
வீட்டைவிட்டு வெளியேறியபோது கையில் எடுத்து வைத்திருந்த பணமும், அண்டர்வேர் பையில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைத்திருக்கும் தங்கச்சங்கிலியும் எத்தனை நாட்களுக்கு தனக்கு பயன்படப்போகிறது என்ற உள்மனபயம் அவ்வப்போது தலையை நீட்டி பயமுறுத்தியதாலும், ஒரு சாதாரண பிச்சைக்காரனாக மாறுவது குறித்து எண்ணும்போது மனதில் உண்டாகும் தளர்ச்சியாலும், அவர் தன் கையில் இருந்த பணத்தை மிகவும் கணக்குப் போட்டு எண்ணி எண்ணியே செலவழித்தார். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அவர் சாப்பிடுவார். மற்ற நேரங்களில் பொதுவாக அவருக்குப் பசி எடுப்பதில்லை.
அவர் வீட்டை விட்டு வெளியே வந்து நான்கு வாரங்கள் கழித்து, பிச்சைக்காரர்களுக்காகப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் கண்கள் பத்திரிகையில் இருந்த ஒரு விளம்பரத்தின்மீது நிலை குத்தி நின்றது. அது - அவரின் மனைவி கொடுத்திருந்த விளம்பரம். "சந்திரன் அத்தான்... என்னை மன்னியுங்கள். உடனே திரும்பி வரவும். நானும் ரமேஷும் மல்லிகாவும் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்." உயரமான ஒரு இடத்தில் இருந்து கீழ்நோக்கி பள்ளத்தில் விழுவதைப் போன்ற ஒரு உணர்வு அவருக்கு அப்போது உண்டானது. அவரால் சீராக மூச்சுவிட முடியவில்லை. அவர் அந்த விளம்பரத்தையே பல நிமிடங்கள்- ஒரு அதிசய உலகத்தைப் பார்ப்பது மாதிரி வைத்த கண் எடுக்காது பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் கண்களில் இருந்து நீர் பொல பொல வென்று வழிந்தது. வழிந்த கண்ணீரை விரலால் துடைத்த அவர், பத்திரிகை படிப்பதைத் தொடர்ந்தார்: "இன்று திருமணம். பாலா பத்ராஸனப் பள்ளியில் 11 மணிக்கு... பேசிச்சனுக்கும் மேரியம்மாவுக்கும்.'' மீதி இருந்த விளம்பரங்களையும், செய்திகளையும் படித்து முடித்து, ஒவ்வொரு பிச்சைக்காரனும் எந்தெந்த பகுதிக்குப் போக வேண்டும், எப்படிப் போக வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு, என்றைக்கும் இல்லாமல் கையிலிருந்த அந்த நாளிதழைச் சுருட்டி தூரத்தில் அவர் விட்டெறிந்தார். ஒன்றிரண்டு பிச்சைக்காரர்கள் அவரின் அந்தச் செயலை வினோதமாகப் பார்த்தார்கள். அவர் விட்டெறிந்த பத்திரிகை காற்றில் உருண்டு போய் குழந்தை இயேசுவின் முன்னால் அனாதையாக நின்றது. அந்தப் பத்திரிகையை மீண்டும் எடுக்க வேண்டும் என்றும், தன் மனைவி தன்னை அழைத்திருப்பதை மீண்டும் வாசிக்க வேண்டும் என்றும் தணியாத ஆவல் அவர் மனதில் உண்டானது. ஆனால், எழுந்த அந்த ஆவலை அடுத்த கணமே அவர் அடக்கிக் கொண்டார். ஒரு காற்று "சில்"லென்று வீசியது. அந்தப் பத்திரிகை காற்றோடு கலந்து ஓடி பக்கத்திலிருந்த ஓடையில் போய் விழுந்தது. கடை திறக்க வந்த கடை உரிமையாளரின் காலடிச் சத்தம் கேட்டுத்தான் மீண்டும் சுய உணர்விற்கே சந்திரன் வந்தார்.
இன்று, அவர் வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய மனைவி, மக்கள் எல்லாரையும் பிரிந்து வந்து நூற்று ஐம்பதாவது நாள்.
சந்திரன் நாளிதழை விரித்துப் பிடித்துப் படித்தார்: "ஈராற்றுப் பேட்டை அரிக்குன்னு வீட்டில் அன்னக்குட்டி மேத்யூ மரணமடைந்தார். இறுதி அடக்கம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு அருவித்துறை பள்ளியில்.'' சவ அடக்கத்தில் யார் போய் கலந்து கொள்வது என்பது பற்றி அவர்கள் மத்தியில் நீண்ட நேரம் ஒரு சர்ச்சை நடந்து, இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். கடை உரிமையாளரின் உருவம் தூரத்தில் தெரிகிறதா என்று தலையை உயர்த்திப் பார்த்த சந்திரன், அடுத்த விளம்பரத்தைப் படிக்க ஆரம்பித்தார். பல நேரங்களில் கடை உரிமையாளர் வரும் நேரத்தில்தான் பத்திரிகை படிப்பதே முடிவுக்கு வரும். காரணம்- சில செய்திகளிலும் விளம்பரங்களிலும் தங்களின் அன்றாட சாப்பாட்டுப் பிரச்சினையைத் தாண்டி பிச்சைக்காரர்கள் ஆர்வம் செலுத்தியதே. உதாரணத்திற்கு- ஒரு குழந்தையின் அகால மரணத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்திருந்தால், அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்வதில் அவர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள். முழு விவரத்தையும் தெரிந்ததும் அவர்கள் மூக்கில் விரல் வைத்து வருத்தப்பட்டு நிற்பார்கள். இல்லாவிட்டால் கவலை தோய்ந்த குரலில் ஏதாவது சொல்வார்கள். அந்தக் குழந்தையின் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எல்லாரும் ஒருமித்த குரலில் சொல்ல, எல்லாருக்கும் தெரியும்படி சந்திரன் பத்திரிகையைத் தலைக்குமேல் உயர்த்திப்பிடித்துக் காட்டுவார். சில நேரங்களில் அவர்களில் யாராவது ஒரு ஆள் அந்தப் பத்திரிகையை வாங்கி கண்களுக்குப் பக்கத்தில் வைத்து, படத்தில் இருக்கும் குழந்தையையே உற்றுப் பார்ப்பதும் உண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தற்கொலை செய்வது, வாகன விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் மரணம் அடைவது போன்ற செய்திகள் பத்திரிகையில் வந்தால், அவ்வகைச் செய்திகளை அறிந்து கொள்வதில் அவர்கள் எல்லாருமே மிகவும் ஆவலாக இருப்பார்கள். செய்தியைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சில நேரங்களில் யாராவதொரு ஆள் சொல்வான்: "பணமும் காரும் இருந்து என்ன பிரயோஜனம்? ஒரே நிமிஷத்துல உலகத்தைவிட்டே போயிட்டாங்களே!'' ஒருமுறை ஒரு திருமண விளம்பரத்தைப் பார்ப்பதில் ஒரு பிச்சைக்காரன் மிகவும் ஈடுபாடு காட்டினான். அதையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த அந்த ஆள் தாழ்ந்த குரலில் சொன்னான்: "இது என்னோட மகள்.''
அடுத்த நிமிடம் மற்ற பிச்சைக்காரர்கள் அப்படிச் சொன்ன பிச்சைக்காரனைப் பார்த்துக் கிண்டல் பண்ணினார்கள். இன்னும் சிலர் அவன் சொன்னதை நம்பாமல் பச்சைப்பொய் சொன்னதற்காக அந்த ஆளை பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால், அந்த ஆள் பொய் சொன்னதாக சந்திரன் மனதில் படவில்லை. திருமண விளம்பரத்தைப் பார்த்த பிச்சைக்காரனைப் பார்த்து இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான்: "அப்படின்னா நீ கல்யாணத்துக்குப் போயிட்டு வரவேண்டியது தானே?'' அதற்கு அந்த முதல் பிச்சைக்காரன் சொன்னான்: "என்னோட மகள் கல்யாணத்திற்கு நான் எப்படிப் போவேன்?'' மற்றவர்கள் அந்த ஆள் சொன்னதை ஒரு தமாஷாக நினைத்து சிரித்தார்கள். அவனுடன் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள். தன் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போது, அவர்களை மறைந்து நின்று தான் பார்த்த நாட்களை அப்போது சந்திரன் நினைவு கூர்ந்தார். அவர் பரிதாபம் மேலோங்க, கவலைப்பட்டு நிற்கும் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்தார். அந்த ஆள் என்னவோ சிந்தித்தவாறு தூரத்தில் தன் கண்களைப் பதித்து மவுனமாக நின்றிருந்தான்.
இன்றைய நாளிதழில் பிரசுரமாகியிருந்த மரண, திருமண விளம்பரங்களையும் செய்திகளையும் முழுமையாகப் படித்து முடித்தார் சந்திரன். கடைசியாக ஒருமுறை படிப்போமே என்று ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார். அப்போது, மரணச் செய்திகள் சாதாரணமாகப் பிரசுரம் செய்யப்படாத ஒரு பக்கத்தில் இருந்த ஒரு செய்தியின்மீது அவர் கண்கள் நிலைகுத்தி நின்றன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook