நட்புக்கு மரியாதை
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6762
நட்பு என்பது மாசு, மறுவில்லாத மகத்தான உணர்வு. மலர்ந்து மணம் வீசும் உணர்வு. அன்பு, நேசம், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம் போன்ற அனைத்து உணர்வுக் கோர்வைகளின் அற்புதமான கலவை நட்பு. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடங்கிய அபூர்வ நேயம் நட்பு!
'உனக்காக நான், எனக்காக நீ' என்ற உணர்வின் உந்துதலை அளிப்பது நட்பு. அது எப்படி? வேறு ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் ஓருயிர், ஈருடலாய் நண்பர்களாவது எப்படி சாத்தியம்? நட்பில் அடங்கியுள்ள மகத்தான சக்திதான் காரணம்.
'உனக்காக நான், என்ன வேண்டுமானாலும் செய்வேன். எதை வேண்டுமானாலும் தருவேன். உனது... எனது... என்று இனி இல்லை. இனி எல்லாமே நமது... நமதுதான்' என்கின்ற நேயங்களை மனதிற்குள் மாயமந்திரமாய் உருவாக்குவது நட்பு!
ஐந்து வயதில் ஏற்படும் நட்பில், 'காக்கா கடி' கடிச்சுக் குடுத்த கமர்கட்டின் 'கமகம' வாசனை, காலத்தால் அழிக்க முடியாத நினைவுக் கோலங்கள்! சிறு வயதில் கமர்கட்டை கடித்துத் கொடுக்கச் செய்த நட்பு, பின்னாளில் தன் சட்டையைக் கழற்றிக் கொடுக்கும் நட்பாக பரிணாம வளர்ச்சி அடைகின்றது. தன்னிடமுள்ள பொருளைப் பார்த்து நண்பனோ, சிநேகிதியோ ஆசைப்பட்டு விட்டால் உடனே, மறு கணமே.... ஒரு விநாடி கூட யோசிக்காமல் 'நீ வச்சக்கோ; இது உனக்கே உனக்கு' என்று வழங்கக்கூடிய அன்பும், தாராள மனமும் நட்பில் நிறையவே உண்டு.
கொடுப்பதில் சுகம் அளிப்பது நட்பு. தியாகத்தில் திளைக்கச் செய்வது நட்பு. நட்புக்காக எதையும் செய்யத் தூண்டுவது நட்பு. ஆனால் அந்த நட்பையே தியாகம் செய்யச் சொன்னால்? அது மட்டும் முடியாது. அதற்கு மட்டும் வழியே இல்லை. நட்பை தியாகம் செய்யச் சொன்னாலோ 'நட்பை விட்டு விடு, விலகி வந்து விடு' என்று சொல்லப்பட்டாலோ அந்த வலி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளே கிடையாது. காதலைக் கூட விட்டுக் கொடுக்கும் கனிவான இதயத்தை உருவாக்குவது நட்பு.
தெரிந்தவர்கள், உற்றார் - உறவினர்களிடம் நண்பனை அறிமுகப்படுத்தும் பொழுது 'இவன் என் உயிர்த்தோழன்/என் உயிர்த்தோழி' என்கிறோம். நம் அம்மா, அப்பாவைக் கூட என் உயிர் அம்மா, என் உயிர் அப்பா என்று அறிமுகப்படுத்துவதில்லை. அம்மா, அப்பா மீது நம் உயிரையே வைத்திருந்தாலும் அது இயல்பான, இயற்கையான உணர்வு. எனவே அதை நாம் அவ்விதம் குறிப்பிடுவதில்லை. அம்மா, அப்பாவிற்கு நிகரான அன்பு வைத்திருக்கும் நட்பு என்பதை அந்த ஒற்றை வார்த்தை 'உயிர்' என்பதில் மெய்ப்பிக்கிறோம்.
அம்மாவின் பாசத்தைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது 'எங்க அம்மா என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி பழகுவாங்க தெரியுமா?/ எங்க அப்பா என் கூட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி பழகுவார் தெரியுமா?' என்கிறோம். நட்பின் அர்த்தத்திற்கு இதைத் தவிர பெரிதாக வேறு என்ன கூற முடியும்?
எனது நாவல்களைத் தவறாமல் படித்து வரும் ஒரு வாசகி என்னிடம் அவ்வப்போது ஃபோன் பண்ணி பேசுவார். அவர் ஒரு கல்லூரி மாணவி. அவருக்கு ஏதாவது பிரச்சனை அல்லது மனக்கஷ்டம் என்றால் என்னோடு பகிர்ந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் எனக்கு ஃபோன் பண்ணினார். தயக்கமாய் ஒரு பிரச்சனையைக் கூற ஆரம்பித்தார்.
"மேடம், என்னோட உயிருக்குயிரான ஃப்ரெண்ட் ஒருத்தி. அவ ஏழை. நாங்க பள்ளிக்கூடத்துல எல்.கே.ஜி-யில இருந்து பழகறோம். வசதி இல்லாத காரணத்தினால அவளால காலேஜ் படிப்பு படிக்க முடியல. ஆனா நாங்க எங்க நட்பை தொடர்ந்தோம். காலேஜ் முடிஞ்சதும் நேரா அவ வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுதான் நான் என் வீட்டிற்கு வருவேன். அவளும் நான் எப்ப வருவேன்னு வாசலிலேயே பழியா காத்திருப்பா. வழி மேல விழி வச்சு பார்த்துக்கிட்டிருப்பா. அவளோட வீட்ல அவங்க அப்பா சரி இல்லை. வேலைக்குப் போறதில்லை. தப்பித்தவறி போனாலும், வந்த பணத்தை சாராயக் கடையில செலவு பண்ணிட்டு வருவாரு. அவங்க அம்மாவுக்கும் படிப்பு கிடையாது. வேற வேலையும் தெரியாது. அதனால சாப்பாட்டுக்கே சிரமம்.
அதனால என்னோட தோழியை அவங்கப்பா தவறான நபர்களின் பழக்கத்தால தவறான பாதைக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அழுது அடம் புடிச்ச என்னோட தோழி, தன் அம்மாவும், தம்பி, தங்கையும் பட்டினி கிடப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டா. இவள் மறுத்தால், குடிச்சுட்டு தன் அம்மாவை, அப்பா அடிச்சு நொறுக்கும் அவதியில இருந்து மீட்பதற்கு வேறு வழியே இல்லைன்னு தன்னை தியாகம் செய்யத் துணிஞ்சுட்டா. தன் மனதை கல்லாக்கிக்கிட்டா. மனதை மட்டும் அல்ல, தன் உடலையும் கல்லாக்கிக்கிட்டு, தன் அப்பா அழைத்துச் சென்ற தவறான இடத்துக்கு, தடம் மாறி போக ஆரம்பிச்சுட்டா.
தன்னை எரித்து ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல தன் உடலை அழிச்சு, கற்பைப் பறி குடுத்து, குடும்பத்தினரோட பசியை ஆற்றினா. மெள்ள மெள்ள அந்தரங்கமாக அரங்கேறும் இந்த அசிங்கம், அக்கம் பக்கத்தினர் அறிஞ்சுக்கற நிலைமை ஏற்பட்டு, விஷயம் வெளியே கசிஞ்சு, என் அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சு. 'இனி காலேஜ் முடிஞ்சு நேரா நம்ம வீட்டுக்கு வா. அவ வீட்டுக்குப் போகக்கூடாது. இனி அவளோட ஃப்ரெண்ட் ஷிப்பையும் விட்டுடு. அவளை மறந்துடு'ன்னு சொல்லிட்டாங்க" என்று கூறியவள், அதற்கு மேல் பேச இயலாமல் கதறி அழுதாள். சில நிமிடங்களில் அவளே மீண்டும் பேசினாள்.
"மேடம், என்னால அவளைப் பார்க்காம இருக்கவே முடியாது. எங்க அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியா நான் அவளைத்தான் ரொம்ப நேசிக்கிறேன். அதனால எங்க அம்மா, அப்பாவுக்குத் தெரியாம இது வரைக்கும் எதுவுமே செய்யாத நான், அவளைப் பார்க்க திருட்டுத்தனமா போக ஆரம்பிச்சுட்டேன். அவகிட்ட இந்த விஷயத்தை சொன்னப்ப அவ அழுதுட்டா. 'என்னாலதான், உனக்கு இவ்வளவு பிரச்சனை. உனக்கு உன்னோட பெத்தவங்கதான் முக்கியம். அதனால நீ... நீ... இனிமேல் இங்கே வராதேன்னு சொல்லி அழுதா. அவ அப்பிடி சொன்னப்ப என் நெஞ்சுக்குள்ள ஒரு எரிமலையே வெடிச்சுது. அவளும் என் மடியில முகம் புதைச்சு அழுதா.