ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7066
இரவில், “பயப்படாதே...!'' என்று யாரோ மெதுவான குரலில் சொல்வது காதில் விழுந்து தூக்கம் கலைந்து எழுந்தாள் பெண் எழுத்தாளர். சிம்னி விளக்கையும், அறையையும் இப்போது காணோம். நட்சத்திரங்கள் அவளுக்கு மிகமிக அருகில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஆனால், அவளுக்கு நட்சத்திரங்களுடன் அதற்கு முன்பு நெருங்கிய உறவு கிடையாது. காற்று மெதுவாக அங்கு வீசிக்கொண்டிருந்தது. அவள் லேசாக நடுங்கியவாறு தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். காற்றில் ஆடிக்கொண்டிருந்த வெள்ளை நூல்கள் அவளைச் சுற்றிலும் காட்சியளித்தன. ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் மேலே உட்கார்ந்திருப்பது மாதிரி கண்கள் பார்க்குமிடங்கள் எல்லாவற்றிலும் வெள்ளை நூல்களே காட்சியளித்தன. அவள் தலையை உயர்த்தி மேலே பார்த்தாள். நட்சத்திரங்களுக்குக் கீழே முடிவற்ற வெளியை நோக்கி ஒன்றை அடுத்த இன்னொன்றாய்க் காட்சியளிக்கும் வெள்ளை நூல்கள். “சந்திரன்... என்னோட சந்திரன்...'' அவள் சொன்னாள். நிலவு அப்போது ஆகாயத்தின் ஒரு மூலையில் காய்ந்து கொண்டிருந்தது. மீண்டும்- கடைசிமுறையாக பெண் எழுத்தாளர் கீழே பார்த்தாள். அவளையும் அறியாமல் அவளின் உதடுகளில் இருந்து "வீல்...’’ என்ற சத்தம் எழுந்தது. தான் இருந்த நூலை அவள் இறுகப் பிடித்துக் கொண்டு நடுங்கியவாறு, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விட்டுப் போய்க்கொண்டிருந்த உணர்வுகளை அவள் கடிவாளம் போட்டு இழுத்துக்கொண்டிருந்தாள். கீழே... இன்னும் கீழே... அவள் குதித்தாள். ரொம்பவும் கீழே... சில வெளிச்ச சுருள்கள் நீந்திப் போய்க்கொண்டிருந்தன. “அய்யோ...'' பெண் எழுத்தாளர் கத்தினாள். “என் தெய்வமே, என்னைக் கீழே விழ வச்சிடாதே. நான் செஞ்ச பாவங்களுக்கு என்னை தண்டிச்சிக்கோ. உன்னோட உலகத்துல இப்படி அதலபாதாளத்தில் என்னை விழ வைக்காதே. எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு...''
“பயப்படாதே...'' மீண்டும் யாரோ மெதுவான குரலில் சொன்னார்கள். பெண் எழுத்தாளர் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: “ஏய்... எனக்கு பயமெல்லாம் கிடையாது. செத்துப் போயிட்டா, அதுக்குப் பிறகு என்ன பயம் வேண்டிக் கிடக்கு? எனக்கு மரணத்தை மிகவும் பிடிக்குது. ஆனால், அதற்காக இந்த அப்பாவி ஆத்மாவை ஆழத்துல தள்ளி விடலாமா?'' சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்: “என் கதைகளை எல்லாம் இன்னும் முழுமையாகச் சொல்லி முடிக்கலைன்ற கவலை எனக்கு இருக்கு. ஆனால், பரவாயில்ல... அதனால் என்ன? அடுத்த பிறவியில சொல்லிட்டா போகுது... ஆனால், அடுத்த பிறவியில நான் வேற யாராவதாக இல்ல இருப்பேன்! அப்போ இந்தக் கதைகளை யாரு சொல்றது?''
தன் கண்களில் அரும்பிய கண்ணீரைத் துடைத்தவாறு பெண் எழுத்தாளர் சொன்னாள்: “இதுல அழுறதுக்கு என்ன இருக்கு? கதைகள்ன்றது மோகங்கள் மட்டும்தானே? என்னோட இதயத்தின், உடம்பின் நிறைவேற்றப்படாத எத்தனையோ மோகங்கள், விருப்பங்கள் இனியும் இருக்கு. அதுக்காக நான் அழணுமா?'' தொடர்ந்து கண்களில் இருந்து வழிந்த வண்ணம் இருந்த கண்ணீரை அவள் கையால் துடைத்தாள். அவள் முகம் இப்போது அமைதியே வடிவமானதாகவும், அதே நேரத்தில் ஒருவித கம்பீரம் கொண்டதாகவும் இருந்தது. அவள் படங்களில் பார்த்திருக்கிற ஆத்மாக்களின் முகங்கள் அப்படித்தான் இருந்தன.
“பயப்படக்கூடாது...'' பல குரல்கள் ஒன்று சேர ஒலித்தன. அந்தக் குரல்கள் மேலும் கூறின: “வலையில் இருக்குற யாரும் கீழே போறது இல்ல... வேணும்னா நீயே குதிச்சுப் பாரேன்.'' அந்தக் குரலில் அன்பு இழையோடி இருந்தது. பெண் எழுத்தாளரின் மனதில் ஒருசிறு தடுமாற்றம் உண்டானது உண்மை என்றாலும் அவள் புன்சிரிப்புடன் தலையை ஆட்டினாள். இரு பக்கங்களிலும் அவள் தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டாள்.
அவள் புன்னகை சிந்தியவாறே இருந்தாள். “பிசாசுகளாக இருந்தாலும், ஆவியாக இருந்தாலும், என்னை நான் அறிஞ்சிருந்தா போதும்.'' அவள் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிற மாதிரி கூறிக்கொண்டாள். தன்னைச் சுற்றிலும் ஒலித்த குரல்களில் ஒருவித அன்பு கலந்திருந்தாலும், மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உலகத்தில் உள்ளே இருக்கும் நோக்கங்களை யாரால் புரிந்துகொள்ள முடியும்? அவள் இப்போதும் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
திடீரென்று அவள்முன் ஒரு ஊஞ்சல் கீழே இறங்கிவந்தது. அதன் நுனியில் தீ நாக்குபோல பிரகாசமான கண்களைக் கொண்ட- நீலமும் சிவப்பும் வண்ணங்களாகக் கொண்ட அழகான ஒரு எட்டுக்கால் பூச்சி தொங்கிக் கொண்டிருந்தது. அது அவளைப் பார்த்துச் சொன்னது: “கதை எழுதும் பெண்ணே... பயப்படாதே. இது உன்னோட மரணமில்ல... இது எங்களின் உலகம். நாங்க உன்னை இங்கே கொண்டு வந்திருக்கோம்...''
பெண் எழுத்தாளர் பதைபதைக்கும் மனதுடன் கேட்டாள்: “நீங்க என்னை சாப்பிடப் போறீங்களா? உங்களுக்கு அப்படிச் செய்ய என்ன உரிமை இருக்கு?''
சிலந்தி ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு சொன்னது: “நேத்து நீ மீனைப் பொரிச்சு சாப்பிட்டியே! அதற்கு என்ன உரிமை உன்கிட்ட இருக்கு?'' அதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்த மீனின் திறந்த கண்களையும், மினுமினுத்துக் கொண்டிருந்த செதில்களையும் தன் ஞாபகத்தில் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தாள் அவள் திடீரென்று ஒருவித உணர்வு தோன்ற, சொன்னாள்: “என்னோட நாக்குக்கு சுகம் தந்த மீனே, உனக்கு நன்றி. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீ எனக்காக தந்த உன் உடலுக்கு நன்றி.'' அவள் தலைகுனிந்து, லேசாகக் கண்களை மூடி தனக்கு முன்னால் நிலவு காய்ந்து கொண்டிருந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மீண்டும் சொன்னாள்: “நான் இதுவரை சாப்பிட்டிருக்கும் எல்லா உயிரினங்கள்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அவங்களுக்கு நன்றி சொல்றேன். அரிசியைத் தந்த நெல், சேவல், ஆடு, முருங்கைக்காய் எல்லார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். கரும்பே, மாம்பழமே, பலாப்பழமே... என்னை மன்னிச்சிடுங்க. என்னோட உடம்பு உங்க உடம்புதான். என்னோட கதைகள் உங்களோட மரணத்தின் நினைவுச் சின்னம்தான். என்னை மன்னிக்கணும்.'' அவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.
அப்போது அவளுக்கு முன்னால் இருந்த அழகான சிலந்தி சொன்னது: “கதை எழுதும் பெண்ணே... நாங்கள் உன்னை சாப்பிடப் போறது இல்ல... நீ எங்களின் விருந்தாளி. நீ கொஞ்சம் அமைதியா இருந்தா, ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உன்கிட்ட நாங்க பேச வேண்டியது இருக்கு...''
பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என்னை இந்த ஆழமான இடத்துல இருந்து முதல்ல மாத்துங்க. இங்கே இருந்துக்கிட்டு நான் எப்படி அமைதியா இருக்க முடியும்?''