வைரமாலை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7264
விதி செய்த குற்றத்தைப்போல அந்த க்ளார்க்மார்களின் குடும்பத்தில் பிறந்த ஒரு அழகான பெண்ணாக இருந்தாள் அவள். ஒரு பணக்காரனையோ, உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவனையோ காதலிக்கவோ, திருமணம் செய்யவோ விரும்பக் கூடிய அளவிற்குப் பொருளாதார சூழ்நிலையோ, உயர்ந்த அந்தஸ்தோ உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவளாக அவள் இல்லை.
கல்வி இலாகாவில் வேலை செய்து கொண்டிருந்த, உயர்ந்த பொருளாதார நிலை எதுவும் இல்லாத சாதாரண ஒரு க்ளார்க் அவளைத் திருமணம் செய்தான்.
தன்னைச் சிறப்புடன் அலங்கரித்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இல்லாததால், சாதாரண ஆடைகளைத்தான் அவள் எப்போதும் அணிந்திருப்பாள். பெண் இனத்திற்கென்றே பொதுவாக இருக்கக்கூடிய திருப்தியற்ற வெளிப்பாடு அவளுடைய முகத்தில் எப்போதும் தெரிந்தது. எந்தக் குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், பெண் என்பவள் அப்படித்தான் இருப்பாள். பிறக்கும்போதே இருக்கக்கூடிய சில சாதுர்யங்களும், அழகும், சூழ்நிலைக்கேற்றபடி செயல்படும் புத்திசாலித்தனமும், தாழ்ந்த நிலையில் இருக்கக்கூடிய குடும்பத்தில் பிறந்த ஒரு இளம்பெண்ணை, நல்ல வசதி படைத்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்ணுக்கு நிகராக இருக்கும்படி செய்கின்றன.
ஆடம்பரமான ஆடைகள் மீது ஈடுபாடு அதிகம் இருந்ததால் அவை நம்மிடம் இல்லையே என்ற வருத்தம் அவளை விட்டுப் போகவில்லை. தாழ்ந்த நிலையில் இருக்கும் தன்னுடைய அப்பார்ட்மெண்டும், அதன் அழகில்லாத சுவர்களும், பழைய நாற்காலிகளும், நிறம் மங்கலாகிப்போன இதர வீட்டுப் பொருட்களும் அவளுக்கு மனக் கவலையை மட்டுமே பரிசாகத் தந்தன. அவளுடைய நிலைமையில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால், ஒருவேளை அவள் இவற்றையெல்லாம் கவனிக்காமலே கூட இருந்துவிடலாம். மன வருத்தத்தைப் பரிசாகத் தந்ததோடு நிற்காமல் அந்த ஒட்டுமொத்தமான சூழலும் அவளைக் கோபம் வேறு கொள்ள வைத்தது.
அந்தச் சிறிய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அந்தச் சாதாரண மனிதனைப் பார்க்கும்போது அவளுடைய மனதில் கவலையும், ஏமாற்றம் கலந்த கனவுகளும் உண்டாக ஆரம்பிக்கும், சரவிளக்குகளும், நவநாகரீகமான அலங்காரப் பொருட்களும், அழகான அறைகளும், சுகமான நினைவுகளுடன் பெரிய நாற்காலிகளில் காலணிகள் அணிந்தவாறு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பணியாட்களும் அவளுடைய நினைவுகளில் வலம் வந்தார்கள். விலை மதிக்கமுடியாத பல்வேறு வகையான பொருட்களும், படு ஆடம்பரமான பட்டாடைகளும், எந்தப் பெண்ணும் விரும்புவதும் பொறாமைப்படக் கூடியதுமான முக்கிய நபர்களுடனும் காதல் ஜோடிகளுடனும் மாலை வேளைகளில் அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பதற்காகக் கட்டப்பட்டிருக்கும், நறுமணம் கமழும்-காம உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் அறைகளும் அவளுடைய கனவில் வந்தன.
வட்ட வடிவமாக இருக்கும் அந்த சாப்பாட்டு மேஜையில் உணவை சாப்படுவதற்காக உட்கார்ந்தபோது, அந்த மேஜை விரிப்பு மூன்று நாட்களாக உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை அவள் நினைத்தாள். அவளுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த அவளுடைய கணவன் “அடடா! உணவு எவ்வளவு அருமையா இருக்கு! இதைவிட சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை” என்று கூறியவாறு அந்தப் பாத்திரத்தின் மூடியைத் திறந்தபோது, அருமையான இரவு விருந்துகளையும், நாகரீகமாக இருக்கும் மனிதர்களும் பறவைகளும் வரையப்பட்டிருக்கும் சாப்பாட்டு அறையின் மேஜை விரிப்புகளையும், மூக்கைத் துளைக்கும் உணவுப் பொருட்களின் வாசனையையும், வீர வரலாறுகளைப் பற்றிய உரையாடல்களையும், பெண்களின் சிரிப்புகளையும், மீன்களையும், கோழி மாமிசத்தையும் அவள் கனவு கண்டுகொண்டிருந்தாள்.
அவளிடம் விலை அதிகமான ஆடைகளோ, நகைகளோ இல்லை. அப்படிப்பட்ட எந்தப் பொருளும் அவளிடம் இல்லை. அந்த மாதிரியான பொருட்கள் மீது அவளுக்கு நிறைய ஏக்கம் இருந்தது, தான் அதற்காகப் படைக்கப்பட்டவள்தான் என்று அவள் நினைத்தாள். அன்பு செலுத்தவும், அன்பு செலுத்தப்படவும், புத்திசாலியாக இருக்கவும், காதல் கெஞ்சல்களுக்கு ஆளாகவும் அவள் விருப்பப்பட்டாள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் அவளுக்கு நல்ல வசதி படைத்த ஒரு தோழி இருந்தாள். அந்தத் தோழியின் வீட்டிற்குப் போவது என்றால் அவளுக்கு மிகவும் படிக்கும். ஆனால், அந்தத் தோழி தன் வீட்டிற்கு வந்தபோது, அவள் மிகவும் கவலைப்பட்டாள். தாங்க முடியாத துக்கத்தாலும் ஏமாற்றத்தாலும் அன்று முழுவதும் அவள் கண்ணீர் சிந்திக்கொண்டேயிருந்தாள்.
ஒருமாலை நேரத்தில் அவளுடைய கணவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையில் ஒரு கவரை வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். “இங்க பாரு... உனக்குன்னு நான் இதைக் கொண்டுவந்திருக்கேன்” என்றான் அவன்.
அவள் ஆர்வத்துடன் அந்தக் கவரைப் பிரித்தாள். அதற்குள் அச்சடிக்கப்பட்ட ஒரு கார்டு இருந்தது. அவள் அதை வெளியே எடுத்தாள். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
‘வரும் ஜனவரி 18-ஆம் தேதி, திங்கட்கிழமை மாலை, கல்வி அமைச்சரின் இல்லத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் திரு லாயிஸலையும் திருமதி லாயிஸலையும் கலந்து கொள்ளும்படி இதன்மூலம் அழைக்கிறோம். சம்பந்தப்பட்ட விருந்தில் பெருமதிப்பிற்குரிய அமைச்சரும் திருமதி தார்ஜ் ரம்பானோவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.’
ஆனால், கணவன் நினைத்ததைப்போல, சந்தோஷப்படுவதற்கு பதிலாக கடுமையான வெறுப்புடன் அந்த அழைப்பிதழை மேஜைமேல் போட்ட அவள் கேட்டாள்: “இந்த அழைப்பிதழை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க?”
“என் தங்கமே, இந்த அழைப்பிதழ் உன்னை மிகவும் சந்தோஷப்பட வைக்கும்னு நான் நினைச்சேன். நீ வெளியே போறதே இல்லையே! அதற்கு ஒரு வாய்ப்பாக இது இருக்குமேன்னு நான் நினைச்சேன். நல்ல ஒரு வாய்ப்பு! இந்த அழைப்பிதழ் கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் இந்த அழைப்பிதழ் நமக்குக் கிடைக்காதான்னு ஆர்வத்துடன் இருப்பாங்க. ஆனால், அபூர்வமா ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். சாதாரண அரசாங்க க்ளார்க்குக்கெல்லாம் இது கிடைக்காது. இந்த நாட்டின் அரசாங்க ஆட்சியாளர்கள் எல்லோரையும் நீ அங்கே பார்க்கலாம்.”
கோபம் குடிக்கொண்டிருக்கும் கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்:
“இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நான் எதை அணிந்துகொண்டு போவேன்னு நீங்க மனசுல நினைக்கிறீங்க?”
அதைப்பற்றி அவன் நினைத்திருக்கவில்லை. சிறிது பதைபதைப்புடன் அவன் சொன்னான்: “அதனால் என்ன? நாம தியேட்டருக்குப் போறப்போ அணியக்கூடிய ஆடைகள் போதாதா? உனக்கு அது அருமையாக இருக்கும்.”
மனைவி அழுவதைப் பார்த்து, அதற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் பதைபதைத்துப்போய் அமைதியாக அவன் நின்றுவிட்டான். இரண்டு கண்ணீர்த் துளிகள் அவளுடைய கன்னங்கள் வழியாக ஒழுகி உதடுகளில் ஓரத்தில் வந்து நின்றன. தடுமாற்றத்துடன் அவன் கேட்டான்: “என்ன பரச்சினை? என்ன பரச்சினை?”
கடுமையான முயற்சியுடன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நனைந்த கன்னத்தைத் துடைத்தவாறு மிகவும் அமைதியான குரலில் அவள் சொன்னாள்: “ஒண்ணும் இல்ல.