பாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள் - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4960
1980ல் பாரதிராஜா இயக்கிய படம் 'நிழல்கள்'. பாரதிராஜாவிற்கும் நிவாஸுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி இருவரும் பிரிய பி. கண்ணன் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். வைரமுத்து பாடல் எழுதிய முதல் படம். வேலையில்லா திண்டாட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட கதை. ராஜசேகர், ரவி, சந்திரசேகர், சுவிதா, ரோகிணி-புதுமுகங்கள் என்று தோன்றாத அளவிற்கு பாத்திரங்களுக்கு உயிர தந்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் இது ஒரு பொன்மாலைப் பொழுது. பூங்கதவே தாழ் திறவாய் ஆகிய பாடல்கள் தெருவெங்கும் முழங்கின. அனைத்தும் இருந்தும், ஏதோ ஒன்று இல்லை. விளைவு-வர்த்தக ரீதியாக படம் தோல்வி. பாரதிராஜாவிற்குக் கிடைத்த இரண்டாவது தோல்வி.
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'அலைகள் ஓய்வதில்லை'. கார்த்திக் கதாநாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள். தியாகராஜனும், கமலா காமேஷும். ஒரு முற்போக்கான காதல் கதை. ஒரு பிராமண இளைஞனுக்கும், ஒரு கிறிஸ்தவ மீனவ பெண்ணுக்கிடையே மலரும் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியிருந்தார் பாரதிராஜா. இளையராஜா இசை சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார். அவரின் அண்ணன் ஆர். டி. பாஸ்கர்தான் படத்தின் தயாரிப்பாளர். படம் சூப்பர் ஹிட்! 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ஆர். வெற்றி விழாவில் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார். படத்தின் உச்சக்கட்ட காட்சியையும், பாரதிராஜாவையும் அவர் மனம் திறந்து பாராட்டினார்.
கமல்ஹாசன், ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய க்ரைம் கதை 'டிக். . . டிக். . . டிக்'. கமல் சட்டையை ஸ்வப்னா மாட்டிக் கொள்ள, ஸ்வப்னாவின் ஆடையை அணிந்து கமல் இருக்க. கீழே போலீஸ் வேன் வர. . அந்த ஒரு காட்சி போதும் பாரதிராஜாவின் திறமையைப் பறை சாற்றுவதற்கு!அடுத்து பாரதிராஜா இயக்கிய அருமையான படம் 'மண் வாசனை'. பாண்டியன் கதாநாயகனாகவும், ரேவதி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள். உண்மையிலேயே மண் வாசனை நிறைந்த படம்தான். இளையராஜாவின் அற்புதமான இசை!வைரமுத்துவின் வைர வரிகள்!ரேவதியின் அருமையான நடிப்பு! பாரதிராஜாவின் திறமை வாய்ந்த இயக்கம்!அனைத்தும் சேர்ந்து படத்தை வெற்றிப் படமாக ஆக்கின. அடுத்து ஏவிஎம்மின் 'புதுமைப் பெண்'. மீண்டும் பாண்டியன்-ரேவதி ஜோடி. இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், பாரதிராஜாவின் சிறந்த இயக்கம் படத்தை வெற்றிப் படமாக ஆக்கின. தமிழக அரசு அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்தது.
'சங்கராபரணம்' ஓடி எங்கு பார்த்தாலும் அப்படத்தின் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நேரம். அதேபோல கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் தந்து ஒரு படத்தை இயக்கினால் என்ன என்று நினைத்த பாரதிராஜா இயக்கிய படம் 'காதல் ஓவியம்'. இளையராஜா இசையமைத்த அருமையான பாடல்களைக் கொண்ட படமது. கண்ணன் என்ற புதிய கதாநாயகன் அதில் அறிமுகம். கதாநாயகி ராதா. இசையில் தோய்ந்த கதாநாயகனுக்கு பார்வை சக்தி இல்லை. அதற்காக காதல் வராமல் இருக்குமா? பாடல் காட்சிகளில் திரையரங்கில் கூச்சல். . . குழப்பம். . . விஷில்! ஏன்? பாரதிராஜாவிற்கே புரியவில்லை. கூச்சல் போடப்பட்ட பாடல் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. ப. டம் தோல்வி!
அந்த தோல்வியால் உண்டான கோபத்தில் பாரதிராஜா இயக்கிய படம்தான் 'வாலிபமே வா வா'. ஆண் தன்மையற்ற கதாநாயகனைப் பற்றிய கதை. கதாநாயகன் கார்த்திக். படம் பரவாயில்லாமல் ஓடியது. ஆனல், 'இந்தப் படத்தை பாரதிராஜா இயக்க வேண்டுமா? ' என்ற விமர்சனம் எழுந்தது.
கே. பாக்யராஜ் கதை எழுத, பாரதிராஜா இயக்கிய படம் 'ஒரு கைதியின் டைரி'. கமல் ஹீரோ. அருமையான திரைக்கதை. விறுவிறுப்பான காட்சிகள். கமல், ரேவதி ஆகியோரின் அருமையான நடிப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்தது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படமது.
ரஜினி நடித்து, பாரதிராஜா இயக்கிய 'கொடி பறக்குது' வெற்றி பெறவில்லை.
நடிப்பு மாமேதை சிவாஜி கணேசனை வைத்து பாரதிராஜா இயக்கிய 'முதல் மரியாதை' காலமெல்லாம் பாரதிராஜாவின் பெயரைக் கூறிக் கொண்டேயிருக்கும். 'பூங்காற்று திரும்புமா? ' பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிவாஜி, பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து அனைவரும் நம் நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள்.
பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க படம் 'கடலோரக் கவிதைகள்'அவரின் துணிச்சலான முயற்சி. 'வேதம் புதிது'. 'வா ராசா வா'என்று சரிதா சிறுவனை வீட்டிற்குள் அழைக்கும் காட்சி மனதிலேயே நிற்கிறது.
'புது நெல்லு புது நாத்து'-பாரதிராஜா இயக்கிய இன்னொரு நல்ல படம். 'வர்ற லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும்? நான் எப்பவும் நல்லதுதான் சொல்லுவேன். நல்லதுதான் செய்வேன். இந்த ஜனங்கதான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க' என்ற நெப்போலியனையும், கதாநாயகன் ராகுல் தோளில் போட்டு தூக்கிக் கொண்டு போகும்போது, அவரின் முதுகை விரல்களால் வருடும் சுகன்யாவையும் எப்படி மறக்க முடியும்?
பாரதிராஜாவை புகழ் குன்றின் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த படம் 'கிழக்குச் சீமையிலே'. விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் மூவரும் கதாபாத்திரங்களாகவே அதில் வாழ்ந்திருந்தார்கள். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த தென் கிழக்குச் சீமையிலே, மானூத்து மந்தையிலே, ஆத்தங்கரை மரமே ஆகிய பாடல்கள் இப்போதும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றனவே!
வித்தியாசமான கதை என்று இயக்கிய 'என் உயிர் தோழன்'. . தேசிய விருதுகள் பெற்ற 'கருத்தம்மா'. . . 'அந்தி மந்தாரை'. . . 'கடல் பூக்கள்'. . . மாறுபட்ட முயற்சியான 'கேப்டன் மகள்'. . . சிவாஜி நடித்த 'பசும்பொன்'. . ஏ. ஆர். ரஹ்மானின் இனிய பாடல்களைக் கொண்ட 'தாஜ்மஹால்'. . . ஆங்கிலேயர் காலத்து காதல் கதையான 'நாடோடித் தென்றல்'. . . எதிர் பார்த்த வெற்றியைப் பெறாமல் போன 'அன்னக்கொடி'. . . விஜயகாந்த் நடித்த 'தமிழ்செல்வன் ஐ. ஏ. எஸ். . . நல்ல முயற்சியான 'கண்களால் கைது செய்'. . . . அருமையான படமான 'பொம்மலாட்டம்'. . . இப்படி பாரதிராஜாவின் சாதனைகளையும், பெருமைகளையும் கூறிக் கொண்டே போகலாம்.
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், யாரும் படத்தை இயக்கலாம், யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்ற சூழ்நிலை உண்டாகி, கூட்டம் கூட்டமாக ஆட்கள் வெளியூர்களிலிருந்து தினமும் படவுலகைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால். . . அவர்கள் பாரதிராஜாவிற்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் கோட்டைகளைத் தகர்த்தெறிந்து இந்த அருமையான சூழ்நிலையை உண்டாக்கிய மாமனிதர். அவர் போட்ட பாதையில்தான் இன்று எல்லோரும் சந்தோஷமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பாதை போட்டவரை மறக்கலாமா?