டாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர்
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 5037
மறக்க முடியுமா? - சுரா (Sura)
டாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர்!
புகைப் படத்தில் எனக்கு சால்வை அணிவித்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் கார்வண்ணன். என்னுடைய நெருங்கிய நண்பர். சமீபத்தில் மரணத்தைத் தழுவி விட்டார். என்னை மிகவும் கவலையில் மூழ்க வைத்த மரணம் அவருடையது.
கார்வண்ணனை எனக்கு 30 வருடங்களாக தெரியும். 1984ஆம் ஆண்டில் தயாரான 'பிரியமுடன் பிரபு' என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். எழுத்தாளரும், கவிஞருமான கங்கை கொண்டான் இயக்கிய படமது. அதற்கு உரையாடல் எழுதியவர் கவிஞர் புவியரசு. நான் அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர். பிரபு கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கார்வண்ணனை அப்போதிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த கால கட்டத்தில் ஞாநியின் 'பரீக்ஷா' நாடகக் குழு தயாரித்த நாடகங்களில் நடிக்கவும் செய்து கொண்டிருந்தார் கார்வண்ணன்.
சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கார்வண்ணன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். முரளி கதாநாயகனாக நடிக்க, 'பாலம்' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தான் இயக்கி முடித்திருப்பதாகவும், அதற்கு நான் பி.ஆர்.ஓ.வாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நான் மேற்கு மாம்பலம், பக்தவத்சலம் காலனியில் இருந்த அவரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் தன் தாயாருடனும் சகோதரியுடனும் சகோதரருடனும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார். அருகிலிருந்த ஒரு தேநீர் கடையில் வைத்து அவர் 'பாலம்' படத்தின் கதையைக் கூறினார். கதையைக் கேட்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அந்த அளவிற்கு மிகவும் வித்தியாசமான கதையாக அது இருந்தது. 'நிச்சயம் இந்தப் படத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மாறுபட்ட முயற்சி என்று எல்லோரும் கூறுவார்கள்' என்றேன் நான் கார்வண்ணனிடம்.
நான் கூறியது மாதிரியே 'பாலம்' படத்தில் கார்வண்ணனுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகள் அந்தப் படத்தை மிகவும் பாராட்டி எழுதின. இரண்டு மணி நேரம் ஒரு பாலத்திலேயே நடக்கும் கதை என்றால் சாதாரண விஷயமா?
அதற்குப் பிறகு கார்வண்ணன் 'புதிய காற்று' படத்தை இயக்கினார். முரளி கதாநாயகன். கதாநாயகி- மீனாட்சி (பின்னர் தன் பெயரை ஆம்னி என்று அவர் மாற்றிக் கொண்டார்). அதுவும் ஒரு வித்தியாசமான கதைக் கரு கொண்டதே. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, சுதந்திரப் போராட்ட வீரரின் மகனான கதாநாயகன் தேடித் தேடி கொல்கிறான். இறுதிவரை அவனை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுதான் அப்படத்தின் கதை.
அவர் இயக்கிய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் 'புதிய காற்று' தான். பல வருடங்களுக்குப் பிறகு 'புதிய காற்று' கதையையே மிகவும் பிரம்மாண்டமாக கமல்ஹாசனை வைத்து 'இந்தியன்' படமாக இயக்கினார் ஷங்கர் என்பது தனி கதை. இன்னும் சொல்லப் போனால்- அஜீத் நடித்த 'சிட்டிசன்' கூட அதே கதைதான்.
'புதிய காற்று' கார்வண்ணனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து 'மூன்றாம் படி' என்றொரு படத்தை அவர் இயக்கினார். அப்படத்தின் கதாநாயகன் ராகுல் ('புது நெல்லு புது நாத்து' கதாநாயகன்). நேர்மையான ஒரு முதலமைச்சரை, பதவி வெறி பிடித்த இரண்டாம் இடத்தில் இருக்கும் அமைச்சர் குண்டு விபத்து உண்டாக்கி சாகடிக்கிறார். சி.பி.ஐ. அதை எப்படி கண்டு பிடிக்கிறது என்பது கதை. நேர்மையான முதலமைச்சராக அதில் நடித்தவர் பழ.கருப்பையா. அது ஒரு 'Road Movie'. சாலைகளிலும், தெருக்களிலும் படமாக்கப்பட்ட படம். மாறுபட்ட கதை. எனினும், வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை.
கார் வண்ணன் இயக்கிய நான்காவது படம் 'தொண்டன்'. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம். 'குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது' என்று ஒரு சமூக சேவகர் பேராடுகிறார். அதனால் அவரைத் தீர்த்துக் கட்ட நினைக்கின்றனர் பெரிய தொழிலதிபர்கள். இறுதியில் என்ன நடந்தது? இதுதான் கதை. 'ஒரு அருமையான கதையை வைத்து படத்தை இயக்குகிறீர்கள்' என்று கார்வண்ணனை நான் பாராட்டினேன். அப்படத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கக் கூடாது என்று போராடுபவராக படம் முழுக்க வந்தவர் டாக்டர்.ராமதாஸ் (பா.ம.க. ராமதாஸ்தான்). அவருடைய போராட்டம் வெற்றி பெற கலைஞர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தும் காட்சி கூட படத்தில் உண்டு. டாக்டர் ராமதாஸின் தொண்டனாக அதில் முரளி நடித்தார்.
அடுத்து கார்வண்ணன் இயக்கிய படம் 'ரிமோட்'. குற்றாலத்தில் படமாக்கப்பட்ட படம். ஒரு ஆம்னி பேருந்து பயணிகளை, சில இளைஞர்கள் கடத்திக் கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்து, அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை வைக்கிறார்கள். பயணிகளை விடுவிப்பதற்காக தன் குழுவினருடன் அங்கு முகாமிடுகிறார் ஒரு காவல் துறை அதிகாரி. அவரால் பயணிகளை விடுவிக்க முடிந்ததா? 'ரிமோட்' படத்தின் கதை இதுதான். காவல் துறை அதிகாரியாக நடித்தவர் நெப்போலியன்.