ஆகாயத்தில் இருந்து வந்த அஸ்தி கலசம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10063
நான் வீட்டுக்குள் போய் மனைவிக்குத் தெரியாமல் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கைக்குள் வைத்தவாறு அந்த ஆளிடம் கேட்டேன். “உனக்கு திரும்பி மலைக்குப் போகணும்னா எவ்வளவு ரூபா வேணும்.''
அவன் சொன்னான்: “ஸாப்... திரும்பி மலை ஏறணும்னா அதுக்கு பதினைஞ்சு நாள் ஆகும். ஆடுகளுக்கு வழியில புல் வாங்கணும். எனக்கு ரொட்டி வாங்கணும்னா, நாளொண்ணுக்கு நிச்சயம் மூணு ரூபா ஆகும்.'' அவன் என் முகத்தையே பார்த்தான்.
நான் கையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டியவாறு சொன்னேன். “நண்பனே... நீ டில்லியில ஆள் தேடி அலையிற வேலை பிரயோஜனமில்லாத ஒண்ணுன்றது என்னோட கருத்து. ஒருவேளை இந்த முயற்சி ஆபத்துலகூட போய் முடியலாம். இந்த எலும்புக் கலசத்தை, பொக்கிஷம்னு பொய் சொல்லி இருக்காங்க அந்தப் பட்டாளத்தைச் சேர்ந்தவங்க. இதுக்கு யாரும் காசு தர மாட்டாங்க. இதோட உபயோகம் ஏற்கெனவே முடிஞ்சு போன ஒண்ணு. நான் சொல்ற அறிவுரை என்னன்னா, இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம நீ திரும்பி மலைக்குப் போறது நல்லதுன்றதுதான். இன்னொரு முறை அஸ்திகலசம் ஆகாயத்துல இருந்து உன்னோட தலையில விழாம இருக்கணும்னு நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். பட்டாளக்காரங்க இதைப் பார்த்துச் சிரிக்கலாம். காரணம்- இந்த அஸ்தி கலசங்களை எறியிறதே அவங்கதானே!''
அவன் என்னை வியப்புடன் பார்த்தவாறு கேட்டான்: “நீங்க சொல்றது உண்மையா, ஸாப்?''
“ஆமா...'' நான் சொன்னேன். “இந்த உண்மைகள் தெரியாததுனாலதான் டில்லியில இருக்குற எலும்புக் கலசங்கள் உன்னோட தலையில விழுறதும், உன்னையும் ஆடுகளையும் பல நாட்கள் பட்டினி போடுறதும் நடக்குது. சீக்கிரம் திரும்பிப் போய் பட்டாளக்காரங்களை சந்தோஷப்படுத்துற அந்தப் பொண்ணுக் கிட்ட இருந்து உன்னோட அம்மா அப்பாவை விடுவிக்கப்பாரு. இல்லாட்டி அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்க, அவளைப் போக விடாமல்கூட அந்தப் பட்டாளக்காரங்க தடுக்கலாம்.''
அவன் தயங்கியவாறு நான் தந்த பணத்தை வாங்கினான். பிறகு... தலை நிலத்தில் படுகிற மாதிரி வணங்கினான். முதலில் நின்றிருந்த ஆட்டுக்குட்டியைக் கையில் எடுத்து என்னிடம் நீட்டினான். “ஸாப், இந்த ஆட்டுக்குட்டியை நான் காட்டும் நன்றின்னு நினைச்சு நீங்க வச்சுக்கோங்க. இவள் வளர்ந்து உங்களுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் நிறைய பால் தருவா. அருமையான- சாதுவான ஒரு தாய்க்குப் பிறந்த நல்ல மகள் இவ...''
நான் சொன்னேன்: “வேண்டாம்... இவ இந்தப் பட்டணத்தோட உஷ்ணத்துல காய்ஞ்சு கருகிப்போய்டுவா. ஒரு பிராணியையோ, மிருகத்தையோ எப்படி வளர்க்கணும்னு இங்கே இருக்குற யாருக்குமே தெரியாது. இவ மலையில குளிர்ந்த காத்துல பசும்புல் தின்னு ஆனந்தமா இருக்கட்டும். இந்த வறண்டுபோன வாழ்க்கை இவளுக்கு வேண்டவே வேண்டாம்...'' என் மனைவி இருண்டுபோன முகத்துடன் கதவுக்குப் பின்னால் நின்று என்னையே பார்த்தாள்.
இடையன் சொன்னான்: “நான் அப்ப... கிளம்புறேன், ஸாப்... நான் இனிமே டில்லிக்கு எந்தக் காலத்திலயும் வரமாட்டேன். இது ஒரு பெரிய பட்டணம்தான். இந்துஸ்தானத்தோட பிரபுக்கள் வாழ்ற இந்தப் பட்டணத்தைத் தேடி இப்பவாவது வர முடிஞ்சதே! ஸாப்... என்னைக்காவது நீங்க மலைஏறி வந்தா, கட்டாயம் என்னோட மலைச்சரிவுப் பக்கம் வரணும்- கிராமத்துக்குப் பின்னாடி அது இருக்கு.'' அவன் துணி மூட்டையைக் கட்டினான்.
நான் சொன்னேன்: “இந்தக் கரிக்கட்டைகளைத் திரும்பவும் சுமந்து செல்ல வேண்டாம். அதோ அங்கே இருக்குது என்னோட உரக்குழி. அதுல இதைத் தூக்கி ஏறி. அப்படியாவது ஒரு நன்மை இதை வச்சு நடக்கட்டும்.''
அவன் கரிக்கட்டைகளையும் எலும்புத் துண்டுகளையும் அந்தக் குழியில் வீசி எறிந்துவிட்டு, போர்வையைத் தோளில் இட்டான்.
“மனசுல இருந்தும் உடலை விட்டும் ஒரு பெரிய பாரம் இறங்கிடுச்சு, ஸாப்...'' அந்த ஆள் சொன்னான். “இப்பத்தான் மனசு சுத்தமா இருக்கு!'' இதைச் சொல்லிவிட்டு, என்னை மீண்டும் தொழுத அவன், ஆடுகளுடன் கேட்டைத் திறந்து வெளியே போனான்.
எழுத்தாளனே... இந்த ஆட்டிடையனின் பயணம் உனக்கு எந்தவிதத்திலாவது பிரயோஜனம் உள்ளதாக இருக்கின்றதா என்று பார். நீ என்றைக்காவது உன்னுடைய அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தால், டில்லியையும் கண்டு, தேவைப்பட்டால் கங்கோத்ரியைத் தாண்டி உள்ள அந்த இடையனின் கிராமத்திற்கே கூட நாம் ஒருமுறை போய் வரலாம். அந்த ஆட்டுக்குட்டி இப்போது எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. இப்படிக்கு- உன்னுடைய அன்பு நண்பன்.'
நான் ஒரு பேப்பரை எடுத்து எழுதினேன்: "போலீஸ்காரனான என்னுடைய நண்பனே, உன்னுடைய ஆட்டு இடையன் பற்றிய கதையைப் படித்தேன். ஆகாயத்தில் இருந்து வந்த ஓசையையும், ராட்சசத்தனமான ஒலியையும் நினைத்துப் பார்த்தபோது பயங்கர மாகத்தான் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டி நல்ல ஒரு கதாபாத்திரம். ஆனால், என்னுடைய படைப்புகளுக்கு இது எந்தவிதத்திலும் பிரயோஜனமாக இருக்காது. என்னுடைய துப்பறியும் கதைகளுக்குத் தேவை நீதான். ரகசிய போலீஸ்காரனே, மனம் திறந்து கூறு. உண்மையிலேயே அந்தக் கலசத்தில் என்ன இருந்தது? எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த அஸ்தி கலசத்தைத் தொடர்ந்து ஒரு பேய் உன் வீட்டுக்குள் நுழைவதும், ரகசிய போலீஸ்காரனான உனக்கும் அந்த பேய்க்கும் ஏற்படும் மோதலும்... இது ஒரு அருமையான கதைக்கு உரிய விஷயம். டில்லிக்கு வர பிரியம் இல்லாமல் இல்லை. நான் அங்கு பயணமாகிவிட்டால் கதைகள் எழுதுவது கிடக்கட்டும்- இங்குள்ள விவசாய வேலைகளை யார் பார்ப்பது? உன்னுடைய அன்பு நண்பன்!'
கடிதத்தை தபால் பெட்டியில் போடும்போது நான் மகிழ்ச்சி யுடன் நினைத்துப் பார்த்தேன். அவன் ஒரு போலீஸ்காரனாக இருந்தால் என்ன? ஆகாயத்தில் இருந்து அஸ்திகலசம் விழுந்தது என்பதை நம்பவும் ஆட்டுக்குட்டியைப் பற்றிக் கவலைப்படவும் அவனால் முடிகிறதே! அந்த வகையில் சந்தோஷமே. ஹா... ஹா... அஸ்திகலசம்! ஆகாயத்தில் இருந்து...!