வைக்கம் முஹம்மது பஷீர் - Page 3
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7873
வால் நட்சத்திரங்களின் விமானி
சிதாரா எஸ். (எழுத்தாளர்)
தமிழில் : சுரா
பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் வசித்துக் கொண்டிருந்த என்னுடைய பழைய வீட்டிற்குப் பின்னாலிருந்த முற்றத்தில் பெரிய ஒரு கல் இருந்தது. காலங்களின் அடையாளங்கள் பட்டு, கல் மினுமினுப்பு அடைந்தும், பளபளப்பு அடைந்தும் இருந்தது. அதன் அடிப் பகுதியில் ‘பிங்க்’ வர்ணத்தில் பிரகாசமான பாசிகள் முளைத்திருந்தன. இடையில் மிகவும் அருகிலிருந்த கிணற்றின் கரையில் தனியாக வளர்ந்து நின்றிருந்த செண்பக மரத்திலிருந்து பாதி காய்ந்து விட்டிருந்த பூக்கள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அந்த கல்லின் மீது காலை தூக்கி வைத்துக் கொண்டு நான் புத்தகங்களை வாசித்துக் கொண்டும், கனவுகள் கண்டு கொண்டும் மத்திய கோடைகால விடுமுறை முடிந்து மீண்டும் செல்லக் கூடிய வகுப்பறைகளைப் பற்றி பயந்து கொண்டும் இருந்தேன். அந்த நிமிடங்களை மனதில் நினைத்து, வாழ்க்கையிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த தருணங்கள் அவை என்று பிறகு நான் பெருமூச்சு விடுவேன் என்று அங்கு இருந்த நாட்களில் நான் எண்ணியதே இல்லை.
அந்த சாயங்கால வேளைகளில் இருந்த பலவும் பிறகு நீர்க்குமிழிகளைப் போல மறைந்து போய் விட்டன. எனினும், காட்டுச் செண்பகம் மற்றும் ஈரமான மண்ணின் வாசனை போன்ற சில விஷயங்கள் மனதில் பசுமையாக நின்று கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு சாயங்கால நேரத்தில்தான் மஜீத் என்ற இளைஞனின் காலில் பழுத்து காணப்பட்ட ஒரு கொப்புளத்தைப் பற்றி நான் வாசித்தேன். அதன் வேதனை என் மனதிற்குள்ளும் உண்டானது. அன்று மட்டுமல்ல – அதற்குப் பிறகு வந்த பல வருடங்கள் முழுவதும், காதலியின் முதல் முத்தம் தந்த பூரிப்புகளுக்கு மத்தியில் அந்த கொப்புளம் அவனுக்கே தெரியாமல் உடைந்தது – ஒரு நெருப்பு மலையின் வெடிப்பை விட சற்றும் குறைந்த சக்தியுடன் அல்ல. அதன் காதல் ‘லாவா’, வேதனையின் நீர் வற்றிப் போன என்னுடைய மனதிற்குள்ளும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. சுஹ்ராவிற்கும் மஜீத்திற்கும் என்ன நடந்தது என்று உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் – எனக்கு ஞாபகத்தில் இல்லை. எனினும், வாழ்ந்து முடித்த இத்தனை வருடங்களில் நடந்த வாசிப்பு அனுபவங்களுக்கு மத்தியில் இந்த அளவிற்கு ‘ரியலிஸ்ட்டிக்’கான இன்னொன்றை சொல்லப் போனால் – அதற்குப் பிறகு நான் பார்த்ததே இல்லை.
தனக்கு பிடித்த புத்தகங்களின் சில அத்தியாயங்களையும் வரிகளையும் நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, எங்களுக்காக வாசித்து கேட்கச் செய்யக் கூடிய பழக்கம் என் தந்தைக்கு இருந்தது. ‘மாலை நேர பயணங்களின் தந்தையே! மந்தாரத்தின் இலைகளைச் சேர்த்து தைக்கப்பட்ட மறுபிறப்பு என்ற இந்த கூட்டை விட்டு நான் பயணிக்கிறேன்…’ என்ற ‘கஸாக்’கின் வரிகள் எப்படிப்பட்ட உணர்வற்ற நிலையிலும் மறைந்து போகாத அளவிற்கு என் மனதிற்குள் பதிந்து போய் இருந்தது இப்படித்தான். அப்படிப்பட்ட கற்பனை மனநிலைகள் எதுவுமில்லையென்றாலும், நாங்கள் இருந்த இடத்திலும் இல்லாத இடங்களிலும் என் தந்தை கூறக் கூடிய இன்னொரு வார்த்தை – ‘இதில் விளக்கமும் விளக்குபவனும் எங்கே?’ என்பது. கதாசிரியரிடம் ஆசிரியரான தம்பி கேட்கும் இந்த கேள்வியை ஒவ்வொரு முறை கேட்கும்போதும், வாசிக்கும்போதும் ‘போடா முட்டாள்! அவனுடைய விளக்கம்!’ என்ற சிறு பிள்ளைத் தனமான ஒரு பழி வாங்கும் சுகத்துடன் என்னுடைய மனமும் பதில் கூறிக் கொண்டிருந்தது. சொல்லப் போனால்- எழுத்தின் எளிமையைப் பற்றிய என்னுடைய முதல் பாடமே அதுவாகத்தான் இருந்தது.
தனித்து கூறக் கூடிய வகையில் அதற்கு நிகரான எவ்வளவோ பயணங்கள், அதற்குப் பிறகு பல நேரங்களில் என்னுடைய வாசிப்பு வாழ்க்கையில் உண்டாயின. என் மனதின் இருண்டு, குளிர்ந்த மண்ணில் அவை பிரகாசமான பச்சை நிறத்துடன் செழித்து வளர்ந்து படர்ந்து இருக்க, அவற்றின் நீருடலில் ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப் போல நான் என்னைப் பார்த்தேன். பாதையோரத்திலிருக்கும் நிலத்தில் வீட்டின் சொந்தக்காரன், ஆடு தின்னாமல் பத்திரமாகப் பாதுகாத்த நன்கு பழுத்த பூசணிகளை ஆர்வத்துடன் பார்த்தவாறு, புத்தகக் கட்டுகளை கையில் வைத்துக் கொண்டு நடந்து செல்லும் ஒரு கூட்டம் சிறுமிகளுடன் நானும் நடந்து சென்றேன். சிங்கிடி முங்கனுக்கு பக்தர்களிடமிருந்து நேர்த்திக் கடனாகக் கிடைத்த மீன்களைக் கொண்டு கரியாத்தனின் மனைவி தயார் பண்ணிய உணவுப் பொருட்கள் என்னுடைய நாக்கின் அரும்புகளில் சுவையை உணரச் செய்து கொண்டிருக்கின்றன. குஞ்ஞுபாத்தும்மா பருகுவதற்கு கொண்டு வந்து தந்த நீர் குவளைக்கு களிம்பு நாற்றம் இருக்கிறதா என்று நிஸார் அஹமதுடன் சேர்ந்து நானும் முகர்ந்து பார்த்தேன். மூன்று சீட்டுக்காரனின் மகள் முதலில் யாருக்கும் தெரியாமல் சணலைக் கட்டி இழுத்துக் கொண்டு போன நேந்திரவாழைக் குலையுடன் என்னுடைய கால்களும் ஆற்று நீரால் நனைந்தன. வாழ்க்கை இளமையின் பிரகாசத்துடனும், இதயம் காதல் உணர்வுகளுடனும் இருக்கும் அரிதான காலகட்டங்களில் நிறைய புன்னகைத்துக் கொண்டும் காதலித்துக் கொண்டும் இருக்கக் கூடிய பெண்களை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றேன். என்னைச் சுற்றிலும் இருந்த பிரபஞ்சம் முழுவதும் அழகான, குளிர்ச்சியான ஒரு வெளிச்சத்தில் மூழ்கியது.
மனிதர்களின் வாசிப்பு, வால் நட்சத்திரங்களின் பயணத்தைப் போன்றது. இதற்கு முன்பு தெரிந்திராத பிரபஞ்ச மண்டலங்களிலிருந்து பற்றி எரிந்தவாறு பாய்ந்தோடி வரும். பிறகு… பனி அல்லது வேறு ஏதோவொன்றால் ஆன வால்கள் பின்னால் தெரிய, எல்லையற்றதை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கும். சில பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இடத்திற்கே, வீட்டிற்குத் திரும்பி வரும் உணர்வுடன் திரும்பி வரும். வேறு சில, மிகப் பெரிய நட்சத்திரங்களின் வெப்பத்திற்கு அடிமையாகி கரைந்து காணாமல் போகும்.
சில வருடங்களுக்கு முன்னால் தூர்தர்ஷனின் மலையாள செய்திக்கு மத்தியில் ‘கதை கூறிக் கூறி கதையாக மாறிய’ பஷீர் என்ற மனிதரின் உயிரற்ற முகத்தைப் பார்த்தபோது, எந்தச் சமயத்திலும் குளிர்ந்து உறைந்து போகாத ஒரு வெப்பம் நிறைந்த வால் நட்சத்திரம், அதன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வாலுடன் எனக்குள் மீண்டும் பாய்ந்து வந்தது. புத்தகங்கள் நிறைந்த ஒரு பிரகாசமான துணி துவைக்கும் கல்லின் மீது கால்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சிறுமியை நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நினைத்துப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்களின் பயணங்களில் ஆரம்ப வழி காட்டிகளில் ஒருவருடையதாக இருந்தது அல்லவா? செய்தியில் அஞ்சலிகளுடன் காட்டிக் கொண்டிருந்த பழைய படங்களை நான் நன்றியுடனும், சற்று குற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதின் தேம்பல்களை நோக்கி, வாஞ்சை நிறைந்த ஒரு பற்கள் இல்லாத சிரிப்பு குளிர்ச்சியாக வந்து விழுந்தது.
தொடரும்...