பத்திரிகை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6645
ஒருவித பதைபதைப்புடன் அந்தச் செய்தியையே உற்றுப் படித்தார். மேலும் சந்தேகம் வரவே, பத்திரிகையைச் சற்று உயரப்பிடித்து முகத்துக்கு நேராக வைத்துப் படித்தார். சந்திரனின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அவரின் முகத்திலும் கண்களிலும் இதற்குமுன் இல்லாத ஒரு வித மாற்றம்... அவர் நிசப்தமாக நின்றவாறு படித்தார் : "நீலேஸ்வரம். பிரபல சொற்பொழிவாளரும் சமூக சேவகருமான கிருஷ்ணதாஸ் (வயது 38) காலமானார். இவர் இதுவரை திருமணமாகாதவர்." நம்பிக்கை வராமல் மீண்டும் அந்தச் செய்தியையே படித்தார் சந்திரன். அவர் கண்கள் அந்தச் செய்தியையே உற்று நோக்கின. மீண்டும் மீண்டும் அவை அந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையாக மேய்ந்து பார்த்தன. அவர் நெஞ்சு "டிக் டிக்" என்று வேகமாக அடித்தது. இதயம் அடிப்பதை தன் காதால் அவரே கேட்டான். அப்போது அவரைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் கேட்டார்: "என்ன பாக்குறீங்க? நமக்குத் தேவையான செய்தி ஏதாவது வந்திருக்கா என்ன?'' "இல்ல....'' சந்திரன் சொன்னார்: "இன்னைக்கு உள்ள செய்திகள் முழுசா முடிஞ்சிடுச்சா?'' பிச்சைக்காரன் கேட்டான். "ஆமா...'' சந்திரன் சொன்னார். சொல்லிவிட்டு பத்திரிகையை அவர் கீழே வைத்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு பிச்சைக்காரர்கள் எல்லாரையும் பார்த்துச் சொன்னார்: "நான் ஒரு விஷயம் சொல்லணும்.'' அவர்கள் அவரை ஆவலுடன் பார்த்தார்கள். இப்படியொரு உரையாடல் அவர்களுக்குள் இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. சந்திரன் சொன்னார்: "நாளை முதல் நான் இங்கு இருப்பதாக இல்ல... நான் என் வீட்டுக்குத் திரும்பிப் போறதா இருக்கேன்.'' சந்திரன் சொன்னதும் பிச்சைக்காரர்கள் எல்லாரும் அதிர்ந்து போனார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களின் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. அவர் சொன்னார்: "என்னோட மனைவியின் காதலன் செத்துப்போயிட்டான். இனி நான் திரும்ப வீட்டுக்குப் போகலாம்.''
பிச்சைக்காரர்களில் ஒருசிலருக்கு சந்திரன் என்ன சொன்னார் என்பதே புரியவில்லை. புரிந்துகொண்டவர்கள் கண்களை விரித்து அவரையே பார்த்தார்கள். தன் வாழ்க்கையின் ரகசியப் பக்கங்களுக்கு திடீரென்று அவர்களைத் தள்ளிவிட்டு, அடுத்த நிமிடமே தங்களிடமிருந்து அவர் ஓடிப்போவதாக அவர்கள் எண்ணினார்கள். அவர் தங்களிடமிருந்து இல்லாமல் போவதை அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. "அப்ப நாங்க என்ன செய்றது?'' ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். கடை உரிமையாளர் ஒரு கையில் டார்ச் விளக்கையும், இன்னொரு கையில் மதிய உணவுப் பொட்டலமும் சாவிக்கொத்தும் அடங்கிய ப்ளாஸ்டிக் பையையும் தூக்கிக்கொண்டு வரும் நேரம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. "என்னால போகாம இருக்க முடியாது. என் மனைவி ஏற்கெனவே என்கிட்ட மன்னிப்பு கேட்டு விளம்பரம் கொடுத்திருந்தா.'' சந்திரன் சொன்னார்: "எங்களுக்கு எல்லா காரியங்களும் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருந்துச்சு.'' ஒரு பிச்சைக்காரன் ஏக்கத்துடன் சொன்னான். "என்னால போகாம இருக்க முடியாது...'' சந்திரன் மீண்டும் சொன்னார். "எங்களோட பத்திரிகையை மட்டும் இவர் படிக்கலைன்னா, இவருக்கு எப்படி இந்த விஷயங்கள் தெரிஞ்சிருக்கும்?'' ஒரு பிச்சைக்காரன் மெதுவான குரலில் முணுமுணுத்தான். சந்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்து மீண்டும் தன் மனைவியின் காதலனின் மரணம் பற்றிய செய்தி பிரசுரமாகியிருந்த பக்கத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ, ஒருவித தீர்மானத்துடன் எழுந்து நின்றார். சந்திரன் கீழே வைத்த பத்திரிகையை, ஒரு பிச்சைக்காரன் எடுத்துப் பார்த்தான். எதுவுமே புரியாமல், அவன் அந்த நாளிதழைத் தன் கையிலேயே வைத்திருந்தான். "அப்ப நாளைக்கு பத்திரிகை வாங்க வேண்டாமா?'' ஒரு பிச்சைக்காரன் கேட்டான். "வாங்கு. நான் பத்திரிகையைப் படிக்கிறேன்.'' இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான். மற்ற பிச்சைக்காரர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவன் எதுவுமே தெரியாத ஒரு முட்டாள் என்பது அவர்கள் எல்லாருக்குமே தெரியும். "நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க.'' இரண்டு பிச்சைக்காரர்கள் ஒரே நேரத்தில் சந்திரனிடம் சொன்னார்கள்: "எங்களுக்குக் கிடைக்கிற வருமானத்துல நால்ல ஒரு பங்கை உங்களுக்கு நாங்க தர்றோம். நீங்க இங்க இருந்தா, எங்களுக்கு மிகவும் உதவியா இருக்கும்.'' ஒரு பிச்சைக்காரன் அவரை விரலால் நோண்டியவாறு கேட்டான்: "எல்லாருக்கும்தான் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்க. உங்களுக்கு மட்டும் என்ன தனி விசேஷம்? நீங்க வீட்டுக்குப் போயி என்ன பண்ணப் போறீங்க?'' சந்திரன் தன் தோள் பையுடன் கடைத் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினார். பிச்சைக்காரர்கள் எல்லாரும் பொம்மைகளைப்போல அவரையே பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தனர். சந்திரன் சற்று முன்னால் நடந்தார். பின்பக்கம் பார்த்து கையை ஆட்டியவாறு அவர் சொன்னார்: "பிறகு பார்க்கலாம்.'' ஏற்கெனவே முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரன் அவரை நோக்கி மெதுவான குரலில் சொன்னான்: "பிறகு பார்க்கலாமாம், பிறகு! வெட்கமில்லாதவன்! திருட்டுப் பய! என்னைக்குமே எங்களை நீ பார்க்க வேண்டாம்...!'' மற்றொரு பிச்சைக்காரன் சொன்னான்: "காதலன் செத்துப் போயிட்டான்றதுக்காக, இவரோட பொண்டாட்டி இவரை மறுபடியும் ஏத்துக்குவான்னு என்ன நிச்சயம்? எல்லாம் இந்த ஆளோட நினைப்பு....'' சந்திரன் போவதை அவர்கள் கவலையுடனும், கோபத்துடனும் பார்த்தவாறு நின்றிருந்தனர். "இந்த ஆளு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே இவரோட பொண்டாட்டி தற்கொலை செய்திருப்பா. இவர் அங்கே போறதே வீண்வேலை....'' ஒரு பிச்சைக்காரன் சொன்னான். அதைக் கேட்டு, ஒன்றிரண்டு பேர் அதை ஆமோதித்தார்கள். "ஒருவேளை அவளை இவர் கொலை செய்யணும்னு நினைச்சுப் போகலாம். அவளோட காதலன்தான் ஏற்கெனவே செத்துப்போயிட்டான்ல?'' இன்னொரு பிச்சைக்காரன் சொன்னான். "அங்கே போயி எதுவுமே சரியா இல்லைன்னா, இந்த ஆளு திரும்பவும் இங்கேதான் வரப்போறாரு.'' வேறொரு பிச்சைக்காரன் சொன்னான். அதற்குள் கடை உரிமையாளர் அங்கு வந்து விட்டிருந்தார். அவர் கையில் இருந்த சாவிக்கொத்து குலுங்கியது. பிச்சைக்காரர்கள் எழுந்து முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்கள் முன்னால் நடந்து சந்திரன் போன பாதையையே ஒருவித எதிர்பார்ப்புடன் எட்டி எட்டிப் பார்த்தார்கள். அவர் பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்பதை அவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குள் எதுவுமே பேசிக் கொள்ளாமல், உலகத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் எல்லாருக்குமே ஒரே மாதிரியாக இருக்கும் மெதுவான காலடிச் சத்தத்துடன் அவர்கள் எல்லோரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள்மேல் கரும்புகையைக் கக்கியவாறு புஞ்ஞார்- கோட்டயம் ஃபாஸ்ட் பாசஞ்சர் அவர்களைக் கடந்து போனது.
அவர்கள் தங்கள் பாதங்களுக்குச் சற்று வேகத்தைக் கூட்டினாலும், சந்திரன் பஸ்ஸுக்குள் ஏறுவதையும், பஸ் அவரையும் ஏற்றிக்கொண்டு பாய்ந்து போவதையும்தான் அவர்களால் பார்க்க முடிந்தது. அந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டத்திற்குப் பின்னால் இருந்த குழந்தை இயேசுவின் சிலையைச் சுற்றி மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பிச்சைக்காரர்களில் ஒருவன் சங்கடம் கலந்த குரலில் தலையை ஆட்டியவாறு சொன்னான்: "எல்லாமே வெறும் ஆசை!''