விலக்கப்பட்ட கனி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6962
“உனக்கு சாப்பிடுறதுக்கு என்ன வேணும்?” அவன் கேட்டான்.
“எனக்குத் தெரியாது. இங்கே எது நல்லா இருக்குமோ அதைக் கொண்டு வந்து வைத்தால் போதும்.”
பிறகு அவன் உணவுப் பொருட்களின் பட்டியலை வாசிப்பதற்கு மத்தியில் தன்னுடைய ஓவர் கோட்டை ஒரு வெயிட்டரிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான்:
“இதைப் பரிமாறு. பிஸ்க் சூப்... சிக்கன்... முயல் மாமிசம்... அமெரிக்க முறையில் பொரிக்கப்பட்ட வாத்து... வெஜிட்டபிள் சாலட்... பிறகு... டஸர்ட்...”
வெயிட்டர் சிரித்துக்கொண்டே அந்த இளம் பெண்ணைப் பார்த்தான். அவன் மெனு அட்டையை எடுத்துக்கொண்டு மெதுவான குரலில் கேட்டான்:
“மேடம் போள், உங்களுக்கு குடிக்க என்ன வேணும்? கார்டியலா ஷாம்பெய்னா?”
“பயங்கரமான வெப்பம்... ஷாம்பெய்ன் போதும்.”
வெயிட்டருக்குத் தன்னுடைய கணவனின் பெயரைத் தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவுடன் ஹென்ரீத்தாவிற்கு சந்தோஷமாகிவிட்டது. சோஃபாவில் அருகருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் உணவு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அந்த அறையில் பத்து மெழுகு வர்த்திகள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணாடித் துண்டுகளால் யாரோ எழுதி வைத்த ஏராளமான பெயர்கள் சிலந்தி வலையைப்போல மேலும் கீழுமாய் இருந்த அந்தப் பெரிய கண்ணாடியில், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் தெரிந்தன.
முதல் குவளை மது அருந்தும்போது அவளுக்குத் தலை சுற்றுவதைப்போல் இருந்தாலும், தன்னைத்தானே வெப்பப்படுத்திக் கொள்வதற்காக அவள் மீண்டும் மீண்டும் ஷாம்பெய்ன் குடித்தாள். தன்னுடைய பழைய நினைவுகளை ஞாபகத்திற்குக் கொண்டு வந்த போள் அவளுடைய கைகளில் விடாமல் தொடர்ந்து முத்தங்களைப் பதித்தான். அவளுடைய கண்கள் ஒளிர்ந்தன.
அந்த நினைக்க முடியாத சூழ்நிலையைப் பற்றி நினைத்தபோது அவளுக்குப் புத்துணர்ச்சி உண்டானது. தனக்கு ஆவேசமும் மகிழ்ச்சியும் உண்டாவதை அவள் உணர்ந்தாள். எனினும், அவளுக்கு தான் கொஞ்சம் களங்கப்பட்டு விட்டோமோ என்ற உணர்வு உண்டானது. திடகாத்திரமான இரண்டு வெயிட்டர்களும் அங்கு காணும் சம்பவங்களை எல்லாம் மறப்பதற்கான அனுபவம் கொண்டவர்களாக இருந்தார்கள். தேவையான நேரத்திற்கு மட்டும் அவர்கள் அறைக்குள் வந்தார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரம் வந்தவுடன், அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விடுவார்கள்.
இரவு உணவின் பாதி வழியை அடைந்த நேரத்தில் ஹென்ரீத்தாவிற்கு சரியான போதை உண்டாகி விட்டிருந்தது. ஆவேசம் உண்டாகி போள் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி அவளுடைய முழங்காலை அழுத்தினான். அவள் கன்னா பின்னாலொன்று பேச ஆரம்பித்தாள். அவளுடைய பார்வை மோகத்தைத் தூண்டக்கூடியதாகவும் உஷ்ணம் கொண்டதாகவும் இருந்தது.
“ஓ... என் போள்...”- அவள் சொன்னாள்: “எல்லாவற்றையும் சொல்லணும். எனக்கு எல்லா விஷயங்களும் தெரியணும்.”
“என் பெண்ணே, உனக்கு என்ன வேணும்?”
“எனக்குச் சொல்றதுக்கு தைரியம் இல்ல.”
“ஆனால், நீ எப்போதும்...”
“எனக்கு முன்னால் உங்களுக்கு நிறைய காதலிகள், வைப்பாட்டிகள் இருந்தார்களா?”
தன்னுடைய கடந்தகால அதிர்ஷ்டங்களை மூடி வைக்கலாமா? இல்லாவிட்டால் அதைப்பற்றி ஆணவத்துடன் பெருமையாகக் கூறி விடலாமா என்று தெரியாமல் அவன் சிறிது நேரம் தயங்கி நின்றான்.
அவள் சொன்னாள் : “தயவு செய்து சொல்லுங்க போள். உங்களுக்கு நிறைய காதலிகள் இருந்தார்களா?”
“கொஞ்சம் பேர்தான்.”
“எத்தனைப் பேர்?”
“எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஒரு ஆண் அப்படிப்பட்ட விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்?”
“உங்களால் எண்ண முடியலையா?”
“எதற்கு? இல்ல...”
“எவ்வளவு பேர் இருப்பாங்க? குத்துமதிப்பா...?”
“எனக்குத் தெரியாது பெண்ணே. சில வருடங்கள் நிறைய பெண்கள் வந்து போவார்கள். சில நேரங்களில் குறைவா இருப்பாங்க.”
“ஒரு வருடத்துக்கு எத்தனைப் பேர் இருப்பாங்கன்றது உங்களோட கணக்கு?”
“சில நேரங்கள்ல இருபதோ முப்பதோ பேர் இருப்பாங்க. சில வேளைகளில் நான்கோ ஐந்தோ...”
“ஓ... எனக்கு அருவருப்பா இருக்கு...”
“எதற்கு அருவருப்பு தோணணும்?”
“பிறகு... அது அருவருப்பு உண்டாக்குற விஷயம்தானே! இந்தப் பெண்கள் எல்லாரும் துணி இல்லாமல்... எல்லாரும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரிதான்... ஓ... நுறு பெண்களுக்கும் மேலே... ஓ.... அருவருப்பான ஒரு விஷயம்தான்...”
அவளுக்கு அருவருப்பு உண்டானது என்று தெரிந்தவுடன் அவன் அதிர்ச்சியடைந்துவிட்டான். பெண்கள் முட்டாள்தனமாக ஏதாவது பேசும்போது, அவர்கள் கூறியது முட்டாள்தனமானது என்பதை அவர்களிடம் கூறிப் புரிய வைப்பதற்கு ஆண்கள் எப்போதும் காட்டக் கூடிய வழக்கமான உணர்ச்சியை அவன் தன் முகத்தில் வெளிப்படுத்தினான்.
“ஹ! அது சுவாரசியமான விஷயம்தான். நூறு பெண்கள் அருவருப்பை உண்டாக்குவதற்கு நிகரானதுதான் ஒரு பெண் உண்டாக்கக்கூடிய அருவருப்பும்.”
“ஓ... இல்ல... நிச்சயமா அப்படிச் சொல்ல முடியாது...”
“எப்படி இல்லைன்னு சொல்ற?”
“காரணம் - ஒரு பெண் என்றால் ஒரு உறவு. அவளுடன் உங்களை உறவு கொள்ளச் செய்வது காதல். ஆனால், நூறு பெண்கள் என்று ஆகும்போது அது மோசமாயிடுது. கெட்ட விஷயமாக அது மாறுது. அசிங்கமான அந்தப் பெண்களுடன் ஒரு ஆண் எப்படிப் பழக முடியுதுன்னு என்னால் புரிஞ்சிக்க முடியல.”
“அப்படிச் சொல்ல முடியாது. அவங்க ரொம்பவும் சுத்தமானவங்க... நல்ல மனம் படைச்சவங்க...”
“இந்த வியாபாரம் பண்றவங்க சுத்தமானவர்களா இருக்க முடியாது.”
“இல்ல... அதற்கு நேர்மாறாக இந்த வியாபாரத்துல ஈடுபடுறதுனாலதான் அவங்களுக்கு மரியாதையே கிடைக்குது.”
“ஃபூ! மற்றவர்களுடன் அவர்கள் பங்கு போடும் இரவுகளை நினைச்சுப்ப பார்த்தால்... அவ்வளவுதான்... வெட்கக்கேடு!”
“வேறொரு ஆள் குடிச்ச டம்ளரிலிருந்து குடிப்பதைவிட- அதுவும் சரியாக சுத்தம் செய்த டம்ளரிலிருந்து அது எவ்வளவோ மேல்.”
“சரிதான்... நீங்கள் நல்லா எதிர்பபைக் காட்ட ஆரம்பிச்சிட்டீங்க...”
“பிறகு எதற்கு எனக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததான்னு நீ கேட்டே?”
“அப்படின்னா சொல்லுங்க... நீங்கள் அனுபவிச்ச பெண்கள்- அந்த நூறு பேரும் இளம்பெண்களாக இருந்தாங்களா? விபச்சாரிகள்...?”
“இல்லை... இல்லை... சிலர் நடிகைகளாக இருந்தாங்க. சிலர் வேலை செய்யிற இளம் பெண்களாக இருந்தாங்க... பிறகு குடும்பப் பெண்கள்...”
“அவர்களில் எத்தனைப் பேர் குடும்பப் பெண்களாக இருந்தாங்க?”
“ஆறு பேர்”
“வெறும் ஆறு பேர்தானா?”
“ஆமாம்...”
“அவர்கள் மிகவும் அழகானவர்களா இருந்தாங்களா?”