வைக்கம் முஹம்மது பஷீர் - Page 2
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7873
அவருடைய படைப்புகளில் வேதனை கலந்த ஒரு புன்னகையை நாம் பார்க்கலாம். வாழ்வின் கடுமையான அம்சங்களுக்கு நேராக பார்த்து வேதனையுடன் புன்னகைக்கும் காட்சி. ‘என்னால் வேறெதுவும் செய்ய முடியாது. அதனால் புன்னகைக்கிறேன்’ என்பதைப் போல. அப்படிப்பட்ட சில நூல்களை எழுதி, எல்லா காலங்களிலும் மிகப் பெரிய கதாசிரியராக வைக்கம் முஹம்மது பஷீர் நின்று கொண்டிருக்கிறார். பொதுவாக பார்க்கப் போனால் – கதைகள், நாவல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் காலத்தின் ஆக்கிரமிப்பில் காணாமல் போய் விடாமல் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறார்.
என்னுடைய இளம் வயதில் பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு ஆன்கஸ் வில்ஸன் இருந்தார். அவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை வைத்து சில பயண நூல்களை எழுதியிருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு... ஆன்கஸ் வில்ஸன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அந்த எழுத்தாளரைப் பற்றி பிரிட்டிஷ் வாசகர்கள் மறந்து விட்டார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் வேறு பல இடங்களிலும் நடந்திருக்கின்றன. நூல்களை எழுதியிருக்கும் படைப்பாளி, அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மறக்கப்பட்டு விடக் கூடிய நிலைமை... பஷீரைப் பொறுத்த வரையில் மிகவும் குறைந்த அளவு நூல்களை எழுதி, எல்லா காலங்களிலும் நிலை பெற்று நின்று கொண்டிருக்க, மீண்டும் தலைமுறைகள் அவற்றுக்குள் நுழைந்து சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களின் சில பழமையான நடைமுறைகளுக்கு எதிராக எழுதிய கதாசிரியர் என்று ஆரம்பித்து குறுக்குத்தனமான போக்குகளில் பஷீரைச் சேர்த்துக் கொள்ள முடியாது. மானிட சமூகத்தின் வேதனைகள் நிறைந்த கதைகளைக் கொண்டவையே அவருடைய நூல்கள். அதற்கேற்ற சொற்கள் அவருக்கு எங்கேயிருந்து கிடைத்தன என்று நாம் வியந்து போகிறோம். அந்த சொற்களை அவரால் எப்படி ஒன்று சேர்க்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அந்த வகையில் அபூர்வமான ஒரு திறமை கொண்ட மனிதர் நமக்கு மத்தியில் இருந்தார். மிகவும் சாதாரண மனிதராக வாழ்ந்து, அசாதாரணமான மொழியில் எழுதி, மிகவும் ஆச்சரியப்படத்தக்க சிற்பங்களையும் கோபுரங்களையும் உண்டாக்க முடிந்ததுதான் வைக்கம் முஹம்மது பஷீர் என்ற எழுத்தாளரின் மிகப் பெரிய திறமை. அவர் இலக்கியத்தில் உண்டாக்கிய மிகப் பெரிய கட்டிடங்களின் மூலமாக நாம் அவரை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம். அந்த நூல்களின் மூலமாக உள்ளுக்குள் வேதனை நிறைந்த புன்னகைப் பூக்களை ஏராளமாக அவர் மலரச் செய்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற பஷீர் நினைவுக் கூட்டத்தில் பேசியபோது ஒரு பெண் என்னிடம் கேட்டார்: ‘பஷீரின் இல்லற வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அவருடைய நூல்களை வாசித்தபோது, எனக்கு தோன்றியது – அவர் தனிமை நிறைந்த மனிதராக இருந்தார் என்பதுதான்.’ அது உண்மைதான். காரணம் – தனிமை நிறைந்த கரையின் வழியாகத்தான் பஷீர் பயணம் செய்திருக்கிறார். அந்த மிகப் பெரிய கடலின் கரையின் வழியாக நடந்து கொண்டே அவர் பலவற்றையும் பொறுக்கி எடுத்திருக்கிறார். ஒரு அர்த்தத்தில் கூறுவதாக இருந்தால் – எல்லா இடங்களிலுமே கலைஞன் எப்போதும் தனி மனிதன்தான்.
நம்முடைய காலகட்டத்தில் ஏராளமான கதைகளைக் கூற, அந்தக் கதைகளை வாசித்து நாம் நம்மையே மறந்து போய் நிற்க, இப்படி எழுதக் கூடிய சொற்கள் எங்கிருந்து கிடைத்தன என்று நமக்கு பல நேரங்களிலும் தோன்ற, ஒவ்வொரு வாசிப்பின் போதும் நம்மை வியப்படைய வைத்து, சமீப காலகட்டத்தில் நமக்கு மத்தியிலிருந்து பிரிந்து சென்ற மனிதர்தான் பஷீர். அவர் மானிட சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார். அதனால் முஸ்லீம் சமூகத்தைத் திருத்துவதற்காக வந்தவர் என்று பெயர் கூறி அழைப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.
ஆரம்ப காலத்தில் பஷீர் எழுதியவை வசன கவிதைகள்தாம். பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், கடவுளின் பெருமையையும் பற்றிய வசன கவிதைகள்... அந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு அவை மனப் பாடமாகவே இருந்தன. என்னைப் போல உள்ள மனிதர்களுக்கும். ‘நீயும் நானும் என்ற உண்மைத் தன்மையிலிருந்து நீ மட்டும் எஞ்சி இருக்கப் போகிறாய். பயணத்திற்கான நேரம் நெருங்கி வந்து விட்டது’ என்ற அவருடைய வசன கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து மனப்பாடமாக ஆக்கிக் கொண்டவர்கள் ஏராளமான பேர் இருந்தார்கள். அப்படிப்பட்ட அனுபவ அறிவுதான் அவருடைய கதைகளின் பக்கம் மீண்டும் மீண்டும் செல்லும்படி நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வாசகனை அவர் சிரிக்கச் செய்கிறார், சிந்திக்கச் செய்கிறார், அதிசயிக்க வைக்கிறார், மிகவும் ஒன்றிப் போய் அழவும் வைக்கிறார்.
‘பாத்தும்மாவின் ஆடு’ சிரிப்பதற்காக மட்டுமே இருப்பது. அதில் அந்தக் குடும்பத்தின் உம்மாவின், சகோதரர்களின், பக்கத்து வீட்டில் இருப்பவர்களின், ஆட்டை ஓட்டிக் கொண்டு வரும் பாத்தும்மாவின் பயணங்களில் ஒரு தாங்க முடியாத வேதனையின், துக்கத்தின் ஒரு ஓட்டம் மிகவும் அடியில் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். அப்படிப்பட்ட அகக் கண்களின் பார்வையுடன் ஒரு கதாசிரியர் நம் பக்கத்து வீட்டுக்காரராக இருந்து கொண்டு, நமக்கு கதைகளைக் கூறிக் கொண்டு, பல நேரங்களில் சிந்திக்க வைத்த அந்த மிகப் பெரிய எழுத்தாளரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், படைப்புகளில் அவருடைய கொடைகள் இன்னும் கண்டு பிடிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட தேடலுக்கு புதிய பார்வைகளுடன் உள்ளே நுழைந்து செல்வதற்கு இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் பாதை உண்டாக்கிக் கொடுக்கும் என்று நாம் நம்புகிறேன். அசையாத, ஒரு உயரமான மலைச் சிகரத்தைப் போல அவர் நம்முடைய மனங்களில் ஒரு பிம்பமாக நிறைந்து நின்று கொண்டிருக்கிறார்.
வைக்கம் முஹம்மது பஷீரின் நூல்களின் ஆழங்களுக்குள் நுழைந்து செல்வதற்கு, அந்த மனிதனுக்குள் புகுந்து செல்வதற்கு, மானிட வாழ்வைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பற்றி மீண்டும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஞாபகப்படுத்துவதற்கு நூற்றாண்டு கொண்டாட்டம் ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு சந்தோஷமே.