருக்கலாம்.”
மனதில் கவலை உண்டானாலும் அவன் சொன்னான்: “நாம கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே, மெட்டில்டா! நல்ல ஆடைக்கு என்ன விலை வரும் என்று சொல்லு. வேற விசேஷ சந்தர்ப்பங்களிலும் நாம அந்த ஆடைகளை அணியலாமே!”
சிறிது நேரம் சில கணக்குக் கூட்டல்கள் நடத்தி அவள் என்னவோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். பொருளாதார நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த க்ளார்க்கின் வாயிலிருந்து பதட்டமோ, மறுப்போ வந்து விடாத அளவிற்கு ஏற்ற ஒரு தொகையைப் பற்றித்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். இறுதியில் சிறிது சந்தேகம் கலந்த குரலில் அவள் சொன்னாள்: “மிகவும் சரியாகச் சொல்ல என்னால முடியல. கிட்டத்தட்ட 400 ஃப்ராங்காவது வேணும்னு நான் நினைக்கிறேன்.”
‘நான் ரெய்லே’ சமவெளியில், வரப்போகும் கோடை காலத்தில் நண்பர்களுடன் வேட்டையாடப் போவதற்கு ஒரு துப்பாக்கி வாங்க வேண்டும் என்பதற்காக அவன் 400 ஃப்ராங்கை தன்னிடம் சேர்த்து வைத்திருந்தான். 400 ஃப்ராங்க் என்று கேட்டவுடன் அவனுடைய முகம் ஒரு மாதிரி ஆகிவட்டது. எனினும், அவன் சொன்னான்: “அப்படியா? நான் உனக்கு 400 ஃப்ராங்க் தர்றேன். ஆனால், ஆடைகள் மிகவும் அழகாக இருக்கணும்.”
நடன விருந்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. திருமதி. லாயிஸல் மனதில் கவலையுடனும் பதைபதைப்புடனும் இருந்தாள். அவளுக்கு அந்த நிகழ்ச்சியில் அணியக்கூடிய ஆடை தயாராகிவிட்டது. ஒரு சாயங்கால நேரத்தில் அவளுடைய கணவன் அவளிடம் கேட்டான்: “உனக்கு என்ன ஆச்சு? கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே உன்னை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உன் நடவடிக்கைகள் மிகவும் வினோதமா இருக்கே!”
“நகைகள் எதுவும் இல்லாததால் எனக்கு மிகவும் கவலையா இருக்கு. ஒரு சின்ன ரத்தினக்கல் கூட என்கிட்ட இல்ல. என்னைப் பார்க்கும்போதே நான் ஏதோ வறுமையின் பிடியில் இருக்குற ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள்ன்றுது தெரிஞ்சிடும். அந்த விருந்துக்குப் போக எனக்கு ஆர்வமே இல்லை - அவள் சொன்னாள்.
அவள் கூறியதற்கு அவன் சொன்னான்: “நீ இயற்கை தரும் பூக்களைச் சூடக் கூடாதா? இந்த சீசனில் பூக்களுக்கு நல்ல மதிப்பு. பத்து ஃப்ராங்க் கொடுத்தால், உனக்கு இரண்டோ மூன்றோ அழகான ரோஜாப்பூக்கள் கிடைக்கும்.”
அவளுக்கு அது சரியான விஷயமாகப் படவில்லை. “இல்லை...” - அவள் சொன்னாள்: “அங்கு வந்திருக்கும் வசதி படைத்த பெண்களுக்கு நடுவில் அது எனக்கு வெட்கக் கேடான ஒர விஷயமாக இருக்கும்.”
அப்போது அவளுடைய கணவன் துள்ளிக்குதித்துக் கொண்டு சொன்னான்: “நாம எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கோம்! திருமதி. ஃபாரஸ்டியர் உனக்கு மகிவும் நெருக்கமான சினேகிதிதானே? அவங்கக்கிட்ட இருந்து நீ ஏதாவது நகையை கடனா வாங்கினா என்ன? அதற்கான நட்பும் நெருக்கமும் அவங்ககூட உனக்குதான் இருக்கே!
சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு சத்தம் அவளிடமிருந்து அப்போது உயர்ந்தது: “நீங்க சொல்றது சரிதான். அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை.”
மறுநாளே அவள் தன் சினேகிதி திருமதி ஃபாரஸ்டியரின் வீட்டிற்குச் சென்றாள். தன்னுடைய கவலைக்குள்ளாகக் கூடிய தற்போதைய சூழ்நிலையைப்பற்றி அவள் அந்தப் பெண்ணிடம் சொன்னாள். திருமதி ஃபாரஸ்டியர் தன்னுடைய கண்ணாடி அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த, ஒரு பெரிய நகைப் பெட்டியை வெளியே எடுத்தாள். தன் தோழிக்கு முன்னால் அந்தப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “உனக்குத் தேவையானதை நீ தேர்ந்து எடுத்துக்கலாம்.”
ப்ரேஸ்லெட்டுகளும், முத்து பதிக்கப்பட்ட கழுத்தில் இறுகிக் கிடக்கும் மாலைகளும், கலை வேலைப்பாடுகளுடன் பொன்னும் ரத்தினங்களும் கலந்து செய்யப்பட்ட வெனீசிய சிலுவையும் அவளுடைய கண்களில் முதலில் பட்டன. கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவை ஒவ்வொன்றையும் தன் உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டு அது எந்த அளவிற்குத் தனக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று அவள் சோதித்துப் பார்த்தாள். அப்போது அவளுக்கு ஒரு இக்கட்டான நிலை உண்டானது. அவற்றில் தனக்கு எது தேவை என்பதை முடிவு செய்ய அவளால் முடியவில்லை. “உன்கிட்ட இந்த நகைகள் மட்டும்தான் இருக்கா?” - தன் சினேகிதியிடம் கேட்டாள்.
“இல்ல... இன்னமும் இருக்கு. அவற்றில் எதை வேண்டும் என்றாலும், நீ தேர்ந்தெடுத்துக்கலாம். உனக்கு எது பிடிக்கும்னு எனக்குத் தெரியாதே!”
மற்ற நகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கறுப்பு நிற சாட்டின் பெட்டிக்குள் இருந்த அந்த அழகான கழுத்து மாலை அவளை சுண்டி இழுத்தது. அதன்மீது கொண்ட அளவுக்கு அதிகமான ஈடுபாடு அவளுடைய இதயத் துடிப்பை பல மடங்கு அதிகமாக்கியது. அதைத் தன் கைகளில் எடுத்தபோது, அவளுடைய இதயம் நடுங்கியது. அவள் அதைத் தன் கழுத்தில் வைத்துப் பார்த்தாள். அப்போது உண்டான உணர்ச்சிப் பெருக்கில் அவள் சிறிது நேரம் அசையாமல் நின்றுவிட்டாள். சிறிது தயக்கத்துடன் ஆர்வம் கலந்த குரலில் அவள் கேட்டாள்: “இதை ஒரு நாள் மட்டும் நான் அணிய நீ தர முடியுமா? இந்த மாலையை மட்டும்...”
“அதற்கென்ன? தாராளமா நீ இதைக் கொண்டு போகலாம்.”
ஆர்வத்தை அடக்க முடியாமல் அவள் தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள். அதை நினைத்துப் பார்க்க முடியாத பொருளுடன் அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
நடன விருந்து நடைபெறும் நாள் வந்தது. திருமதி. லாயிஸல் அந்த கூட்டத்தில் ஈர்க்கப்படும் மையப்புள்ளி ஆனாள். அங்கு வந்திருந்த பெண்களிலேயே மிகவும் அழகானவளாகவும், உற்சாகம் நிறைந்தவளாகவும், வசீகரம் உள்ளவளாகவும், எப்போதும் புன்னகை மலர்ந்த முகத்தைக் கொண்டவளாகவும் இருந்தவள் திருமதி லாயிஸல்தான். அங்கிருந்த எல்லா ஆண்களும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள், அவளுடைய பெயரைக் கேட்டார்கள். அவர்களில் பலரும் அவளுடன் அறிமுகமாகிக் கொள்ள விரும்பினார்கள். பல ஆட்சிமன்ற உறுப்பினர்களும் அவளுடன் சிறிது நேரம் பேச மாட்டோமா என்று துடித்தார்கள். கல்வி அமைச்சர் அவளைப் பலமுறை பார்த்துக் கொண்டே இருந்தார்.
மிகுந்த வெறியுடன், சந்தோஷத்துடன், தன்னுடைய வெற்றியில் தன்னையே மறந்து, தன் அழகைப் பற்றிய விஷயத்தில் கர்வம் உண்டாக அவள் நடனம் ஆடினாள். ஆண்களின் சந்தோஷ வெளிப்பாடும் பாராட்டுக்களும் அவள்மீது கொண்ட ஈடுபாடும் அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின.