ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7066
அழகான தோற்றத்தையும், நீலக்கண்களையும், மென்மையான கால்களையும் கொண்ட ஒரு எட்டுக் கால் பூச்சி, வலையிலிருந்து ஊஞ்சலில் தொங்குவது மாதிரி தொங்கிக் கொண்டே கீழே வந்து தன் முகத்திற்கு முன்னால் நின்று தன்னை நோக்கிச் சிரிப்பதையும், பிரகாசமான கண்களுடன் தன்னைப் பார்ப்பதையும், பஞ்சுபோன்ற கால்களால் நடனமாடுவதையும் அந்தப் பெண் எழுத்தாளர் தன் கனவில் கண்டாள்.
முகத்தின் மேல் பட்ட நீல வெளிச்சத்தில் புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு அவள் தன் நீண்டு மெலிந்த அழகான கைவிரல்களை எட்டுக் கால் பூச்சிக்கு நேராக நீட்டினாள். அப்போது அந்தப் பூச்சியும் ஊஞ்சல்போல் தொங்கிக் கொண்டிருந்த நூலும் அவளை விட்டு தூரத்தில் போனார்கள். அந்தப் பெண் எழுத்தாளர் கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் திரியைக் குறைத்து வைத்திருந்த சிம்னி விளக்கு வெளிச்சம் அவளை இருகரம் நீட்டி அழைத்தது. அந்தச் சிம்னி விளக்கு எங்கோ இருக்கும் ஒரு அழகான மலையில் குடியிருக்கும் மனிதர்கள் தந்தார்கள் என்று, அவளின் மூன்றாவது காதலன் அவளுக்குப் பரிசாகக் கொண்டுவந்து தந்தது. அந்தக் காதலன் இப்போது அவளுடன் இல்லை. காற்றில் பறக்கும் சருகைப்போல அவன் எங்கோ காணாமல் மறைந்தே போனான். என்றாலும், அவன் தந்த அந்த சிம்னி விளக்கொளியில் ஒரு சிறு குழந்தையைப்போலப் படுத்துக்கொண்டு தூங்கவும், எழுதவும் அவள் முழுமையாக விரும்பினாள். அந்த விளக்கு தன்னுடைய ஞாபகச் சின்னமாக அவளிடம் இருக்கும் என்று அந்தக் காதலன் அன்று எதிர் பார்த்திருப்பானா என்ன? யார் கண்டது- காதலிக்கும் இளைஞர்கள் தங்கள் மனதில் பூட்டி வைக்கும் ஆயிரம் எண்ணங்களில் இந்த மாதிரியான நினைவுச் சின்னங்கள் பற்றிய விஷயங்கள்கூட இருக்க வாய்ப்பு இருக்கிறதே!
அவளது முதல் காதலனும், அவன் மனைவியும் ஒருமுறை அந்தப் பெண் எழுத்தாளரைப் பார்க்க வந்திருந்தார்கள். அவள் தன் மனதில் இருந்த பழைய ஞாபகங்களை சற்று நீக்கி வைத்துவிட்டு அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றாள். தேநீரும் சிப்ஸும் இனிப்பு பலகாரங்களும் தந்து உபசரித்தாள். அவளது காதலன் பழைய ஞாபகங்களை மனதிற்குள் நினைத்தவாறு அவளைக் கூர்மையாகப் பார்க்க, அவளோ மிகவும் களைப்பாக இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு, பாதி கண்களை மூடியவாறு அவன் மனைவியைப் பார்த்துப் புன்சிரிப்பைத் தவழ விட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் போனதும் கதவை இறுக மூடி, மூடிய கதவின்மேல் சாய்ந்தவாறு கண்களை மூடியபடி நீண்ட நேரம் அவள் நின்று கொண்டே இருந்தாள். சிறிது நேரம் சென்றதும், வாசல் கதவை மீண்டும் திறந்து வைத்து, மீதியிருந்த இனிப்பு பலகாரங்களில் ஒன்றை எடுத்து ருசித்தவாறு மீண்டும் அவள் மட்டும் தனியானாள். தன் இரண்டாவது காதலனை அவள் புகைவண்டியில் வைத்துப் பார்த்தாள். அவன் தன் முகத்தை எங்கே அவள் பார்த்துவிடப் போகிறாளோ என்று ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இந்த கம்பார்ட்மெண்ட்டிலிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு வண்டியின் ஓட்டத்தோடு ஓடியவாறு நடுவில் இருந்த வெஸ்ட்டபிள் வழியாகப் போய் அவள் பார்வையிலிருந்து தப்பித்துக்கொண்டான்.
தனிமையையும், காற்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதையும் அனுபவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் எழுத்தாளர், தான் ஆசைப்பட்டு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் நிறைந்திருக்கும் தன்னுடைய அறையைப் பார்த்தவாறு சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருக்கையில், என்ன நினைத்தாளோ தன் மார்பகத்தை விரலால் தொட்டுப் பார்த்தாள். அவை மென்மையாகவும், குளிர்ச்சியாகவும், பெரிதாகவும் இருந்தன. அவள் தன் இரு கைகளையும், உடலை வருடியபடி கீழ்நோக்கிக் கொண்டு போனாள். “என் உடல் புனிதமானது.'' அவள் தனக்குள் சொன்னாள். அடுத்த நிமிடம் எழுந்து முழங்காலை மடித்து படுக்கையிலேயே உட்கார்ந்தாள். தன் கைகளால் இடுப்பையும் தொடைகளையும் கால்களையும் தொட்டுப் பார்த்தாள். அவற்றைச் செல்லமாக வருடினாள். “கதை சொல்றதுக்கு விருப்பப்படுற உடல்.'' அவள் சொன்னாள். “குழந்தைகளின் உஷ்ணம் எப்படி இருக்கும்னு தெரியாத உடல்.'' கைகளைக் கீழ்நோக்கிக் கொண்டுபோன அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் சொன்னாள்: “அமைதியா இருக்குற உடல்...'' அவள் மீண்டும் படுத்தாள். கைகளை முகத்திற்குக் கொண்டு போய், அங்கு அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை வாசனை பிடித்தவாறு, தான் கண்ட கனவை மீண்டும் மனதில் நினைத்துக்கொண்டே கண்களைமூடிக் கிடந்த அவள், சிறிது நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
சிம்னி விளக்கு புகையை வெளியே விட்டவாறு எரிந்து கொண்டிருந்தது. அதன் ஜுவாலை எந்தவித பரபரப்பும் இல்லாமல் சீராக இருந்தது. ஜன்னல் வழியாக அமைதியாக மின்மினிப் பூச்சிகளின் ஒரு கூட்டம் தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல அறைக்குள் நுழைந்தது. அவர்கள் "மினுக் மினுக்’’ என்று விளக்கை எரியவிட்டவாறு அறை முழுக்க பறந்து கொண்டிருந்தனர். படுத்துக் கொண்டிருந்த பெண் எழுத்தாளரின் அமைதியான முகத்திற்கு முன்னால் நட்சத்திரங்களைப்போல அந்த மின்மினிப்பூச்சிகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. அவளின் உதடுகளையும் விரல்களையும் அந்தப் பூச்சிகள் அருகில் பறந்து பார்த்தன. அவை வெளியே பறந்து சென்றபிறகு, இரண்டு ஆந்தைகள் அறைக்குள் நுழைந்தன. அவற்றின் சிறகு வீசலில், சிம்னி விளக்கின் ஒளி இப்படியும் அப்படியுமாய் ஆடியது. அவற்றின் பிரகாசமான கண்களுக்குக் கீழே அந்தப் பெண் எழுத்தாளர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தின் அருகில் பறந்தவாறு அந்த ஆந்தைகள் என்னவோ ஆலோசித்துக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில்- பாதி இரவு கழிந்திருக்கும் சமயத்தில் அவை நிலவொளியில் போய் மறைந்துவிட்டன.
அப்போது மேல்கூரையில் கலை வேலைப்பாடுகளுடன் அமைந்த பலகைகளில் இருந்து ஊஞ்சலென தொங்கிக்கொண்டிருந்த இழைகள் கீழே இறங்கின. இழைகளின் நுனியில் நீலமும் மஞ்சளும் தங்க நிறமும் கொண்ட கண்கள், பஞ்சுபோன்ற கால்களை ஆட்டியவாறு அந்தப் படுத்துக்கிடக்கும் பெண்ணையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் ஊஞ்சல்கள் அவள் எப்போதும் உட்கார்ந்து எழுதப் பயன்படுத்தும் மேஜைக்குமேலே தொங்கியவாறு ஆடின. மேஜைமேல் அவள் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கதையின் எழுத்துகளை பிரகாசமான கண்களாலும், மென்மையாக அசைந்துகொண்டிருந்த கால்களாலும் அந்த எட்டுக் கால் பூச்சிகள் சோதித்துப் பார்த்தன.
அந்தப் பெண் எழுத்தாளரின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அவளின் வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக வந்த அழகான இளம்பெண், அவளின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுக் குளிப்பாட்டினாள். இளம் பெண்ணின் பலம் பொருந்திய, அதேசமயம் அழகான விரல்கள் பெண் எழுத்தாளரின் உடலை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது மாதிரி வருடின. பெண் எழுத்தாளர் அந்த இளம் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்: