மனசு ஒரு தினுசு
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 8875
நம் உடலின் முக்கியமான அங்கம் இதயம். மனது என்பது இதயம் என்கிற உடல் அங்கத்திற்கு அப்பாற்பட்டு, நம்முள் ஐக்கியமாகிப் போன ஒன்று. நினைவுகளின் சுரங்கம் மனது.
சாதாரணமாக நாம் பேசும் பொழுது மனசு என்று தான் குறிப்பிடுகிறோம். இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தால் அதிலுள்ள அனைத்தும் ஃபிலிமில் தெரிந்து விடும். ஆனால் இந்த மனசு இருக்கே? இது என்ன நினைக்கிறது? யாரைப்பற்றி நினைக்கிறது என்பதை எந்த ஸ்கேன் சாதனம் கொண்டும் அறிய முடியாது.
மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது குரங்கோ இல்லையோ மர்மங்கள் நிறைந்த குகை!
ஒரு பெரியவரைப் பார்க்கிறோம். அவர் மரியாதைக்குரிய தோற்றத்தோடு காணப்பட்டார் எனில் 'வணக்கத்துக்குரிய மனிதராக இருக்கிறாரே' என்று நினைப்போம். அந்த நினைப்பின் பிரதிபலிப்பாய் ஒரு புன்னகையை சிந்துவோம்.
அதே வயதில் கரடு முரடான தேற்றத்தோடு, ஒழுங்கீனமான உடை அணிந்துக் கொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு அநாகரீகமான தோற்றத்தோடு காணப்பட்டால் அதன் பிரதிபலிப்பான வெறுப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதிற்குள் மறைத்துக் கொள்வோம்.
"என்ன? இவ்வளவு லேட்டா எழுந்திருச்சு வர்ற? உன் பிறந்த வீட்ல இப்பிடித்தான் வளர்த்தாங்களா உன்னை..." என்று மாமியார் கேட்கும் பொழுது மனதிற்குள் வசைமொழி ஓடும்.
'உங்க மகள் காலையில பத்து மணி வரைக்கும் தூங்கிட்டு பல் கூட விளக்காம நேரா காப்பி குடிக்க சமையல்கட்டுக்கு வர்றாளே... நீங்க பொண்னை வளர்க்கிற லட்சணம் தெரியாதாக்கும்' என்று மருமகளின் மனசு பேசும்.
இதை அறியாத மாமியார் மேலும் தன் வசவுகளைத் தொடர்வார்.
"அண்ணி..... காப்பி போட்டுக் குடுங்க" என்று பத்து மணி வரை தூங்கிய நாத்தனார் வந்து கேட்கும் பொழுது மனசு எரியும். ஆனால் கைகள் காப்பி போட இயங்கும்.
'உங்க அம்மா காலங்கார்த்தால என்னை திட்டிட்டாங்க. உனக்கு நான் காப்பி போட்டுத் தரணுமாக்கும்' என்ற மனதின் குரல் வாய்மொழியாக வெளிவராது. அடங்காத கோபத்தையும் அடக்கி வாசிக்க வைப்பது மனம். சின்னதாய் எழும் சினத்தைக் கூட மிகப் பெரிதாய் வெளிப்படுத்த வைப்பதும் அதே மனம் தான்.
சில நேரம் யார் மீதாவது கோபம் வந்தால், "நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க உன் மனசில" என்று கேட்பது வழக்கம்.
"அவன் மனசுல, அவன் என்னமோ பெரிய இவன்னு நினைப்பு" என்பதும் சகஜமான பேச்சு.
திருமணத்திற்கு சம்மதிக்காமல் தாமதப்படுத்திக் கொண் டிருக்கும் மகனிடம் அப்பாவோ, அம்மாவோ, "நீ யாரையாவது மனசில நினைச்சுக்கிட்டிருந்தா சொல்லுடா" என்று கேட்பதுண்டு.
"அவன் மனசுக்குள்ள ஒண்ணு வச்சுக்கிட்டு வெளியில வேற ஒண்ணு பேசுவான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்" என்று பேசுவார்கள்.
"பெண்களோட மனசு ரொம்ப ஆழமானது. அதை யாராலையும் புரிஞ்சுக்க முடியாது" என்பார்கள். பெண்களென்ன..... ஆண்களென்ன.... யாருடைய மனதையும் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது.
"என்னோட மனசுல நான் ஒண்ணு நினைச்சிருக்கேன். அதை நீ என்னன்னு கண்டுபிடி பார்க்கலாம்" இது ஒரு வேடிக்கை விளையாட்டு.
"அவள் மனம் போனபடி பேசித்தீர்த்துட்டாள்ப்பா."
"அவனுக்கென்ன, அவன் மனம் போன போக்குல போவான்."
"அவ தன்னோட மனசுல ஒண்ணை நினைசுட்டாள்ன்னா...... அதை செஞ்சுட்டுதான் மறு வேலை பார்ப்பா....."
"மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பு...."
"மனசுல பெரிய மந்திரின்னு நினைப்பு"
"மனசே சரி இல்லை...."
"மனசு கஷ்டமா இருக்கு."
"தீடீர்னு என்னவோ தெரியலை.... மனசு மாறிட்டான்."
"அவன் மனசுல அவனுக்கு பெரிய பிஸ்தான்னு நினைப்பு."
"என் மனம் திறந்து சொல்றேன்."
" உன் மனசும் என் மனசும் ஒரே மாதிரியா நினைக்குது பார்த்தியா? "
"யார் மனசுல யாரோ? யாருக்கு தெரியும்?"
"உன் மனசுல எது சரின்னு படுதோ அதைச் செய்."
"மனசார சொல்றேன், மனசார வாழ்த்தறேன்."
"மனசெல்லாம் மத்தாப்பூ."
"மனசெல்லாம் மந்த்ரா."
"இங்கிருந்து கிளம்பறதுக்கே எனக்கு மனசு இல்ல."
"என் மனசு படாதபாடு பட்டுடுச்சு."
"என் மனசுல நான் அவனை கரம் வச்சுக்கிட்டே இருக்கேன்."
"நான் ராமனைப் போன்றவன். மனசால கூட என் மனைவியைத் தவிர வேறு ஒருத்தியை தொட்டதில்லை / தொடமாட்டேன்" (ஆண்களில் யாருமே ராமன் இல்லை என்பது ஊரும், உலகமும் அறிந்த விஷயம். ஆனால் மேற்கூறிய வசனம் பேசுவது என்றென்றும் உள்ள வழக்கம்.)
"மனசை அப்பிடியே அள்ளுதுப்பா."
" என் மனசு ஏங்குற ஏக்கம் உனக்கென்ன தெரியும்?"
"என்ன? மனசுக்குள்ளயே என்னைத் திட்டிக்கிட்டிருக்கியா?"
"உங்க மனசுக்குப் பிடிக்காததை நான் என்னிக்காவது செஞ்சிருக்கேனா?"
"என் மனசுல உன்னைப்பத்தி ரொம்ப உயர்வா நினைச்சுகிட்டிருந்தேன்."
"என் மனசுல உனக்காக ஒரு கோயில் கட்டியிருக்கேன்."
"உன் மனசுல கொஞ்சமாவது ஈவு... இரக்கம் இருக்கா? "
"என் மனசுல அவர் இல்லை... "
"என் மனசுல அவள் இல்லை..."
"என் மனசுல அவளைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை"
"என் மனசுல அவருக்கு மட்டும் தான் இடம்"
"வேறு யாரையும் என் மனசால கூட நினைச்சுப் பார்க்க முடியாது"
''என் மனசு உடைஞ்சுபோச்சு."
"கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த என் மகன் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசு மாறி, கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்."
ஆகா... அடடா... ஐயகோ!... தினுசு தினுசாக இந்த மனசு விளையாடும் வார்த்தை விளையாட்டு இருக்கிறதே?! வாழ்க்கை முழுசும் தொடரும் விளையாட்டுத்தான்.
சில சமயம் மனசு நினைப்பதை உதடுகள் பேசாது. உதடுகள் எதையோ பேசிக் கொண்டிருக்க, மனம் அவற்றிற்கு சம்பந்தமில்லாமல் அதன் போக்கில் எதையோ நினைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நாம் பேசிக் கொண்டிருக்கும் நபர், நாம் பேசுவதைக் கேட்பது போன்ற பாவனையில் இருப்பார். ஆனால் அவரது மனம் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும். மனசு ஒரு தினுசு. ஒரு சமயம் நல்லதை நினைக்கும். பிறிதொரு சமயம் நல்லன அல்லாததை நினைக்கும்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் போன்ற கற்பனை வளம் மிக்கவர்களின் மனதில் அவர்களது கதைக்கேற்ற சம்பவங்கள், காட்சிகள், வசனங்கள் இவை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். மனதில் தோன்றியவற்றை உடனே எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ள முனைவார்கள்.