அம்மா... நீ...சுமந்த பிள்ளை... - Page 3
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 7494
புது மருமகள், தன் மாமியாரை புரிந்து கொண்டு செயல்பட்டால் குடும்பத்தில் குழப்பம் நேரிடாது. திருமணமான புதிதில் கொஞ்ச நாளைக்கு 'உங்க மகன்' 'உங்க மகன்' என்றே குறிப்பிட்டு பேச வேண்டும்.
'உங்க மகனுக்கு நீங்க சமைச்சாத்தான் பிடிக்குது அத்தை...' 'உங்க மகனுக்கு உங்க கையால போட்ட காபிதான் வேணுமாம் அத்தை' 'எப்பப் பார்த்தாலும் உங்க புகழ்தான் பாடுகிறார் அத்தை' எதுக்கெடுத்தாலும் 'எங்க அம்மா' 'எங்க அம்மா' என்றுதான் அத்தை பேசறார். இவ்விதமெல்லாம் பேசினால் அம்மாவிற்கு, தேவை இல்லாத பயம் நீங்கும். 'மருமகள், தன் மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்தவள் அல்ல.. இவளும் அவனுக்கு இன்னொரு தாய்' எனும் நம்பிக்கை, அந்தத் தாயின் உள்ளத்தில் உதயமாகும். மெள்ள மெள்ள அந்த நம்பிக்கை அதிகரிக்கும். அதன்பின், தன் மனத்தில் இறுகப் பற்றி கொண்டிருந்த மகனைத் தன் மருமகளிடம் முழு மனதுடன் ஒப்படைக்கும் மனநிலை உருவாகும். அதன்பின் அம்மாவின் உள்ளம் தெளிவு அடையும். அதனால் மாமியார்-மருமகள் உறவில் விரிசல் ஏற்படாமல் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மலரும். தொடர்ந்து வளரும்.
கோபத்தால், சுடு சொற்களை வீசும் பிள்ளை மீது கூட வசை பாடாமல் மௌனமாய் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்பவள் தாய். 'பேசினது என் பிள்ளைதானே' 'என்மீது உரிமை இருப்பதால்தானே பேசுகிறான்' என்று தாங்கிக் கொள்வாள். சகிப்புத்தன்மையின் சிகரத்தைத் தொடுபவள் தாய்.
தாய்ப்பாசம் எனும் நீருற்றி, பிள்ளையை வேரூன்றி வளர்த்து விடுபவள் தாய். விழுதுகள் விட்ட ஆலமரம் போல குடும்பம் தழைத்த பின்னால், அந்த ஆலமரத்திற்கு அன்பு எனும் உரம் போட்டு வளர்த்த அந்த தாயின் தியாகச் செயல்பாடுகளை நினைத்துப் பார்த்து நன்றியுடன் நமஸ்கரிக்க வேண்டும்.
சில பிள்ளைகள் தன் அம்மாவை விட உயர் கல்வி கற்றபின் 'உங்களுக்கு என்னம்மா தெரியும்?' 'உங்களுக்கு, ஒண்ணுமே தெரியாதும்மா' என்று பேசுவார்கள். பிள்ளையை விட அறிவில் சிறந்த தாயாக இருந்தாலும் கூட பிள்ளை சொல்லும் அந்த 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாதும்மா' என்ற வார்த்தைக்கு எதிர்வாதம் செய்யாமல் மௌனமாய் புன்னகை பூப்பாள் தாய்.
பிள்ளைகளுக்கு அறிவும், திறமையும் தாயின் மரபணுவில் இருந்தும், தகப்பனின் மரபணுவில் இருந்தும்தானே வருகிறது?! இது புரியாமல் பேசும் பிள்ளைகள், மேற்படி பேசுவது நகைப்புக்குரியது.
'அப்பா' என்று அம்மா யாரைக் காட்டுகிறாளோ அவரைத்தான் நாம் அப்பா என்கிறோம். அம்மா சொல்லாமல் நம் அப்பாவை நாம் அறிய முடியுமா? அம்மாவின் சொல்லில்தானே அந்த அசைக்க முடியாத நம்பிக்கை!
பேறு காலத்தின் போது ஏற்படும் பெரும் வலியைக் கூட ஒரு பெரும்பேறாகக் கருதுபவள் பெண்.
அம்மாவிற்கு மகளாகப் பிறந்து வளர்வதைவிட, கணவனுக்கு மனைவியாய் வாழ்வதைவிட ஒரு பிள்ளைக்குத் தாய் ஆகும் நிலையைத்தான் ஒரு பெண் பாக்யமாகக் கருதுகிறாள். தன் பெண்மை முழுமை அடைந்ததாக எண்ணி பூரிக்கின்றாள்.
'அம்மா' எனும் வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது வாழ்க்கையின் வேதம். புனிதம்.
தன் குடும்பச் சோலையில் பூக்கும் புஷ்பங்களாய் தன் பிள்ளைகளை மென்மையாக பாதுகாப்பவள் தாய்.
கையேந்தும் பிச்சைக்காரர்கள் கூட அம்மா, தாயே என்றுதான் பிச்சை எடுக்கிறார்கள். ஐயா, அப்பா என்று பிச்சை எடுப்பதில்லை. தாய்மையின் இளகிய மனம்தான் இதற்குக் காரணம்.
'எங்க அம்மா வைக்கற மாதிரியே காரக்குழம்பு வச்சிருக்கியே... 'எங்க அம்மா வைக்கற சாம்பார் எவ்ளவு டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா?! ... 'எங்க அம்மா ஊத்தற முறுகல் தோசை மாதிரி யாராலயும் ஊத்த முடியாது...' 'எங்கம்மா எனக்காக அது செஞ்சாங்க'... 'எங்கம்மா என்னை வளர்க்கறதுக்கு எவ்ளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா?' இவையெல்லாம் ஒரு ஆண், தன் மனைவியிடம் மிக சகஜமாக, அடிக்கடி பேசும் உரையாடல்கள்.
ஒரு தாயின் அன்பு, குழந்தை வளர்ப்பில் ஈடுபாடு, ஆழ்ந்த அக்கறை, பாசம், முழுமையான கவனிப்பு மகனின் மனதில் ஊடுருவிப் பாய்ந்துள்ளது. ஆகவேதான் மனைவியிடம் தாயின் பிரதாபங்களை மகன், அடிக்கடி வெளிப்படுத்துகிறான்.
ஆனால் அவனது மனைவிக்கு இந்தப் புகழுரைகள், மனதில் புழுக்கத்தைக் கொடுக்கும். பெரும்பாலான பெண்கள் இவ்விதம்தான் மனம் புழுங்குகிறார்கள்.
'எங்கம்மா கூடதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க'... 'இவரோட அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டாங்களா...' இவ்விதம் அவள் யோசிப்பாள். யாருடைய தாய் என்றாலும் தாய் தாய்தான். கப்பலின் நங்கூரம் கடற்கரை மணலில் பதிவது போல பிள்ளையின் மனதில் தாய்ப்பாசம் பதிந்து விடுகிறது.
இருபத்தி நான்கு வயது வரை தன் தாயை தலை துவட்டி விடச் சொல்லி தினமும் தலை துவட்டும் துண்டை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் வருவான் மகன். திருமணமான பிறகும் இந்தப் பழக்கத்தை அவன் மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் அவனுடைய புது மனைவி, இதைக் கண்டு மனதிற்குள் புகைவாள்.
தலை துவட்டலால், பிரச்னை தலை தூக்கும். வளரும். தம்பதிகளின் சந்தோஷத்தைத் தாக்கும். 'புரிந்து கொள்ளுதல்' என்ற உணர்வு இல்லாமைதான் பிரச்னை தோன்றுவதற்கு காரணம். திருமணமானால் என்ன? அம்மா எப்போதும் அம்மாதானே? அதே புது மனைவி என்ற பெண்... நாளை ஒரு தாயானபின்? அப்பொழுது உணர்வாள் தன் மாமியாரும் ஒரு தாய்தானே என்று.
அம்மா என்பவள் உறவுகளைக் கோர்க்கும் சங்கிலி போன்றவள். தான் பெற்ற பிள்ளைகள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அவர்களை சமரசம் செய்து வைக்க மிகுந்த பாடு படுவாள். கெஞ்சுவாள். பேத்தியோ, பேரனோ உள்ள பாட்டி எனில் பேத்திக்காக/ பேரனுக்காக சிபாரிசு செய்து தன் மகனிடம் பேசுவாள். பாட்டி என்ற நிலையிலும் மகனிடம் பேசும் உரிமை அந்த தாய்க்கு சற்று அதிகம் உண்டு. 'உன் தங்கை நல்லா இருக்கணும்ன்னா நீ விட்டுக் கொடுத்து போ... உன் தங்கைதானே... தம்பிதானே... அண்ணன் தானே... என்று உடன் பிறந்த உறவுகளுக்குள் சமாதானமாகப் பேசுவாள் தாய்.
'நான் உயிரோடு இருக்கும்வரை நீங்கள் யாரும் மனஸ்தாபம் கொள்ளக் கூடாது; பிரிந்து விடக்கூடாது' என்று அன்புக் கட்டளையிட்டு குடும்பத்தின் உறவுகள் சுமுகமாய் இருப்பதற்கு ஒரு பாலமாய் இருப்பவள் தாய்.
'எங்கம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்' என்று பிள்ளைகள் நூற்றுக்கு நூறு நம்பும் அளவிற்கு தாயின் செயல்பாடுகள் அவர்களது மனதில் நம்பிக்கை விதையை விதைத்திருக்கும்.