டாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர் - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 5038
கார்வண்ணன் அடுத்து இயக்கிய படம் 'பாய்ச்சல்'. இட ஒதுக்கீடு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதில் கார்வண்ணனே கதாநாயகனாக நடித்தார். படம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டன. முழு படத்தையும் முடித்த பிறகு, தன் வீட்டில் எனக்கு போட்டுக் காட்டினார். எந்தவித தயக்கமும் இல்லாமல், ஆதிக்க சாதிகளை மிகவும் காட்டமாக படம் முழுக்க தாக்கி, அவர் உரையாடல் எழுதியிருந்தார்! படத்தைப் பார்த்து விட்டு 'என்ன... இவ்வளவு துணிச்சலாக படத்தை எடுத்திருக்கிறீர்கள். தணிக்கைக் குழுவின் கையிலிருந்து படம் தப்புமா?' என்றேன் கார்வண்ணனிடம். அதில் சத்யராஜ், சுப.வீரபாண்டியன் கூட 'இட ஒதுக்கீடு' பற்றிய தங்களின் கருத்துக்களைக் கூறியிருப்பார்கள்.
அதற்குப் பிறகு கார்வண்ணன் படம் எதுவும் இயக்கவில்லை. 'பாய்ச்சல்' படத்தைத் திரைக்குக் கொண்டு வர அவர் என்ன முயற்சிகள் செய்தார் என்று தெரியவில்லை. எனினும், அப்படம் இன்று வரை திரைக்கு வரவில்லை.
அவர் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் நான்தான் பி.ஆர்.ஓ.
இந்த முப்பது வருடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போதும், படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும்போதும் நானும் கார்வண்ணனும் எண்ணற்ற முறைகள் சந்தித்திருக்கிறோம். பேசியிருக்கிறோம். சினிமா, அரசியல், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் நாங்கள் பேசுவோம். நந்தனம் கலைக் கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் எம்.ஏ. பட்டம் பெற்ற கார்வண்ணன் ஒரு அறிவாளி. எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும், மிகவும் ஆழமான பார்வையுடன் பேசுவார்.
எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகுவார். உதவும் குணம் உள்ளவர். சிரமப்படுபவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே, முகத்தைப் பார்த்து உதவிகள் செய்வார். அவர் பலருக்கும் உதவியதை நேரடியாக நானே பார்த்திருக்கிறேன். ஒரு விஷயத்தை உலகமே ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தாலும், தனகென ஒரு கூர்மையான பார்வையை அவர் எப்போதும் வைத்திருப்பார்.
என் மீது அவருக்கு எப்போதும் உண்மையான அன்பும், ஈடுபாடும் உண்டு. என் மொழி பெயர்ப்பு படைப்புகள் பற்றியும், நூல்களைப் பற்றியும் அவ்வப்போது விசாரிப்பார். 'இவ்வளவு நூல்களை மொழி பெயர்த்த உங்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லையே!' என்று பல நேரங்களில் மிகவும் ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.
யாரையும் எளிதில் ஈர்த்து விடக் கூடிய பணிவான குணத்தைக் கொண்டவர் கார்வண்ணன். நண்பர்களாக பழகியவர்களுடன் அந்த நட்பை விடாமல் பாதுகாத்துக் கொண்டிருப்பது அவரிடம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல விஷயம்.
பெரிய நட்சத்திரங்களை நம்பாமல், தன் திறமையை மட்டுமே நம்பி, சிறிய முதலீட்டு படங்களை இயக்கியவர் அவர். வழக்கமான கதைகளை எடுக்காமல், வித்தியாசமான கதைகளைக் கையாண்டு படங்களை இயக்கியதற்காகவே கார்வண்ணனை நாம் பாராட்ட வேண்டும்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு அவரைச் சிறிதும் எதிர்பாராமல் அண்ணாசாலையில், நகர பேருந்தில் பார்த்தேன். அப்போது 'பாய்ச்சல்' படத்தைப் பற்றி உரையாடினோம் சற்று மெலிந்து, கரை படிந்த பற்களுடன், மெருகு குறைந்த தோற்றத்துடன் கார்வண்ணனைப் பார்த்தேன். தோலில் துணிப் பை தொங்கிக் கொண்டிருந்தது. 'என்ன... இப்படி ஆகி விட்டார்?' என்று நினைத்தேன்.
உடல் நலத்தில் அவர் சற்று கவனமாக இருந்திருக்கலாம். சில பழக்க வழக்கங்களை காலப் போக்கில் அவர் தவிர்த்திருக்கலாம். உலக விஷயங்கள் எதையெதையோ ஊடுருவி, ஆழமாக பேசும் என் ஆருயிர் நண்பர் தன் உடல் நல விஷயத்தில் எப்படி அக்கறை செலுத்தாமல் போனார் என்பதுதான் என் வருத்தமே.
கார்வண்ணன் மறைந்திருக்கலாம். ஆனால், அவருடைய கனிவான முகமும், எளிய அணுகுமுறையும், கருணை உள்ளமும், ஜாலியாக உரிமை எடுத்து பேசும் முறையும், உண்மையான நட்பும், ஆழமான சிந்தனையுடன் எதையும் வெளிப்படுத்தும் பாங்கும் என் உள்ளத்தை விட்டு எந்தக் காலத்திலும் நீங்கவே நீங்காது.