Lekha Books

A+ A A-

பாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள்

அழியாத கோலங்கள்சுரா (Sura)

பாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள்

மிழ் திரைப்பட உலகை தங்களுடைய அபார திறமையால் வளர்த்த இயக்குநர்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் திரும்ப திரும்ப வலம் வந்தவர் பாரதிராஜா.

தான் இயக்கிய படங்களின் மூலம் தமிழ் படவுலகிற்கு பாரதிராஜா எவ்வளவு புகழையும், பெருமையையும் சேர்த்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது, எனக்கு அவர் மீது அளவற்ற மரியாதை உண்டாகிறது.

என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.

1977 ஆம் ஆண்டு. . . அப்போது நான் என் பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் பாரதிராஜா இயக்கிய முதல் படமான 'பதினாறு வயதினிலே' திரைக்கு வருகிறது. கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த அப்படத்தில் வில்லனாக நடித்தவர் ரஜினி. படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கண்ணு. இசையமைத்தவர் இளையராஜா. சப்பாணியாக கமல் நடித்திருந்தார். பரட்டையாக ரஜினி. மயிலாக ஸ்றீதேவி. படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எங்கு பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள். பத்திரிகைகள் அப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடின. 'யார் இந்த பாரதிராஜா? எங்கிருந்து இப்படியொரு திறமைசாலி படவுலகிற்கு வந்தார்? 'என்று ஆச்சரியப்பட்டு எழுதின. இவற்றையெல்லாம் படித்து விட்டு,  நான் படம் பார்க்கச் சென்றேன். உண்மையிலேயே நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். இதுவரை தமிழில் பார்த்திராத ஒரு புது வகை சினிமா ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். உண்மையான கிராமத்தை படத்தில் பார்த்தேன். இளையராஜா படத்தில் ஆட்சி புரிந்திருந்தார். பாடல்கள் அத்தனையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. நிவாஸ் ஒளிப்பதிவில் தன் திறமை அத்தனையும் வெளிப்படுத்தியிருந்தார். நடிகர்களும், நடிகைகளும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்து புதுமையான பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா. படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் உள்ளங்களிலும் பாரதிராஜா நிறைந்து நின்றிருந்தார். என் உள்ளத்திலும்தான். தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை வீச ஆரம்பித்து விட்டது, ஒரு புதிய அத்தியாயம் பிறந்து விட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். தலையை நிமிர்த்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். 'பதினாறு வயதினிலே'திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சிறப்பாக ஓடி சாதனை புரிந்தது. 25 வாரங்கள் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படம் 'கிழக்கே போகும் ரயில்'. சுதாகர் என்ற புதிய கதாநாயகனும், ராதிகா என்ற புதிய கதாநாயகியும் அறிமுகம். முற்றிலும் ஒரு புதிய பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா. அவர் நினைத்திருந்தால், கமல் அல்லது ரஜினியை வைத்தே தன் அடுத்த படத்தையும் இயக்கியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தன்னுடைய திறமையை முழுமையாக நம்பி,  புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிய பாரதிராஜாவை எனக்கு மிகவும் பிடித்தது. இளையராஜா கோவில்மணி ஓசைதனை, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு ஆகிய பாடல்களின் மூலம் அந்த படத்தை எங்கோ கொண்டு சென்றிருந்தார். நிவாஸ் ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருந்தார். கிராமத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி கதாநாயகனை முதல் தடவையாக நான் தியேட்டரில் பார்த்தேன். அவன் சென்னைக்கு புறப்பட்டு வந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரப் போவதை,  அந்த கிராமத்தின் வழியே வரும் புகை வண்டியின் பின் புறத்தில் 'நம் வாழ்க்கையில் வசந்தம் பிறந்தது' என்று எழுதி அனுப்புவான். அதைப் பார்த்து பரஞ்சோதியின் காதலியான பாஞ்சாலி 'பூவரசம்பூ பூத்தாச்சு'என்று குதூகலித்து பாட்டு பாடுவாள்!என்ன உயர்ந்த கற்பனை!மதுரை கல்பனா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனமும் ராதிகாவுடன் சேர்ந்து துள்ளி குதித்தது. அவருடன் சேர்ந்து நானும் ஆனந்த நடனம் ஆடினேன். அதில் இருந்த 'பட்டாளத்தான்' கதாபாத்திரம் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்தது.

கிராமத்து மனிதர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டு, கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பித்துச் செல்லும் அந்த இளம் காதல் ஜோடிகளை படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களும் வாழ்த்தின. காதலர்களை வாழ வைத்த பாரதிராஜாவையும்.

அந்தப் படம் சென்னை தேவி காம்ப்ளெக்ஸில் 50 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.

கிராமிய பாணி படங்கள் மட்டும்தானா, தன்னால் நகரத்து பின்னணியில் ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழ் படத்தை இயக்கவும் தெரியும் என்பதை பாரதிராஜா 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை இயக்கியதன் மூலம் நிரூபித்தார். இளையராஜா பாடல்களிலும்,  பின்னணி இசையிலும் அபார சாதனை புரிந்திருந்தார். பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றிப் படம்!

அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'புதிய வார்ப்புகள்'. கதாநாயனாக பாக்யராஜ் அறிமுகம். கதாநாயகியாக 'லக்ஸ்' சோப் விளம்பரப் படங்களில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரி. ஒரு கவித்துவமான கிராமத்து காதல் கதை. கவுண்டமணி சுய உணர்வற்ற நிலையில் இருக்கும் ரத்தியின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுவார். 'உனக்கு இது தாலியாக இருக்கலாம். எனக்கு இது சாதாரண கயிறு'என்று கூறி, ரத்தி அதைக் கழற்றி வீசி எறிவார். அதற்கு முன்பு இப்படியொரு புதுமைக் காட்சியை நாம் எந்த தமிழ் படத்திலும் பார்த்தது இல்லையே!ரத்தி தாலியைக் கழற்றி விட்டெறிந்தபோது, மொத்த தியேட்டரும் கைத்தட்டி ஆரவாரித்தது. பாரதிராஜாவிற்கு எவ்வளவு பெரிய வெற்றி!இளையராஜாவின் இசையில் 'இதயம் போகுதே' ஒலித்தபோது, பாக்யராஜுடன் சேர்ந்து மக்களும் பேருந்தில் பயணித்தனர். அந்த காதலர்களுக்காக கண்ணீர் விட்டனர். இதுதான் உண்மை. பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றி மகுடம்!

பாரதிராஜா அடுத்து இயக்கிய படம் 'நிறம் மாறாத பூக்கள்'. அதுவும் ஒரு வெற்றிப் படமே!

தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்கள்!யாரும் புரியாத சாதனை. . .

பாரதிராஜாவின் அடுத்த படம் 'கல்லுக்குள் ஈரம்'. இயக்கம் என்று ஒளிப்பதிவாளர் நிவாஸின் பெயர் வரும். டைரக்ஷன் மேற்பார்வை என்று பாரதிராஜாவின் பெயர் வரும். யாரும் இதற்கு முன்பு தமிழ் படங்களில் தொடாத கதைக் கரு. ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்பிற்கு வரும் படப்பிடிப்பு குழு, அதைத் தொடர்ந்து அங்கு உண்டாகும் சில நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள். . . இதுதான் அப்படத்தின் கதை. அருணா,  விஜயசாந்தி என்ற இரு புதுமுக நடிகைகள் அதில் அறிமுகம். மாறுபட்ட கதை. எனினும்,  வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை. பாரதிராஜாவின் கலையுலக பயணத்தில் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி அது!

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel