அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4801
மறக்க முடியுமா? - சுரா (Sura)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
சமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன். ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன். அந்த கட்டிடம்- 'ந்யூ சினிமா' என்ற திரையரங்கம். 1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.
அதே இடத்திலிருந்த எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும், அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம். ஏ. படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்!காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்? ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும், வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய 'ந்யூ சினிமா'திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து, பகட்டெல்லாம் இல்லாமற் போய், சிதிலமடைந்து, செடிகள் முளைத்து, அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. காலம் கட்டிடங்களை மட்டுமல்ல, மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது, மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும், இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் 'ந்யூ சினிமா' பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம். திரையரங்கின் பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால், அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.
இன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் திரையிடப்பட்டிருக்கின்றன. எம். ஜி. ஆர். நடித்த படங்கள் மீனாட்சி, சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால், சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா, தேவி, சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும். நான் நடிகர் திலகத்தின் ரசிகன். அவர் நடித்த திரைப்படம் வருகிறது என்றால், படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன். இந்த 'ந்யூ சினிமா'வில்தான் நான் சிவாஜி நடித்த 'ராமன் எத்தனை ராமனடி'படத்தைப் பார்த்தேன். ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும், பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும், நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு' என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது, நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து, கும்மாளமிட்டோம். அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே. ஆர். விஜயா தன்னை மறந்து விட்டு, முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும், சிவாஜி கணேசன் கதாபாத்திரமாகவே மாறி, முகம் முழுவதும் சோகத்தையும், ஏமாற்றத்தையும், கவலையையும், இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது, அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம். . . நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம். . , நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம். இதுதான் உண்மை. 'ந்யூ சினிமா'வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.
நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான 'வசந்த மாளிகை'இந்த 'ந்யூ சினிமா'வில்தான் திரையிடப்பட்டது. இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார். பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது. மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார். நடிகர் திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் 'வசந்த மாளிகை' திரைக்கு வந்தது. திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ?