நட்புக்கு மரியாதை - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6763
'உன் வீட்டுக்கு தெரியாம நீ இங்கே வர்றது பெரிய பிரச்சனையாயிடும்ன்னு சொன்னா. உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலியேன்னு சொல்லி நானும் அழுதேன். யாருக்கும் தெரியாம அவ வீட்டுக்கு நான் போறது எங்க அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட கண்டிப்பு, கண்காணிப்புன்னு ஆனதுனால தினமும் அவளைப் பார்க்க முடியாத சூழ்நிலையாயிடுச்சு, அவளைப் பார்க்காத நாட்கள் எல்லாம் முட்களா என் மனசைக் குத்துது மேடம். இதுக்காக நீங்க ஏதாவது எழுதக் கூடாதா?" என்று கேட்டு, நீண்ட தன் பேச்சை நிறுத்தினாள் அந்தப் பெண்.
'உன் குடும்ப சூழ்நிலை, உன்னோட தோழியோட குடும்ப சூழ்நிலை, அவளோட வீட்டுக்கு போறதால உனக்கு எந்த வகையான பிரச்சனை வரும்ன்னு தெரியாம பொத்தாம் பொதுவா எதுவும் எழுத முடியாது. எழுதக் கூடாது. ஆனா நட்பைப்பத்தி நிச்சயமா நான் எழுதுவேன்' என்று அவளிடம் கூறி, அதன் மூலம் எழுதப்படும் கருத்துப் பரிமாற்றம்தான் இந்தக் கட்டுரை.
நேர்மையே உருவான அந்தப் பெண், நட்பிற்காக நேர்மை தவறி, தன் பெற்றோரிடம் சொல்லாமல் தோழியைப் போய் பார்க்க நேரிட்ட நிகழ்ச்சி அது. நட்பின் வலிமை அவளை அப்படி ஒரு நேர்மையற்ற செயலை செய்யத் தூண்டியது.
நட்பு என்ற உணர்வை அவரவர் அனுபவித்தால் மட்டுமே அது எத்தனை புனிதமானது. உள்ளத்துக்குள் ஊடுருவி, உயிரையே உருக்கும் உத்தமமான உணர்வு என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நட்பு எனும் உணர்விற்கு நட்பாகவே இருப்போம். அதைத்தடுக்கும் தீய சக்தியாக எரிக்க மாட்டோம்.
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் நட்பாக பழகுவது, ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பாக பழகுவது பொதுவானது. ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவது நம் நாட்டில் சமீபகாலமாகத்தான் உருவாகியுள்ளது, பரவி வருகிறது. இந்த நட்பில் களங்கம் இல்லை. கள்ளம் இல்லை. பெண்ணுடன் பெண் பழகுவது போலவே பெண், ஆணுடன் விகற்பமில்லாமல் பழகுகிறாள். ஆண், தன் இனம் சார்ந்தவனுடன் பழகுவது போவே பெண்ணுடன் நட்போடு பழகுகிறான். நட்பிற்கு உண்மையான நேயம்தான் தேவையே தவிர ஆண், பெண் இன பேதம் தேவை இல்லை என்பதை இக்காலத்து இளைய தலைமுறையினர் நிரூபித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் பொது இடத்தில் ஒரு ஆணுடன், ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தால் அக்காட்சி, காண்போரின் கண்களை உறுத்தும். அவர்கள் இதைப்பற்றி தவறான பிரச்சாரம் செய்வதும் நடைபெறும். இப்போது அப்படி இல்லை. சேர்ந்து படிக்கிறார்கள். சேர்ந்து விவாதிக்கிறார்கள். சேர்ந்து சாதிக்கிறார்கள். ஆண் - பெண் இன பேதம் இவர்களிடைய குறுக்குச் சுவர் எழுப்புவதில்லை. நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும் கொண்ட பாவையர், பாரதியாரின் புதுமைப் பெண்களாக, பூமிக்கு கண்களாக விளங்குகின்றனர். இவர்களது இந்தப் பெருமைக்கும், வெற்றிக்கும் பின்னணியாக ஆண்கள், ஆதரவு தருகின்றனர். ஆக்க பூர்வமான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் பழகுவது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. நட்பிற்குத் தலை வணங்கும் தன்மை வேண்டும். ஆண்-பெண் நட்பு, கயிறு மேல் நடக்கும் ஸர்க்கஸ் வித்தை போன்றது. கொஞ்சம் சறுக்கினாலும் நட்பு எனும் புனிதம் கெட்டுப் போகின்றது. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் பரிதாபத்திற்கு உரியவர்கள். தங்களைப் பற்றியும், தங்கள் நட்பைப் பற்றியும் புரிந்து கொள்ளாத இவர்களது நட்பு, முட்புதருக்குள் சிக்கிக் கொண்ட நிலைதான். எனவே இளைய தலைமுறையினர், தெளிவாக சிந்திக்க வேண்டும். ஒருவரின் நட்பில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளே புதைந்துள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆணுடன் பெண் நட்பு என்பது தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். நல்ல நண்பனிடமிருந்து நல்லனவற்றை அறிந்து கொள்ள நட்பு உதவ வேண்டும். இக்கால இளைஞர்கள், இளம் பெண்கள் நல்லன புரிந்து கொள்ளும் மனப்பான்மையுடன் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். 'வாடா' 'போடா' என்று பெண், ஆணையும், 'வாடி' 'போடி' என்று ஆண், பெண்ணையும் கல்மிஷம் இல்லாமல் அழைத்துக் கொண்டு, பஞ்சு போன்ற லேஸான மனதுடன், பச்சிளம் குழந்தைகள் போல் சிரித்து மகிழ்ந்து கொண்டு, பறவை இனம் போல் பரவசமாய் பழகி, நட்பிற்கு இலக்கணமாய் திகழ்கின்றனர்.
இந்த இன பேதம் இல்லாத இனிய நட்பு, இந்நாளைய இளைஞர்களிடம் உள்ள புத்திக் கூர்மையை வெளிப்படுத்து கின்றது. வெகு சமீபகாலமாக மட்டுமே பரவலாகியுள்ள இந்த இனபேதமற்ற நட்பு முறையை நம் மூத்த தலைமுறையினர் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்துத்தான் இந்த நட்பு வட்டம் பரந்து விரிவடையும். குடும்ப சூழ்நிலைகளும் இந்நட்பை அங்கீகரித்து, அனுமதிக்கக்கூடிய பட்சத்தில் மட்டுமே இவ்வகை நட்பு இளவேனிற் காலம் போல இதமாக இருக்கும். இதற்கு, குடும்பத்தினரின் பரந்த மனப்பான்மை ஒருங்கிணைந்து, ஒத்துழைப்பு தர வேண்டும்.
அவர்களது சம்மதம் இல்லாமல் இவ்விதம் பழகுவது, அது தூய்மையான நட்பே என்றாலும், தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டுப் பெரியவர்கள் புரிந்து கொண்ட பின்னர் அவர்களே இந்த நட்பிற்கு இன்முகம் காட்டி இருகரம் நீட்டி வரவேற்பு கொடுப்பார்கள். அது வரை காத்திருந்தால், நல்ல விதமாய் மாறி வரும் இந்த நட்பு நேயம், நாளுக்கு நாள் மேன்மை அடையும். நட்பிற்கு எப்படி ஆண், பெண் இன வேறுபாடு இல்லையோ அது போல வயதும் ஒரு வரம்பு இல்லை. நட்பிற்கு வயது தேவை இல்லை. நல்ல மனது இருந்தால் போதும். தலைமுறை இடைவெளி இல்லாதது நட்பு. பெரியோர், சிறியோர், அனைவருக்கும் பொதுவானது. மனித இனத்திற்கே பொதுவானது.
புராண காலத்தில் கூட கர்ணனும், துரியோதனனும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்திருந்தனர். விளையாடும் பொழுது கர்ணன், நண்பனின் மனைவியை வித்தியாசம் பாராமல் தொட்டிழுக்க, அவளது மேலாடையில் இருந்து உதிர்ந்த முத்துக்களை, துரியோதனன் 'எடுக்கவோ... கோர்க்கவோ' என்றானே? எதனால்? நட்பிற்கு அவன் கொடுத்த மரியாதையல்லவா?! நட்பிற்கு மரியாதை மட்டுமல்ல... நண்பன் மீது கொண்ட நம்பிக்கையும்தான் அவனை அவ்விதம் வெளிப்படையாக கேட்க வைத்தது. நட்பு, காலத்தை வென்றது, காலத்தினால் அழியாதது.