மனசு ஒரு தினுசு - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 8875
'என்னோட கதாபத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும். என் கற்பனையில் நான் வடித்து உருவகப்படுத்தியுள்ள கதாபாத் திரத்தின் உருவம் இப்படித்தான் இருக்க வேண்டும், கண்கள் இப்படி இருக்க வேண்டும், உயரம் இவ்வளவு இருக்க வேண்டும்' என்று திரைப்பட இயக்குனர்கள் அவர்களது மனதில் கற்பனை செய்து வைத்துள்ள உருவத்திற்குரிய கதாநாயகியையோ, கதாநாயகனையோ தேடி அலைவார்கள். 'என் மனசுல நான் நினைச்ச மாதிரி கதாநாயகி கிடைச்சுட்டா' என்று கூறி மகிழ்ச்சி அடைவார்கள்.
எழுத்தாளர்கள் கதை எழுதும் பொழுது அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை எங்கே.... எப்படி.... சந்திக்க வைப்பது என்று மனதிற்குள் யோசித்து, அதன் பின்னரே எழுதுவார்கள். கதையை நகர்த்துவதற்குத் தேவையான சம்பவங்களைப் பற்றிய சிந்தனையிலும் கதாபாத்திரங்கள் பேச வேண்டிய வசனங்கள் பற்றிய சிந்தனையிலும் அவர்களது மனம் மூழ்கி இருக்கும்.
இதயத்திற்கு வடிவம் உண்டு. மனதிற்கு வடிவம் கிடையாது. உருவமில்லாதது மனது. உருவம் இல்லாத இந்த மனது, உயிரோடும், உருவத்தோடும் உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களை என்னமாய் படுத்துகிறது! சந்தோஷம், மிதமிஞ்சிய சந்தோஷம், குதூகலம், கொண்டாட்டம், குஷி, பயம் போன்ற வெவ்வேறு அளவுகளிலான மகிழ்ச்சியையும் சோகம், துக்கம், துயரம் போன்ற வெவ்வேறு அளவுகளிலான துன்பத்தையும் உணர வைப்பது இந்த மனதுதான்.
நம் மீது அன்பு செலுத்துபவரின் அன்பின் அளவை கண்களால் பார்த்து அறிய முடியாது. மனதால் உணர்ந்து அறிய முடியும். மனம் என்பது சிந்தனைகளின் சிறை. இதற்கு நாம் முயன்றால்தான் விடுதலை கொடுக்க முடியும். அமைதியானது மனம். ஆனால் நமக்கு நடைபெறும் நிகழ்வுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது புயலாகும்.
'ஒருவரை வெளிப்புறம் பார்க்கும் பொழுது, அவர் தெளிவானவராக, சராசரி மனிதராக/மனுஷியாக தெரியும். ஆனால் அவரது மனதிற்குள்?! ஏகப்பட்ட ஆசைகள், வெறுப்புகள், அன்பு, வஞ்சம், பொறாமை, குழப்பம், சூது, வாது, பழிவாங்கும் கெட்ட எண்ணம், வாழ்த்தும் நல்ல எண்ணம், தன்னம்பிக்கை, இயலாமை, அடக்கம், கர்வம், குற்றமனப்பான்மை, போன்ற பல்வேறு எண்ணங்கள் அடைக்கலமாகி இருக்கும்! மனம் என்பது மூளையின் தூண்டுதலால் இயங்குவது; மனநலம் என்பது மனிதர்க்கு மிக முக்கியமான ஒன்றாகும். உடல் பலம் இல்லாதவன் கூட சராசரி வாழ்வு வாழலாம். ஆனால் மனநலம் குன்றியவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. நினைவாற்றலுக்கு மனபலம் மிக முக்கியம்.
இதைத்தவிர 'ஆழ்மனம்' என்ற ஒன்றை மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனநல ஆலோசகர் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.
ஒரு மாணவி, தலைமை ஆசிரியரை சந்திக்கும் பொழுது அவளது மனதிற்குள் பயம் என்ற உணர்வு எழுகிறது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு தன் மேலதிகாரியை சந்திக்கும் பொழுது மனதிற்குள் பயம் உண்டாகிறது.
'கத்தி முனையில் ரத்தம்' போன்ற பயங்கரக் காட்சிகள் உள்ள திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது பயம். மர்ம நாவல்களைப் படிக்கும் பொழுது ஏற்படும் பயம்! இத்தகைய பய உணர்வைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டது மனம்.
அழகான பெண்ணை ஒரு ஆடவன் பார்க்கும் பொழுது அவளை மீண்டும் மீண்டும் பார்த்து ரகஸியமாய் ரஸிக்கத் தூண்டுவது மனம். அவன் ரஸிப்பது, அவனுடைய மனதிற்கு மட்டுமே தெரியும் விஷயம்.
'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா - அது
கொஞ்சி கொஞ்சி பேசறது கண்ணில் தெரியுமா?'
காதலுக்குட்பட்டவர்கள் பாடும் இந்த பாடல் வரிகள்தான் எத்தனை அழகாக மனம் சம்பந்தப்பட்ட காதலை சொல்லாமல் சொல்கிறது?!
காதல் வயப்பட்ட பெண், "ஆடாத மனமும் ஆடுதே... ஆனந்த கீதம் பாடுதே... வாடாத காதல் இன்பமெல்லாம் வா... வா... நாம் காணலாம்..." என்று தன் மனம் அனுபவிக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வரித்து பாடி மகிழ்கிறாள். இதுவும் கவிஞரின் திரைப்படப்பாடல்தான்.
நிலவு, கண்கள் போன்ற வார்த்தைகளை கவிஞர்கள் தங்கள் பாடல்களில் நிறைய பயன்படுத்துவதுண்டு. அவற்றின் வரிசையில் மனம், இதயம், நெஞ்சம் ஆகிய வார்த்தைகளும் அணிவகுத்து நிற்கின்றன.
'உன் மனசில நான் மட்டுமே இருக்கணும். என் மனசில நீ மட்டும்தான் இருக்க' என்று காதலன், காதலியிடம் அள்ளித் தெளிக்கும் அண்டப்புளுகான வசனம். இதே வசனத்தை அவன் எத்தனையோ பெண்களிடம் கூறி இருப்பான். கூறுவான். அனைத்து காதலர்களும் இவ்விதம் அல்ல. ஆண்களில் அநேகர் இப்படித்தான்.
கோவிலில், தெய்வ சந்நிதியில் கண்களை மூடி சாமியை வணங்கிக் கொண்டு இருக்கும் பொழுது கூட, 'இன்னிக்கு அவள் இன்னும் வரலியே... தினமும் இந்த நேரத்துக்கு கரெக்ட்டா வந்துருவாளே...' என்று தினமும் கோவிலுக்கு வரும் பெண்களில் ஒருத்தியை 'கரெக்ட்' பண்ணுவதற்காக அவனது மனம் மேற்படி நினைக்கும். அந்த ஆசாமி, சாமி கும்பிடவா வருகிறான்?! அழகான பெண்களின் மனதை அபகரிக்க அல்லவா வருகிறான்?
இது புரியாத பேதைப் பெண்கள், நல்ல காதலனை / கணவனை கொடு தெய்வமே என்று தாங்கள் 'மன'தார வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை கோவிலில் உள்ள தெய்வம் செவி சாய்த்து கேட்டு, அந்த வாலிபனை தனக்கு காட்டியதாக மனதிற்குள் கற்பனை செய்து கொள்வார்கள். தாங்கள் வேண்டிக் கொண்ட பிரார்த்தனை நிறைவேறி விட்டதாக நம்பி அவர்களது மனது துள்ளாட்டம் போடும்.
இது போன்ற பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புகளையும் தோற்றுவிப்பது நம் மனசு. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் சரி, கெட்டதுக்கும் சரி, அவற்றின் வெளிப்பாடுகளை உணர வைப்பது மனம். நல்ல விஷயத்திற்கு ஆனந்தத் தாண்டவம் ஆடும் அந்த மனம், கெட்ட விஷயத்திற்கு கோர தாண்டவம் ஆடும்.
சந்தோஷமான சூழ்நிலைகளில் 'என் மனசு குதியாட்டம் போட்டுச்சு' என்று சொல்லி குதூகலிக்கிறோம். இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்களின் சில படங்களில் மனம் மற்றும் மனசாட்சி பேசும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்கு மிக ஆர்வமாக இருக்கும். இக்காட்சியை 'மைன்ட்வாய்ஸ்' (Mind Voice) என்பார்கள்.
உதடுகள் வேறு பேசினாலும் உள் மனசு அதற்கு மாறாக எதையோ பேசிக் கொண்டிருக்கும். இந்த அனுபவம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம் மனதில் நினைப்பதை வாய் விட்டு சொல்ல முடியாமல் தவிப்போம்.
'என் மனசு சுத்தமா இருக்கு. மழை பெஞ்சு நனைச்ச பூமி மாதிரி அமைதியா இருக்கு.' இப்படியெல்லாம் பேசுவது நம் வழக்கம்.