பெண்களை வாழ வைப்பவன் நான்! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4955
1986ல் ரகுவரன்- அமலாவை வைத்து 'கூட்டுப் புழுக்கள்' என்றொரு அருமையான படத்தை இயக்கினார் ஆர்.சி.சக்தி. நாவலாக வந்து புகழ் பெற்ற கதை. இன்றும் பலரின் மனதிலும் அப்படம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ரகுவரனின் மென்மையான நடிப்புத் திறமையை வெளிக் காட்டிய படம். அந்தப் படத்தில் நடிக்கும்போது, அதைப் பற்றி ரகுவரன் எவ்வளவோ நாட்கள் என்னிடம் சக்தியின் படமாக்கும் விதத்தைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். 'நான் வேதனையை மனதிற்குள் வைத்து நடித்துக் கொண்டிருப்பேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு பார்த்தால்- ஒரு ஓரத்தில் ஆர்.சி.சக்தி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்' என்று ரகுவரன் கூறிய வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு க்ரைம் கதையை ஒரு முறை அவரிடம் நான் கூறினேன். 'இதை நீங்கள் இயக்குகிறீர்களா. அண்ணே?' என்று நான் கேட்டேன். 'பல பெண்கள் கொலை செய்யப்படும் கதை இது. நான் விளையாட்டாகக் பெண்களை வாழ வைப்பதற்காக படம் எடுப்பவன். என்னைப் போய் இதைச் செய்யச் சொல்கிறீர்களே!' என்றார் ஆர்.சி. சக்தி என்னைப் பார்த்து - சிரித்துக் கொண்டே.
எழுத்தாளர் சவீதா எழுதிய 'இவளா என் மனைவி?' என்ற அருமையான நாவலை விஜயகாந்த், ராஜேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, ஆர்.சி.சக்தி இயக்குவதாக இருந்தது. அதற்கு இயக்குநராக சக்தியை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளரிடம் கூறியதே நான்தான். அதற்காக பாடல்கள் கூட பதிவு செய்யப்பட்டன. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடரவில்லை. எனினும், அதே கதையை ஆர்.சி.சக்தி தொலைக்காட்சித் தொடராக இயக்கி, அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
1970ல் 'அன்னை வேளாங்கண்ணி' படத்தில் உதவி இயக்குநர்களாக தங்கப்பன் மாஸ்டரிடம் பணி புரிந்தபோது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட கமல்ஹாசனை, கடலுக்குள் குதித்து தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்து, காப்பாற்றியதை நெகிழ்ச்சியுடன் ஒரு முறை கூறினார் சக்தி.
'சிறை' திரைக்கு வந்த முதல் நாளன்று ஆனந்த் திரையரங்கிற்கு நான் படத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. கால் பகுதி கூட ஆட்கள் இல்லை. நான் மிகவும் வருத்தப்பட்டேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு, ஆர்.சி.சக்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'அண்ணே... படம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களின் உரையாடல்கள் அருமை! துணிச்சலான முயற்சி. குறிப்பாக- படத்தின் உச்சக்கட்ட காட்சி. தாலியை லட்சுமி கழற்றி, கழிவறைக்குள் போடும் காட்சியில் உங்களுக்கு பலமான கைத்தட்டல்.... எனினும், பெரிய அளவில் கூட்டம் இல்லை. அதுதான் எனக்கு கவலை. ஆனால், எனக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் ஓடும். ஓடினால், உலகத்திலேயே மிகவும் சந்தோஷப்படக் கூடிய முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்' என்று நான் அதில் எழுதியிருந்தேன். அதே திரையரங்கில் 'சிறை' மக்கள் கூட்டத்துடன் 100 நாட்கள் ஓடியது, பின்னர் நடந்த வரலாறு.
ஒரு முறை ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது ஆர்.சி.சக்தி கூறினார்: 'பல படங்களின் பாடல் காட்சிகளை நான் பார்க்கிறேன். காதல் காட்சிகளில் கதாநாயகிகளும், நடனப் பெண்களும் வீட்டின் கூரையின் மீதும், மரங்களின் கிளைகளிலும் ஏறி நின்று கொண்டு நடனம் ஆடுகிறார்கள். எனக்கு பயமே இதுதான்... அவர்களை அவ்வளவு உயரத்தில் எப்படி ஏற்றி விடுகிறார்கள்? நடனமாடும்போது, அவர்கள் கீழே விழுந்தால், என்ன ஆவது?' அதுதான் ஆர்.சி.சக்தி!
என் அருமை அண்ணன் ஆர்.சி.சக்தி இந்த மண்ணை விட்டு நீங்கி விட்டார். எனினும், அவர் உருவாக்கிய நல்ல திரைப்படங்களும், ஊசி குத்துவதைப் போன்ற அவரின் கூர்மையான உரையாடல்களும் காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.