மனசு ஒரு தினுசு - Page 4
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 8875
'அவன் நல்லவன் இல்லை' என்று அப்பா எடுத்துக் கூறினாலும் அவளது மனம் அதை ஏற்காமல் அவரையே எடுத்தெறிந்து பேசுவாள். 'நான் இப்படித்தான். எனக்கு அவன்தான்' என்று அவளது மனம் எடுத்த தீர்மானமான முடிவை அறியும் தகப்பனின் மனசு அழும். அவளைத் தற்காலிகமாக சிரிக்க வைத்த காதல், அவளது அப்பாவை நிரந்தரமாக அழவைக்கும். எல்லாமே மனதின் வேடிக்கை விளையாட்டு. அவளது மனம் எடுத்த தீர்மானமான முடிவின் தீர்ப்பு!
'கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இதை செஞ்சுடுப்பா?' என்று நமக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டி இருந்தால் இப்படி கேட்போம். அதென்ன கொஞ்சம்... அதென்ன பெரிய மனசு?! 'மனசு வச்சா நடக்கும்' என்கிற நடைமுறை உண்மையை அடிப்படையாக வைத்து பேச்சு வழக்கில் இவ்விதம் கேட்கிறோம்.
இரும்பை அருகில் வைத்தால் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது காந்தம். அது போல நல்லதையும், கெட்டதையும் காந்தம் போல தன்னுள் இழுத்துக் கொள்வது மனம். புத்திசாலித்தனமாக சிந்தித்து நன்மைகளை மட்டுமே நம் மனதிற்குள் ஈர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
மனப் பொருத்தம் இருந்தால் மணப் பொருத்தமும் கூடி வரும் என்று சொல்வார்கள். திருமண வாழ்க்கையில் இரு மனம் இணைந்தாலும் தம்பதிகளுக்குள் மன வேறுபாடுகள் இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்களில் ஒருவர் விட்டுக் கொடுத்து, தங்கள் மனதில் நினைப்பதை சொல்வதற்குக் கூட யோசித்து தியாகம் செய்வார்கள்.
தன் ஆசையையும், தன் எண்ணத்தையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து தியாக மனப்பான்மையால், தங்கள் வாழ்க்கையை ஜெயிக்க வைப்பவர்கள் பெண்களிலும் உண்டு. ஆண்களிலும் உண்டு. நான் என் மனதில் நினைப்பதைத்தான் செய்ய வேண்டும், செய்தே தீர வேண்டும் என்று இருவருமே வீம்பு பிடித்தால்...? குடும்ப வாழ்க்கையின் சந்தோஷம் தொலைந்து போய்விடும். சஞ்சலம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
மனதை அடக்கி ஆள்வது நம்மிடம்தான் இருக்கின்றது. தங்கள் மனதில் நினைப்பதை சாதிப்பதற்காக, மற்றவர்களை அடக்குவதை விட நமக்குள், நமது கட்டுப்பாட்டில் இருக்கும் மனதை அடக்கலாமே. 'அவனுக்கு / அவளுக்கு இளகிய மனசு' 'இரக்கமான மனசு' 'பூப்போல மனசு' 'தாராள மனசு' இவ்விதமெல்லாம் மனசு பற்றி குறிப்பிட்டு பேசுகிறோம்.
பழிவாங்கும் உணர்வை மனதின் ஒரத்தில் புதைத்து வைத்து அதை செயல்படுத்துவதற்குரிய நேரத்தையும், திட்டத்தையும் யோசித்துக் கொண்டிருப்பதை விட மன்னிப்பதும், மறப்பதும் சாலச்சிறந்தது.
மமதை இல்லாத மனதை உடையவர்கள் மனிதரில் மாணிக்கங்கள். ஒரு தினுசான மனசை அதன் போக்கில் போக விடாமல் நம் போக்கில் அதை வர வைத்து நீரோடை போன்ற தெளிவான வாழ்க்கை வாழலாம். தெய்வீக மணம் வீசும் அமைதியை அனுபவித்து வாழலாம்.