Lekha Books

A+ A A-

ஆகாயத்தில் இருந்து வந்த அஸ்தி கலசம் - Page 2

அவன் அந்த மூட்டையைத் திறந்து காண்பித்தான். உடைந்த ஒரு பானையின் துண்டுகளும், கொஞ்சம் கரிக்கட்டைகளும், ஒரு எரிந்துபோன சாமந்திப்பூ மாலையும் அதில் இருந்தது.

“இதெல்லாம் என்ன.'' நான் பயந்துபோன குரலில் கேட்டேன். “மந்திர தந்திர காரியங்கள் ஏதாவது...''

“இல்ல ஸாப்...'' அவன் ஆடுகளை ஒருமுறை திரும்பிப் பார்த்தவாறு சொன்னான். “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நான் கங்கோத்ரிக்கு மேலே மலைச்சரிவுல இருந்து புல்வெளியில ஆடுகளை மேய்ச்சிக்கிட்டு இருந்தேன். நல்ல வெயில். ஆடுகள் இலைகளையும், வேரையும், பனி உருகி பச்சைப் பசேல்னு வளர்ந்திருந்த புல்லையும் மேய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நான் ஒரு கல்மேல உட்கார்ந்து வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்படியே என்னை மறந்து தூங்கிட்டேன். அப்போ திடீர்னு ஒரு பெரிய சத்தம்... ஒரு ராட்சசத்தனமான ஒலி. அதைக் கேட்டு அதிர்ச்சியடைஞ்சுபோய் கண்ணைத் திறந்தேன். என்னன்னு பார்த்தா, மலை இடிஞ்சு கீழே விழுந்துக்கிட்டு இருக்கு. பனிப் பாறைகள் கீழே உருண்டு வந்துக்கிட்டு இருக்கு. பூமி குலுங்குது. உலகம் அழியப் போகுதுன்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். ஆடுகள் அத்தனையும் பயந்துபோய் என்ன செய்றதுன்னு தெரியாம ஒண்ணு சேர்ந்து கூட்டமா நின்னுக்கிட்டு இருக்கு. எல்லா ஆடுகளும் ஆகாயத்தையே பயந்து போய் பாக்குது. மேகங்களுக்குப் பின்னாடி யாரோ போறாங்க வர்றாங்கன்ற மாதிரி ஆடுகள் பாக்குது. மனிதனோட பாவச் செயல்கள் அதிகமாகி, சகிச்சுக்க முடியாத பகவான் கைலாசத்துல இருந்து எல்லாத்தையும் விழுங்குறதுக்கு இறங்கி வர்றாப்போல இருக்குன்னு நான் நினைச்சேன். நான் மனம்விட்டு சொன்னேன்: "பகவானே... ஒண்ணும் தெரியாத இந்த ஏழை ஆட்டு இடையன்மேல கருணை காட்டு.' நான் தலை குனிஞ்சு நின்னு பகவானைக் கும்பிட்டேன். "இந்த ஆடுகளை நான் ஒருநாள்கூட துன்புறுத்தினது இல்ல... இந்தக் கம்பை வச்சு சும்மா பயமுறுத்தி இருக்கேன். அவ்வளவுதான். என்னோட அப்பாவும் அம்மாவும் வயசாகிப்போய், நடக்க முடியாம வீட்டுல இருக்காங்க. அவங்க இனிமேலும் கவலையும் கஷ்டமும் படுறமாதிரி தயவுசெஞ்சு எதுவும் செஞ்சிடாதே. நான் அவுங்களுக்கு இருக்குற ஒரே மகன். நான் இல்லைன்னா யாருக்குமே தெரியாம அவுங்க பட்டினி கிடந்து செத்துப்போயிடுவாங்க. நீதான் எனக்கு எதுவும் கேடு வராம காப்பாத்தணும்...'

அடுத்த நிமிஷம் என் தலையில ஏதோ வந்து மோதுச்சு. அவ்வளவுதான்- நான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துட்டேன். ஆடுங்க என் முகத்தை நக்குறது தெரிஞ்சு நான் எந்திரிச்சேன். என் தலையின் ஒரு பக்கம் வலிச்சது மாதிரி இருந்துச்சு. தொட்டுப் பார்த்தா, ஒரே ரத்தம். என் கால் பாதத்துக்குக் கீழே இந்த உடைஞ்சு போன சட்டியும், அதுக்குள்ள இந்த கரிக்கட்டைகளும், சாமந்திப்பூ மாலையும் இருக்கு. இது எப்படி என் காலுக்குக் கீழே வந்துச்சுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நான் கேட்ட சத்தத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு நினைச்சேன். ஆகாயத்தில் இருந்து வந்து என் காலுக்குப் பக்கத்துல விழுந்துகிடந்த பொருட்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து முட்டை கட்டினேன். தலை ஒரேயடியா சுத்துச்சு. அதையெல்லாம் பெரிசா எடுக்காம நான் பாட்டுக்கு நடந்தேன். கடைசியில பால் விக்கிற பட்டாள போஸ்ட்டுக்கு ஓடினேன். அங்கேயிருந்த பட்டாளக்காரங்ககிட்டே விஷயத்தைச் சொன்னேன். நான் சொன்ன விவரங்களைக் கேட்டு முதல்ல அவங்க சிரிச்சாங்க.

பட்டாளக்காரங்கள்ல ஒரு ஆள் பந்தாவான குரல்ல என்கிட்ட சொன்னார். "டேய்... உனக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. உனக்குக் கிடைச்சிருக்கிறது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். இதோட சொந்தக்காரர் டில்லியில் இருக்காரு. நீ இதை எடுத்துட்டு டில்லிக் குப் போயி அவர் யாருன்னு  தேடு. அவர் ஒரு பெரிய மனிதர். நீ அவரை விசாரிச்சு போய் பார்த்தேன்னா, நிச்சயம் உனக்கு பெரிய அளவுல சன்மானம் கிடைக்கும்.'

என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கொடுக்குற வேலையை, பட்டாளக்காரங்களுக்கு சுகம் தர்றதுக்காக அந்தப் பகுதியில சுத்தித் திரியிற ஒரு ஏழைப் பொண்ணுக்கிட்ட ஒப்படைச்சிட்டேன். ஆனா, நான்  அங்கே இல்லைன்னா இந்த ஆடுகளை யார் பாக்குறது? எனக்கு இந்த ஆடுகளைப் பிரிஞ்சு இருக்குறதுன்றதும் கஷ்டமான ஒரு விஷயம்தான். நான் இந்த ஆடுகளையும் இழுத்துக்கிட்டு, இந்த மூட்டையையும் தூக்கிக்கிட்டு பத்து நாட்களுக்கு முன்னாடியே மலையிறங்கிட்டேன். வர்ற வழியில ஆடுகளை மேய விட்டுக்கிட்டே வந்தேன். பத்து நாட்கள் கழிச்சு இன்னைக்கு இங்கே வந்திருக்கேன். யமுனை நதிக்கரையில இருந்த ஒரு புல்வெளியில நேத்து தங்கினோம். பக்கத்துல ஏதோ ஒரு மகானோட சமாதி இருந்துச்சு. நான் அங்கே வேலை பாக்குற ஆளுங்ககிட்டயும் அங்கே காவலுக்கு நின்ன போலீஸ்காரங்க கிட்டயும் இந்தச் சட்டியோட உரிமையாளரைத் தெரியுமான்னு கேட்டேன். அவங்க என்னை ஒரு மாதிரியா பார்த்தாங்க. போலீஸ்காரங்க அவுங்களுக்குள்ள "குசுகுசு'ன்னு என்னவோ பேசிக்கிட்டாங்க. ஒரு போலீஸ்காரன் கையில இருந்த கம்பால என்னோட ஆடுகளை வேணும்னே குத்தினான். அவங்க தேநீர் குடிக்கப் போயிருந்த நேரம் பார்த்து நான் ஆடுகளோட அந்த இடத்தைவிட்டு தப்பிச்சிட்டேன். என்ன இருந்தாலும், பண விஷயமாச்சே! பயப்படுறது நியாயம்தானே, ஸாப்! நான் இப்பவும் இந்தப் பொருட்களோட உரிமையாளர்  யார்ன்ற தேடல்லதான் இருக்கேன். இதுக்கு மட்டும் பெரிய ஒரு தொகை கிடைச்சிடுச் சுன்னா, என்னோட வாழ்க்கை நிலையே முழுசா மாறிடும். ரெண்டு நேரமும் தீயில சுட்ட, காய்ஞ்சு போன ரொட்டியும், ரெண்டு மிளகாய் வத்தலும், பால்போடாத தேநீரும் சாப்பிட்டு வாழ்ற என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பாசுமதி அரிசியால செஞ்ச சோறும், வெங்காயமும், எண்ணெய்யும் சேர்த்து சமையல் செய்த பருப்பும், மசாலா சேர்த்த வறுத்த உருளைக் கிழங்கும் நான் கொடுப்பேன். எல்லா பாலையும் விக்காம, கொஞ்சம் பாலை மீதி வச்சு அவங்களுக்கு தேநீரில பால் ஊத்திக் கொடுப்பேன். இந்த ஆடுகளுக்கு ராத்திரி நேரத்துல தங்குறதுக்கு புல் வேய்ஞ்ச ஒரு தொழுவம் உண்டாக்கணும், ஸாப். நீங்கதான் இந்தப் பொருள் களோட சொந்தக்காரர் யார்னு எனக்குக் கண்டுபிடிச்சுத் தரணும், ஸாப். உங்க முகத்தைப் பாக்குறப்பவே தெரியுது, பல ரகசியங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிற ஆள் நீங்கன்றது...''

அவன் என் கால்களில் விழுந்தான். நான் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனேன். ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் முகம்! எனக்கா? அப்படியானால், என்னைக் கண்டால்? நான் எனக்குள் உண்டான பரபரப்பை அடக்கிக்கொண்டு நிதான நிலைக்கு வந்தேன். மலைகளில், குளிர்ச்சியான புல்வெளிகளில் சுதந்திரமாக அலைந்து திரிந்த ஆடுகள் என்னுடைய நாற்பத்து மூன்று டிகிரி உஷ்ணமுள்ள தோட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றன. நான் என் மனைவியிடம் சொன்னேன்: “இந்த ஆளுக்கு ஒரு கப் தேநீர் கொண்டு வா. இந்த ஆடுகளுக்கு தண்ணி கொண்டு வா.''

அவள் கறுத்துப்போன முகத்துடன் தேநீர் கொண்டு வந்து வைத்தாள். ஆடுகளைப் பார்த்து தலையை ஒரு மாதிரி ஆட்டிய வாறு திரும்பிப் போனாள். நான் ஒரு தண்ணீர் தொட்டியை முன்னால் கொண்டு வந்து வைத்தேன். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீரைக் குடித்தன. அவை ஒவ்வொன்றும் தண்ணீர் குடித்து முடித்ததும் என் கண்களையே பார்த்தன.

இடையன் தேநீர் குடித்து முடித்ததும் நான் அவனிடம் சொன்னேன்: “நண்பனே... இது ஒரு பெரிய பொக்கிஷமா எனக்குத் தோணல. யாருடைய அஸ்திக் கலசத்தோட உடைஞ்ச பாகமோ இது, தெரியல... இதுக்கு யார் பணம் தருவாங்க?'' என் மனதில் கடந்துபோன சில சந்தேகங்களை நான் அவனிடம் கூறவில்லை. என்ன இருந்தாலும் நான் ஒரு ரகசிய போலீஸ்காரன் ஆயிற்றே!

“ஆகாயத்துல இருந்து விழுந்த பொருட்கள் இவை, ஸாப்...'' அவன் சொன்னான்: “என்னையே தேடி இந்தப் பொருட்கள் வந்துச்சுன்னு கூட சொல்லலாம். ஒரு ஏழையோட கஷ்டத்தைப் பார்த்து கடவுளே பரிசாகத் தந்த பொருட்களாச்சே! எதுவுமே இல்லாம நான் மறுபடியும் இந்த ஆடுகளைக் கூட்டிட்டு திரும்பவும் மலைஏறி வறுமை வாழ்க்கை வாழணுமா? இங்கேயிருந்துதானே ஸாப் இந்த இந்துஸ்தானியையே ஆளுறாங்க! அவங்கள்ல யாரோ ஒருத்தரோட பொக்கிஷங்கள்தான் இந்தப் பொருட்கள், ஸாப். இந்தக் கரிக்கட்டைகளும், எலும்புத் துண்டுகளும் ஒருவேளை வைரமும், மாணிக்கமுமா இருக்கலாம். அவுங்க இதை வாங்கிக் கிட்டு ஒரு சின்ன தொகை தந்தாலும் போதும்- நான் இந்த ஆடுகளைக் கூட்டிக்கிட்டு மலை ஏறிப் போறப்பவாவது பட்டினி இல்லாம போய்ச் சேருவேன்!''

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel