நட்புக்கு மரியாதை - Page 3
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6763
வரலாற்றுப் பகுதியைப் பார்த்தோம் எனில் சீஸரும், ப்ருட்டசும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் திடீரென நிறம் மாறிய மனதுடன், கரத்தில் கத்தி கொண்டு சீஸரின் முதுகில், குத்தினான் ப்ருட்டஸ். அங்கேயும் நட்பு அழியவில்லை என்று அறுதியிட்டு கூறுவேன். அந்த நிலைமையிலும் சீஸர், தன் நட்பு மாறாத நேயத்துடன் 'யூ டு ப்ருட்டஸ்?' (' You too Brutus?') என்று கண்களில் நீர் மல்க, சிவந்த விழிகளுடன் கேட்டானே? கோபமே இல்லாத ஒரு நட்புறவுடன் வேதனை மயமாகத்தான் அவனது கேள்வி இருந்தது. அங்கே நட்பு இறக்கவில்லை. நண்பன் மட்டுமே இறந்தான்.
தன் நண்பன் அல்லது தோழியின் காதலுக்கு தூது போவது புராண காலத்தில் இருந்து இன்று வரை நடைபெற்று வரும் விஷயமாகும். தோழியின் காதலுக்கு தூது சென்று, அந்தக் காதலுக்கு தூபம் போட்டு வளர்த்து விடும் பொழுது ஏதோ இமாலய சாதனை செய்வது போன்ற சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தோன்றும் பொழுது?... காதலை ஆதரித்த தோழி இன்னும் பல படிகள் மேலே சென்று அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக மேலும் பாடு படுவாள். தனக்கு தன் தோழியின் குடும்பத்தினரால் பிரச்சனை ஏற்படும் என்றாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் தோழியின் காதலை கல்யாணத்தில் நிறைவு செய்ய உதவிகள் பல செய்வாள்.
தோழியின் குடும்பத்தில் தன்னை திட்டுவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று தெரிந்தும், தன் நட்புக்காக அவள் தியாகம் செய்கிறாள். இந்த சூழ்நிலையில் அவளது மனதில் தோழியின் நட்பு ஒன்று மட்டுமே குறியாக இருக்கும். அந்த நட்பிற்காக 'எதையும் தாங்கிக் கொள்வேன்' என்ற குறிக்கோள் மட்டுமே நிலைத்திருக்கும். பின்னாளில் தோழியின் காதல் திருமணத்தை அவளது பெற்றோர் அங்கீகாரம் செய்து, அவர்களை தங்களுடன் இணைத்து அவளது காதல் கணவனையும் தங்கள் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது முதன் முதலில் மிக்க மகிழ்ச்சி அடைவது அவளுக்கு உதவி செய்த அந்த உயிர்த்தோழிதான்.
தான் காதலிக்கும் பெண்ணையே தன் நண்பனும் விரும்புகிறான் என்று தெரிந்து கொண்ட நண்பன், தன் காதலை ஊமையாக்கி, தன் நண்பனின் காதலை வாழ வைப்பான். நட்புக்காக தன் காதலை மூடி மறைத்து நண்பனின் காதலை வெற்றியாக்கி மகிழும் அந்த தியாகம், நட்பிற்கு மட்டுமே உண்டு.
காதலா? நட்பா? என்று ஒரு இக்கட்டான நிலைமை வரும் போதும் எந்த ஒரு உண்மையான நண்பனும் நட்புதான் பெரிது என்று நட்புக்கு மரியாதை செய்வான். 'என்னை விட உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட் தான் உசத்தி' என்று கணவனிடம், செல்லமாய் சிணுங்கும் மனைவியர் உண்டு.
இவ்விதம் நட்பு என்பது மிக உயர்வானதாக மதிக்கப் படுகின்றது. நண்பர்கள்/தோழியர் ஒன்று கூடி விட்டால், அங்கே மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகின்றது. ஆரவாரமும், ஆனந்தமும் அலைமோதுகிறது. நம் அம்மா அப்பாவிடம் சொல்ல முடியாத விஷயங்களைக் கூட நண்பனிடம்/தோழியிடம் பகிர்ந்துக் கொள்கிறோம். அவ்விதம் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம் மனதில் அளவிட இயலாத ஆறுதல் பிறக்கிறது. அமைதி கிடைக்கிறது. உறவுகள் நமக்கு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள். நண்பர்கள்/தோழிகள் ரத்த சம்பந்தமே இல்லாத போதும் உறவினர்க்கு மேலாக நமக்குத் தோள் கொடுப்பவர்கள்.
நட்பு என்பது நம் மனதை ஊடுருவிச் செல்லும் ஒரு உணர்வு. இவன்தான்/இவள்தான் எனக்கு எல்லாம் என்கிற நெருக்கத்தை ஏற்படுத்தும் சக்தி நட்பிற்கு உண்டு. வேறு யார் நம்மை பிரிந்து சென்றாலும், அதைக் கஷ்டப்பட்டாவது தாங்கி கொள்வோம்... ஆனால் நண்பனோ/தோழியோ பிரிந்து செல்வதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவர்களின் பிரிவு, திருமணம், மேற்படிப்பு போன்ற நல்ல விஷயங்களுக்காக இருப்பினும் அந்தப் பிரிவு நமக்கு துயரத்தையே கொடுக்கிறது.
நட்பு நாகரீகமானது. தெய்வீகமானது. மனித நேயங்களில் மிக உயர்ந்த ஒரு ஸ்தானத்தைப் பெற்றுள்ள நட்புக்கு மரியாதை செய்வோம்.