அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4800
நான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன். அதுதான் முதல் காட்சி. தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும். ஆனால், அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது. எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க, கவுண்டரை மூடி விட்டார்கள். எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம். எனினும், தாங்கிக் கொண்டேன். அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை. நான் மட்டுமல்ல. . . எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள், பின்னால் நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை. அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம். இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது. நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.
இவ்வளவு நேரம் வரிசையில் நின்றும், சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. எனக்கு அழுகையே வந்து விட்டது. எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க, கவுண்டரை மூடி விட்டார்கள். எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது. அவ்வளவுதான். . . என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது. துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன். நான் போய் அமர்ந்ததும், படம் ஆரம்பித்தது. 'ஓ மானிட ஜாதியே'என்று சிவாஜி பாடியபோது, ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள். அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால், இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார். அதை கண்கூடாக 'ந்யூ சினிமா'வில் 'வசந்த மாளிகை' படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது. 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' என்று திரையில் சிவாஜி பாடியபோது, இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள். 'மயக்கமென்ன இந்த மவுனமென்ன' என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது. தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள். 'லதா. அதோ பார். . . உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை' என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது, மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது. 'இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்' என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது, அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள். இறுதியில் 'யாருக்காக? யாருக்காக? இந்த மாளிகை வசந்த மாளிகை. . . 'என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது, திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. 'ந்யூ சினிமா'வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
இதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் 'எங்கள் தங்கராஜா'. பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மோட்டார் பைக்கில், பெல் பாட்டம் பேண்ட் அணிந்து, அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி. . . . 'ந்யூ சினிமா'வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. 'கற்பாம். , மானமாம். , கண்ணகியாம். . சீதையாம். . . ' என்று சிவாஜி பாடியபோது, அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள். மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ 'இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை? ' என்று பாடி ஆடியபோதும், 'கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா? என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை 'பொத்'தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே!அது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
காலம் மாறலாம். . . கோலங்கள் மாறலாம். . . மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். . . நேற்று இருந்தோர் இன்று இல்லை. . . இன்று இருப்போர் நாளை. . . ? 'ந்யூ சினிமா'விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. அதற்காக. . . . கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும், பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா?