ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7066
எட்டுக்கால் அழகி சிரிப்பது அவள் காதில் விழுந்தது. அது அவளைப் பார்த்துச் சொன்னது: “நான் உன்னோட பயத்தைப் போக்கட்டுமா? தைரியமா இரு...''
ஒரு மென்மையான கால் அவளுக்கு நேராக நீண்டது. அவள் எதையும் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, அந்தக் கால் அவளைக் கீழ்நோக்கித் தள்ளியது. ஒரு பெரிய கூச்சலிட்டவாறு அவள் கீழே விழுந்தாள். கூச்சல் முடியும்போது பார்த்தால் அவள் ஒரு வெள்ளை ஊஞ்சலின் நுனியில் தொங்கியவாறு மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். மேலே வெள்ளை நூல்கள் ஆயிரக்கணக்கில் காட்சியளித்து, வானத்தில் இருந்த நட்சத்திரங்களை மறைத்துக் கொண்டிருந்தன. கீழே இங்குமங்குமாய்த் தெரிகிற வெளிச்சத்தின் அலைகள். நடுங்கியவாறு மேலே பார்த்த பெண் எழுத்தாளர் புன்சிரிப்பைத் தவழ விட்டாள். அவள் சொன்னாள்: “நண்பர்களே, என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு நான் எப்பவும் பயந்தது இல்ல... என் உடல் என்னை விட்டுப் போகப்போகுதேன்ற பயம்தான். இனி என்கிட்ட எந்த பயமும் கிடையாது. நான் எதையும் கைவிடவும், விழவும் படிச்சுக்கிட்டேன்...''
மேலே இருந்து அழகான சிலந்தியின் குரல் கேட்டது: “இவ்வளவு சீக்கிரத்துல படிச்சிட்டியா என்ன? அப்படின்னா இன்னும் நீண்ட தூரத்துக்கு உன்னை விழ வச்சிருக்கலாமே! பயமும் முழுசா போயிருக்குமே!''
“வேண்டாம்...'' நெஞ்சம் பதைபதைக்க பெண் எழுத்தாளர் சொன்னாள்: “வீழ்ச்சி என்னன்றதை நான் தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்குப் போதும்.''
“அப்படின்னா வா...'' சிலந்தி சொன்னது: “நாம பேசிக்கிட்டு இருப்போம்.''
அவள் தொங்கிக் கொண்டிருந்த நூல் அவளை மேலே உயர்த்தத் தொடங்கியது. அதோடு அது அவள் உடலைச் சுற்றவும் ஆரம்பித்தது. “என் கால்களை அசைக்கவே முடியலியே!'' பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என் கைகளை உடம்போடு சேர்த்து நூல் கட்டுதே! என்னோட கண்ணையும், மூக்கையும், வாயையும் இவங்க அடைக்கிறாங்களே! என் தெய்வமே... நான் சதித்திட்டத்துல மாட்டிக்கிட்டேனே! நான் நினைச்சது மாதிரி இவங்க என்னை ஏமாத்திட்டாங்களே! இந்த நூல்ல மாட்டிக்கிட்டு நான் கொஞ்சம் கொஞ்சமா அழியிறப்போ, இவங்க என்னை பங்கு போட்டு சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.'' அவள் அழ முயற்சித்தாள். ஆனால், பயத்தால் அவள் வாய்க்குள்ளிருந்து சத்தமே வரவில்லை. "என்னைக் காப்பாத்து...' அவள் மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். அவள் முகம் முழுமையாக நூலிழையால் சுற்றப்பட்டிருந்தாலும், அவளால் நன்கு மூச்சுவிட முடிந்தது. அவள் மேலே செல்வது நின்றது. இந்த நூலிலேயே தொங்கி கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தைத் தழுவப் போவதை நினைத்து அவளின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும், இந்த நினைப்பு அவள் மனதில் தோன்றி அவளைப் பாடாய்ப் படுத்தியது. நேரம் செல்லச்செல்ல அவளுக்கு சுயநினைவே அற்றுவிடும் போலிருந்தது. அப்போது சிலந்தி வரும் ஓசை மெதுவாக அவளின் காதில் விழுந்தது. “கைகளால ரெண்டு பக்கமும் தள்ளு.'' சிலந்தி சொன்னது. பெண் எழுத்தாளர் தன் பலம் முழுவதையும் செலுத்தி வேகமாகத் தள்ளினாள். ஆனால், அதற்கு அவ்வளவு சக்தி உண்மையிலேயே தேவையில்லை. அவள் தொட்டதும், அவளைச் சுற்றிக் கட்டியிருந்த வலை முழுவதுமாக அறுந்தது. அவள் அடுத்த நிமிடம் படுவேகமாக எழுந்து நின்றாள். அவளுக்கு முன்னால் ஏகப்பட்ட ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருந்தன. அவற்றில் பல கண்கள் காத்திருந்தன.
“திரும்பவும் பயந்துட்டியா?'' அழகான எட்டுக்கால் பூச்சி கேட்டது. “தொட்டால் அறுந்துபோற அளவுக்கு இருந்த கட்டுகள்தானே? இருந்தாலும் கதை எழுதும் பெண்ணே... நீ இதைப்பற்றி நினைச்சுப் பார்க்கவே இல்லியே!'' மென்மையான தன் கால்களைக் குலுக்கியவாறு எட்டுக்கால் பூச்சி சிரித்தது. அதைக் கேட்டு பெண் எழுத்தாளருக்கு ஒரே நேரத்தில் கோபமும் மகிழ்ச்சியும் உண்டானது. அவள் சொன்னாள்: “நினைச்சுப் பார்த்து கதை எழுதுறது இல்ல... பயந்தும், கவலைப்பட்டும், மகிழ்ச்சி அடைஞ்சும்தான்...''
அப்போது ஊஞ்சலில் தொங்கிக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சிகள் பெண் எழுத்தாளரை மரியாதையுடன் பார்த்தவாறு, அழகான சிலந்தியிடம் கூறின: “இவ அழுததற்கான காரணம் என்னன்னு கேளு...''
அழகான சிலந்தி அந்தப் பெண் எழுத்தாளரிடம் கேட்டது: “நாங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்க விரும்புறோம். கேட்கட்டுமா?''
“கேளு...'' அவள் சொன்னாள்.
“நீ கதை எழுதுறதை நாங்க பார்த்தோம். எழுதி முடிச்சதும், அதுல கண்ணீர் சிந்துறதையும் பார்த்தோம். ஒவ்வொரு கதையையும் எழுதி முடிச்சதும், அதை எழுதின எழுத்தாளர் கண்ணீர் சிந்துவாங்களா என்ன? சந்தோஷமான கதையாக இருந்தாலும் துக்கம் நிறைஞ்ச கதையாக இருந்தாலும்..''
அதைக் கேட்டு அந்தப் பெண் எழுத்தாளர் விழுந்து விழுந்து சிரித்தாள். “முட்டாள் நண்பர்களே... அது கதை இல்லை. என்னை விட்டுப்போன என்னோட காதலனுக்கு நான் எழுதிய கடிதம் அது. நீங்க அதைப் படிச்சுப் பார்த்தீங்களா?'' அவள் கேட்டாள்.
“இல்ல... உன்னோட கண்ணீரைப் பார்த்து நாங்க உண்மையிலேயே பயந்துட்டோம்...''
“அப்படியா?'' பெண் எழுத்தாளர் மகிழ்ச்சியுடன் சொன்னாள்: “கண்ணீர்- சொல்லப்போனால், எங்கள் மனதுக்கு ஆறுதலைத் தரும். நாங்களே அதை வரவைக்கிறோம். நாங்களே அதை ரசிக்கிறோம். நாங்களே அதைத் துடைக்கவும் செய்யிறோம். கண்ணீரோட, சிரிப்போட முடிவுதான் கதை.''
“அப்படின்னா நாங்க கேட்க நினைக்கிறதைக் கேட்கலாமா.'' சிலந்தி கேட்டது.
பெண் எழுத்தாளர் சொன்னாள்: “சொல்லுங்க... நான் பயமே இல்லாம சந்தோஷமா இருக்கேன்...''
பல்லாயிரம் ஊஞ்சல்கள் அவளை நெருங்கி வந்து அவளைச் சுற்றி வளைத்தன. சுற்றிலும் ஒரே நிசப்தம். பெண் எழுத்தாளர் பதைபதைத்துப் போய் சுற்றிலும் பார்த்தாள். அப்போது நீலமும் சிவப்பும் கொண்ட அழகான சிலந்தி தன் கண்களை அகல விரித்துக்கொண்டு அன்புடன் அவளைப் பார்த்துச் சொன்னது: “எங்களுக்கு ஒரு கதை சொல்ல முடியுமா? நாங்க அதற்காகத்தான் உன்னைக் கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கோம்.'' அவள் அதற்கு அன்பு மேலோங்கச் சொன்னாள்: “நிச்சயம் சொல்றேன். என்ன கதை உங்களுக்கு வேணும்? சந்தோஷமான கதையா- சோகக் கதையா?''
“உன்னோட கதை...'' ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டிருந்த எல்லா சிலந்திகளும் ஒரே நேரத்தில் கூறின.
“ஆனால், கதை சொல்லி முடிக்கிறப்போ... நான் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும்...'' அவள் சொன்னாள்.
“பரவாயில்லை...'' ஊஞ்சல் நுனிகளில் இருந்து மீண்டும் ஒருமித்த குரல்கள்: “அந்தக் கண்ணீர் எங்களையும் ஆறுதல் படுத்தட்டும்...''