ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7066
“என் உடலை உனக்குப் பிடிச்சிருக்கா?'' அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல், மவுனமாகச் சிரிக்க மட்டும் செய்தாள். பெண் எழுத்தாளர், எண்ணெய் பட்டிருக்கும் அந்த இளம் பெண்ணின் கைகள் இரண்டையும் தன் கையில் எடுத்து நன்றியுடனும், பாசத்துடனும் அவற்றின்மீது தன் உதடுகளைப் பதித்து முத்தம் தந்தாள். பிறகு... லேசாக சுட வைக்கப்பட்டிருக்கும் நீர் தன் உடலில் பட்டு கீழ் நோக்கி வழிந்து போவதை- முழங்காலை மடித்து உட்கார்ந்து கொண்டு, கைகள் இரண்டையும் முட்டியைச்சுற்றிக் கோர்த்தவாறு மனதில் மகிழ்ச்சி பொங்க அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதும் அவளின் உதடுகளில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கண்களை மூடியிருந்த பெண் எழுத்தாளர் வழிந்த நீரைக் கையால் வழித்துவிட்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது லேசாக அடைக்கப்பட்டிருந்த கதவு வழியாக இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் சிரித்தவாறு கேட்டாள்: “நான் குளிக்கிறதை நீ ஏன் பாக்குறே? என்கிட்ட இருக்குறது இதுதான். இந்த சாதாரண உடம்பு... கதை சொல்ற உடம்பு.'' அடுத்த நிமிடம் ஊஞ்சலில் தொங்கிக் கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சியின் இரு கண்களும் இழையை வேறு பக்கம் செலுத்தியதால் கதவு இடைவெளியை விட்டு மறைந்து போயின.
அன்று மாலை நேரத்தில் அவள் வீட்டு முற்றத்தின் ஒரு மூலையில் இருந்த பழமையான, கறுப்பும் வெள்ளையுமாக காளான் பூத்துப் படர்ந்திருக்கும் கிளைகளைக்கொண்ட செண்பக மரத்திற்குக் கீழே அமர்ந்திருந்தாள். ஒரு கதையின் இறுதிப் பகுதிகளை அவளின் கை விரல்கள் எழுதிக்கொண்டிருந்தன. உதடுகள் மெல்ல வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அவள் வாயில் முணுமுணுத்த வார்த்தைகள் காதில் முழங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பெண் எழுத்தாளர் அவளுக்கே தெரியாத சில வார்த்தைகளால் வலை விரித்துக் காத்திருந்தாள். அப்போது கதையின் நிகழ்ச்சிகள் கூடு தேடிவரும் பறவைகளைப்போல அவளுக்குச் சுற்றிலும் நின்று சிறகடித்துக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் செண்பக மலர்கள் காற்றில் விழுந்து கிடந்தன. அமைதியான கண்களுடன் அவள் தூரத்தில் மலையை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும் பனிப்படலத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். அப்போது செண்பக மரத்தின் கிளையிலிருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்து தன்னுடன் இணைத்தவாறு ஒரு ஊஞ்சல் மேலேயிருந்து கீழ்நோக்கி நிசப்தமாக இறங்கிக் கொண்டிருந்தது. ஊஞ்சலில் சிக்கியிருந்த செண்பக மலர் வாய்விட்டுச் சிரித்தவாறு காற்றில் ஆடியது. ஊஞ்சல் நுனியில் இரண்டு பொன்நிறக் கண்கள் அவளை நோக்கிப் பிரகாசித்தன. அந்தக் கண்களுக்கு நேராகத் தன் கைகள் இரண்டையும் நீட்டினாள். ஊஞ்சல் நுனியில் தொங்கிக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சி ஒரு முல்லைப் பந்தல்மேல் போய் மறைந்தது. செண்பக மலர் அவளின் மடியில் வந்து விழுந்தது. அவள் அதை எடுத்து அதன் மணத்தை அனுபவித்தவாறு செண்பக மரத்தின் கிளைகளை தலையை உயர்த்திப் பார்த்தாள். சாயங்கால நேரத்தில் சிரித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான செண்பக மலர்களுக்கு இடையே பல வண்ண கண்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதாக அவளுக்குப் பட்டது. அவள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி விரல்களை நடனமாடுபவர்கள் ஆட்டுவது மாதிரி ஆட்டிக்கொண்டே சொன்னாள்: “இந்த விரல் நுனியில் எத்தனையோ கதைகள்! கேக்குறீங்களா?''
மறுநாள் அவள், தன் மூன்றாவது காதலனுக்கு, அவனது ஒரு பழைய கடிதத்தில் இருந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினாள்: "அன்பு காதலனே, நீங்கள் தந்த மண்ணெண்ணெய் விளக்கு இப்போதும் என் எழுத்துகள்மீது வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால், உங்களின் பெயரைக்கூட நான் மறந்துவிட்டேன். என் பெயரை எப்போதோ நீங்கள் மறந்தாகி விட்டது. நான் இப்போது எட்டுக்கால் பூச்சிகளைத்தான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். அழகிகளும், அழகர்களுமாக இருக்கிற அவற்றின் பல வண்ணக் கண்களும்... மென்மையான கால்களும்... பஞ்சு போன்ற உடலும்... இந்த எட்டுக்கால் பூச்சிகள் ஊஞ்சலில் ஆடியவாறு எப்போதும் எனக்கு அருகிலேயே இருக்கின்றன. அதோடு நின்றால் பரவாயில்லை. நான் போகும் இடங்களுக் கெல்லாம் அவை என்னைப் பின்தொடர்கின்றன. இதைக் கேட்கிறபோது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறதா? என் உடல் உங்களின் ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா? அது சிறியதும் பெரியதுமான சந்தோஷங்களுக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறது. இனி எங்காவது ஒரு எட்டுக்கால் பூச்சியைக் காண வேண்டி நேர்ந்தால், என் பெயரை ஞாபகப்படுத்திப் பார்க்க முயலுங்கள்.’’ அவள் பேனாவை மூடிவைத்துவிட்டு, சிறிது நேரம் வாய்விட்டு அழுதாள். அவள் வைத்திருந்த அகராதிக்குப் பின்னால் இருந்து மூன்று ஜோடிக் கண்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தன. அவள் நாற்காலியை விட்டு எழுந்து சற்று நீங்கிப்போன பிறகு, மூன்று எட்டுக்கால் பூச்சிகளும் நீண்டு மெலிந்த பாதங்களால் தாள்களுக்கும் வாடிப்போன பூக்களுக்கும் பேனாக்களுக்கும் புத்தகங்களுக்கும் மத்தியில் நடந்து கடிதத்தின்மேல் விழுந்திருந்த கண்ணீர்த் துளிகளை நக்கிப்பார்த்தன. ஒரு நிமிடம் அந்தப் பூச்சிகள் அங்கேயே அசையாமல் நின்றன. பிறகு மேஜைக்குப் பக்கத்தில் நூலை நீட்டி, கீழே போய் மறைந்துகொண்டன.
பெண் எழுத்தாளரின் குளியலறையில் எண்ணெய், சோப், சீயக்காய் தூள் ஆகியவற்றின் வாசனை நிறைந்திருந்தது. தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் சிவந்த கால் விரல்களையே பார்த்தவாறு அந்தப் பெண் எழுத்தாளர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். அவள் மேலே பார்த்துச் சொன்னாள்: “பாதத்தைக் கொஞ்சம் தூக்கிக் காட்டு பொண்ணு...'' சூடான நீரில் சிவந்த நகங்களையும், சிவந்த விரல்களையும், சோப், எண்ணெய் ஆகியவற்றின் வாசனையையும் கொண்ட தன் மெலிந்து போன பாதத்தை உயர்த்திக் காட்டிய அந்த இளம் பெண் கீழ்நோக்கிப் பார்த்தவாறு லேசாகச் சிரித்தாள். பெண் எழுத்தாளர் அவளது விரல் நுனிகளில் முத்தம் கொடுத்தாள். எழுந்து நின்று அவளின் இடுப்பில் கையை வைத்து, அவளை அன்புடன் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். வியர்வையாலும் சுடுநீர் பட்டும் இளம் பெண்ணின் புடவை நனைந்திருந்தது. அவளின் நெற்றியில் இருந்த பொட்டு வியர்வைத் துளிகளுக்கு மத்தியில் "பளிச்’’ எனத் தெரிந்தது. பெண் எழுத்தாளர் இளம்பெண்ணைத் தன்னோடு இறுக அனைத்து, அவளின் வியர்வையும் ஆவியும் கலந்திருந்த நெற்றியில் உதட்டைப் பதித்து முத்தம் தந்தாள். பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னாள்: “உனக்கு என்னோட சாதாரண உடலோட நன்றி.'' அவளின் மலர்ந்த உதடுகளில் பெண் எழுத்தாளர் தன் உதடுகளைப் பதித்தாள். அந்த இளம் பெண்ணின் இளம் மார்பகங்களைத் தன் கைகளில் பிடித்து உயர்த்திய பெண் எழுத்தாளர் சொன்னாள்: “என் அம்மாவோட பால் நிறைஞ்சிருக்கும் மார்பகங்களைப்போல இந்த ரெண்டும் துடிப்பு உள்ளதா இருக்கு...''