வைக்கம் முஹம்மது பஷீர்
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7879
தனிமையின் கரையில்...
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில் : சுரா
பஷீரின் நூற்றாண்டைக் கொண்டாடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது, ஆச்சரியம் உண்டானது. பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு அமைப்புதான் என்னிடம் தொலைபேசியில் அந்தத் தகவலைக் கூறியது. ‘நீங்கள் சொல்லும் கணக்கு சரிதானா?’ என்று நான் கேட்டேன். அவர்கள் கோழிக்கோட்டில் உள்ள பஷீரின் இல்லத்திற்குச் சென்று அங்கிருந்த சான்றுகளைச் சோதித்துப் பார்த்தார்கள். சரிதான்.
வேறு பலரையும் போல பஷீரின் நூல்களில் வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அப்படியொன்றும் விளக்கமாக இருக்காது. அவருக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால், அந்தத் தகவல்களை இடம் பெற வைப்பது என்பது பொதுவாக வழக்கத்தில் இல்லாத ஒன்று. அதனால் உண்டான சந்தேகமே என்னுடைய அந்த கேள்விக்குக் காரணமாக ஆனது. என்னைப் பொறுத்த வரையில், பஷீரின் மரணம் என்பது நேற்று கடந்து சென்ற ஒரு அனுபவம். அவ்வளவுதான். மிகவும் அருகில் இருந்தார், இப்போது சற்று விலகிச் சென்று விட்டார் என்ற ஒரு அனுபவம். தொடர்ந்து அவருடைய படைப்புகளைப் பார்த்தபோதுதான் அவருக்கு நூறு வயது ஆகிவிட்டது என்ற விஷயமே புரிந்தது.
சென்னையில் மலையாளியாக இல்லாத சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய பஷீர் நினைவு நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மலையாளம் தெரியாத சில இளைஞர்கள் பஷீரின் நூல்களை மொழி பெயர்ப்பின் மூலம் வாசித்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு பஷீரின் சில கதைகளை நாடக வடிவத்தில் நடத்தவும், அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் தீர்மானித்தார்கள். ‘மாங்கோஸ்ட்டின் மெலடீஸ்’ என்ற பெயரில் எல்லா நாட்களிலும் பஷீருக்கு விருப்பமான பாடல்கள் இடம் பெறும்படி செய்தார்கள். இன்னொரு மொழியில், வேறொரு மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்கள் என்பதைத் தெரிந்து கொண்டபோது, மிகவும் ஆச்சரியம் உண்டானது.
கேரளத்திற்கு வெளியே எல்லா காலங்களிலும் மிகவும் அதிகமாக தெரிந்து வைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீர்தான். அதற்கு ஆஷரைப் போன்ற ஆட்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். வேறு பல மொழிகளிலும் பஷீரின் நூல்களின் மொழி பெயர்ப்புகள் வந்திருந்தாலும், ஆங்கில மொழி பெயர்ப்புகளின் மூலம் பஷீரை உலகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு போய் சேர்ப்பது என்ற மிகப் பெரிய ஒரு கடமையை ஆஷர் செய்திருக்கிறார்.
கேரளத்திற்கு வெளியேயும் இந்தியாவிற்கு வெளியேயும் இருப்பவர்களில், அதிகமான மக்கள் வழிபடும் பாத்திரமாக இருந்த ஒரு மலையாள எழுத்தாளர் பஷீர் மட்டுமே. அவருடைய ஒட்டு மொத்த இலக்கிய நூல்களையும் அடுக்கி வைத்தால், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவை இருக்கின்றன என்றுதான் நமக்கு முதலில் தோன்றும். காரணம் – அதே போல ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் மிகவும் நீண்ட பேரமைதிக்கு ஒரு ஓய்வு கொடுத்து விட்டு, அரிதான அருமையான ஒரு நூலுடன் வெளியே வந்து கொண்டிருப்பார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்று நாம் கேள்விப்படுகிறோம். எங்கேயோ சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது முடிந்தவுடன், மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘பாத்தும்மாவின் ஆடு’டன் அவர் வெளியே வருவதை நாம் பார்க்கிறோம்.
மலையாள மக்கள் மனதில் மனப்பாடம் செய்து நடந்து கொண்டிருந்த ‘ப்ரேம லேஹனம்’- தண்டனைக் காலத்தின்போது தன்னுடன் இருந்த கைதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக பஷீர் கூறிய ஒரு தமாஷ் கதை என்று தெரிய வருகிறது. தமாஷ்கள் என்று அவர் குறிப்பிட்ட ‘ப்ரேம லேஹனம் தமாஷ், வேதனை, துக்கம் – அனைத்தும் நிறைந்தவையாக இருந்தது. அந்தச் சிறிய, மிகப் பெரிய கதை எவ்வளவோ காலம் கடந்து போன பிறகும் மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து செல்லும்போது, நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அம்சங்களையும் புதிய அர்த்தங்களையும் நம்மால் கண்டு பிடிக்க முடிகிறது. அது நம்மை திகைப்பில் கொண்டு போய் நிறுத்துகிறது. அப்படிப்பட்ட நூல்களைத்தான் நாம் ‘க்ளாஸிக்குகள்’ என்று அழைக்கிறோம். முதல் வாசிப்பில் ஏதோ சில விஷயங்கள் தோன்றும். ஆனால், மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று நம்மை ஈர்த்து, புதிய சில அர்த்தங்கள் விரவியிருக்கும் இடங்களை அது திறந்து காட்டுகிறது. பஷீரின் நகைக் சுவை உணர்வு, தமாஷ் என்றெல்லாம் கூறப்படுபவை இணை கூற முடியாதவை. யாராலும் பின்பற்ற முடியாத விஷயங்கள் அவை. அர்த்தமே இல்லாத சொற்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு அவர் புதிய பல விஷயங்களையும் உண்டாக்குவார். அப்படிப்பட்ட தமாஷ்தான் அவருடைய வாழ்க்கையே.
வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்க்கைக் கதையை மொத்தமாக பார்த்தால், ஆரம்பக் காலத்தில் அலைந்து திரிவது... அது முடிந்தவுடன், சிறைச்சாலை அனுபவங்களில் ஆரம்பித்து அந்த வாழ்க்கை வரலாற்றை ஆழமாக படித்தால் நமக்கு தெரிய வருவது – தான் எந்தச் சமயத்திலும் ஒரு தொழில் ரீதியான எழுத்தாளராக ஆக வேண்டும் என்று அவர் விரும்பியதே இல்லை என்பதுதான். அவருடைய ஆரம்ப கால படைப்புகள் அனைத்தும் அரசியல் பற்றியவையாக இருந்தன. இந்த மாநிலத்தின் மோசமான நிலையைப் பற்றியும், திவானின் ஆட்சியைப் பற்றியும், அப்போதைய முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கும் தன்மை கொண்ட கட்டுரைகளும்... இவற்றைத்தான் பஷீர் செய்து கொண்டிருந்தார்.
நமக்கு இன்று ஆச்சரியம் உண்டாகும். காரணம் – அந்த நூல்களில் சில தடை செய்யப்பட்டிருக்கின்றன. ‘பால்ய கால சஹி’, ‘ப்ரேம லேஹனம்’, ‘கதிருகள்’ ஆகிய நூல்கள் ‘கறுப்பு லிஸ்ட்’டில் சேர்க்கப்பட்டிருந்தன. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், அதற்குத் தடை விதித்தவர்களுக்குக் கூட காரணம் தெரியாது. எனினும், புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிலர் சுதந்திரமாக சிந்திக்கவோ, சுதந்திரமாக எழுதவோ கூடாது என்ற கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதத்துடனும் அந்தக் காலத்தில் தடை என்ற ஒன்றை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டும், சிறை அனுபவங்களை இருகரம் நீட்டி வரவேற்கவும் செய்த பஷீர் வெறும் சுவாரசியத்திற்காக சில நேரங்களில் சில கதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் அவர் எழுதியதைப் பார்த்து இப்போது நான் வேதனையுடன் புன்னகைக்கலாம். வேதனை கலந்த புன்னகை அவருடைய ஒட்டு மொத்த வாழ்வின் ஒரு விளைவாக தோன்றும். அந்த ஆழமான வேதனையை மறைத்துக் கொண்டு வெளிப்படும் ஒரு புன்னகை. பஷீரின் இறுதிக் காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டபோது கூட, இந்த நகைச்சுவை உணர்வு நிறைந்த புன்னகை எந்தச் சமயத்திலும் அவரை விட்டு பிரியவே இல்லை.