ஆயில் புல்லிங்...
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8388
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யின் வழவழப்பு நீங்கி வெண்மையாக நீர்த்துப்போகும்போது அதை துப்பிவிட வேண்டும்.
இதுதான் ஆயில் புல்லிங்!
‘ஆயில் புல்லிங்’கருத்தரங்கம்
‘ஆயில் புல்லிங்’கருத்தரங்கம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருந்தது. நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்து தாங்கள் அடைந்த பலன்களை எல்லோரிடமும் கூறுவதற்காக பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
கடிகாரத்தைப் பார்த்தேன். மதிய உணவுக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அங்கிருந்து கிளம்பினேன்.
நேராக என் அலுவலகத்துக்கு வந்தேன். மதிய உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சற்றுமுன் பார்த்த, கேட்ட ‘இதயம் வெல்த் கருத்தரங்க’த்தைப் பற்றி என் மனம் சிந்தித்துப் பார்த்தது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நல்லெண்ணெய்யில் இவ்வளவு பலன்கள் உண்டாகின்றனவா என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். பலதரப்பட்ட நோய்களையும் குணப்படுத்தக்கூடிய அருமருந்தாக நல்லெண்ணெய் இருக்கிறது என்பதை கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் கூறியதை திரும்பத் திரும்ப என் மனம் அசைபோட்டுப் பார்த்தது.
பொதுவாகவே எதையும் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். தெரியாத விஷயங்களையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் எனக்கு எப்போதும் உண்டு. ‘ஆயில் புல்லிங்’விஷயத்தைப் பற்றியும் அப்படித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காக பல நாட்களை நான் செலவிடத் தொடங்கினேன். இணையதளத்திலிருந்து ‘ஆயில் புல்லிங்’சம்பந்தமான பல தகவல்களை திரட்டினேன். பல மேலைநாட்டு நூல்களில் ‘ஆயில் புல்லிங்’கின் சிறப்புப் பற்றி அறிவியல் அறிஞர்களும், மருத்துவ மேதைகளும் கூறியிருக்கும் கட்டுரைகளைப் படித்தேன்.
அவற்றைப் படிக்கப்படிக்க எனக்கு நல்லெண்ணெய் மீதும், ‘ஆயில் புல்லிங்’கின் மீதும் அளவற்ற நம்பிக்கையும் உயர்ந்த மதிப்பும் உண்டாயின.
‘ இதயம் வெல்த்’ கருத்தரங்கில் கலந்துகொண்ட பலரும் கூறியதைப் போலவே பல இணையதளங்களிலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய்யை தலையில் வைத்து கொண்டாடி இருந்தனர். தங்களுடைய பல நோய்களும் நல்லெண்ணெய்யை வைத்து ‘ஆயில் புல்லிங்’ பண்ணிய சில நாட்களிலேயே முழுமையாக குணமாகிவிட்டதாகக் கூறியிருந்தனர்.