அம்மா... நீ...சுமந்த பிள்ளை... - Page 4
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 7494
மற்ற உறவுகளின் பாசத்தைவிட தாய்ப்பாசம்தான் மிக உயர்ந்தது. உடல் ஊனமுற்ற குழந்தை என்றாலும், மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்றாலும் வெறுத்து ஒதுக்காமல் பாடுபட்டு வளர்ப்பாள் தாய். தன் வாழ்வையே அந்த ஊனமுற்ற குழந்தைக்காக அர்ப்பணிப்பாள். தன் சகல சுகங்களையும் தியாகம் செய்து குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அலையாய் அலைவாள். ஒரு தாயின் மனதிற்கு மட்டுமே அத்தகைய பாசமும், பலமும் உண்டு.
ஊனமான குழந்தை பிறந்து விட்டதே என்று வேதனைப்பட்டாலும் 'எப்படியானாலும் இவன் என் மகன்... இவள் என் மகள்' என்று தியாகம் மிகுந்த பாசம் கொண்டவள் தாய். 'என் குழந்தைக்கு நான்தான் பாதுகாப்பு... என் பிள்ளைக்கு எல்லாம் நானே...' என்று ஒரு அபரிதமான அன்பு கொண்டு ஊனமுற்ற குழந்தைக்கு சேவை செய்துவரும் தாய்மார்கள், அற்புதமான அன்னையர்! தன்னிச்சையாக செயல்பட முடியாத அந்தக் குழந்தைக்கு முப்பது வயதானாலும் சரி நாற்பது வயது ஆனாலும் சரி மலம், சிறுநீர் அள்ளிப்போட்டு முகம் சுளிக்காமல் சேவை செய்யும் தாய்கள் தேவதைகள். அடி வயிறு நொந்து பெற்ற பாசம்தான் என்னமாய் அவர்களை தியாகம் செய்ய வைக்கிறது?! தாய்மை எனும் புனிதமான உணர்வுக்குள் சிறைப்படுத்துகிறது.
'என் பிள்ளை... என் ரத்தம்... என்னில் தோன்றியவன்/ தோன்றியவள்...' என்ற எண்ணம் தாயின் மனதில் வியாபித் துள்ளது.
கணவனை இழந்த பெண்ணும், கணவனை பிரிந்த பெண்ணும் ஒரு தாயாக இருக்கக் கூடிய பட்சத்தில் அவளைச் சுற்றியுள்ள துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு 'நான் என் பிள்ளைக்காக வாழ்வேன். கஷ்டப்பட்டாலும் என் பிள்ளையை வளர்ப்பேன்' என்கிற வைராக்கியத்தை தன்னுள் உருவாக்கிக் கொண்டு பிள்ளைக்காக மட்டுமே உயிர் வாழ்கிறாள்.
கணவன், கெட்டவனாக இருந்தாலும் அவனால் பெற்றுக் கொண்ட பிள்ளை மீது பாசம் வைத்து வளர்ப்பவள் தாய். அயோக்கிய குணம் கொண்ட கணவன், மனைவியை கைவிடுவது என்பது தற்போது சகஜமாக நிகழும் ஒரு விஷயம். அப்படிப்பட்ட அயோக்கியனுக்குப் பிறந்த தன் பிள்ளையை ஒழுக்க சீலனாக வளர்க்கப் பாடுபடுபவள் தாய். 'கணவன் மோசமானவன்... எனவே அவன் மூலம் பிறந்த பிள்ளையும் எனக்கு தேவை இல்லை' என்று பிள்ளையை விட்டுவிட்டு தாய் விலகுவாள் எனில், அந்த பிள்ளைகள், சமூக விரோதிகளாக உருமாறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
'இவனது அப்பாவைப் போலல்லாமல் இவனை நல்லவனாக வளர்த்து ஆளாக்குவேன்' என்று சபதம் எடுத்த தாய்மார்கள் வளர்த்த பிள்ளைகள், சமூகத்தில் உயர்ந்த மனிதன் எனும் பெயரை எடுப்பதற்குக் காரணம், தாயின் அகலாத அன்பும், அவளது அயராத உழைப்பும்தான்.
சரித்திரத்தில் இடம் பெற்ற பலரும், தங்கள் தாயையும், தாய்மையையும் போற்றி வணங்கியவர்கள். தாயின் ஆசிகள் பெற்று செய்யும் எல்லா செயல்களும் வெற்றியை அளிக்கும்.
புராண காலத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் துறவறம் மேற்கொள்வதற்தென்று முடிவு செய்திருந்த நிலையில் அவரது தாயார், 'மகனை பிரிய நேரிடுமே' என்று அதற்கு சம்மதிக்க வில்லை. தாயின் முழுமையான சம்மதம் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்த ஆதிசங்கரர், ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்பொழுது முதலையின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அவரது தாய் அழுதார். கதறினார். அப்போது மகன் ஆதிசங்கரர் ஒரு நிபந்தனை விதித்தார்.
தான் துறவறம் மேற்கொள்ள அம்மா சம்மதித்தால் முதலையின் பிடியில் இருந்து தப்பி வருவதாகக் கூறினார். இதைக் கேட்ட தாய், 'தன் மகன் துறவறம் மேற்கொண்டாலும் பரவாயில்லை... உயிரோடு இருந்தால் போதும்' என்ற தியாக உணர்வோடு ஆதிசங்கரர் துறவறம் கொள்வதற்கு சம்மதம் அளித்தார். மகனைப் பிரிந்தாலும் பரவாயில்லை, அவன் உயிரோடு வாழ்ந்தால் போதும் என்று நினைக்க வைத்தது தாய்மை. தாய்மைக்கு உள்ள உயர்ந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்று ஆதிசங்கரரை பெற்றெடுத்த தாயின் தூய்மையான தாய்மை.
மராட்டிய வீரர் சிவாஜி, தன் தாயைப் போற்றி வணங்கியவர். மதித்தவர்.
நம் தமிழ் திரைப்படத்தின் முன்னணி கதாநாயகராகத் திகழ்ந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் தாய் அன்னை சத்யா அவர்களை தெய்வமாக மதித்தவர். அன்னையின் ஆசிகள் இருந்தால் அகில உலகையும் தங்கள் திறமையால் வசப்படுத்தலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்!
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று தாய்மை பற்றி கவிஞர் பாடினார்.
கட்டிலில் இணைந்து, தொப்புள் கொடியில் பிணைந்து, பூமியில் பிறந்து, தொட்டிலில் வளர்ந்து உருவாகும் ஒரு மகன் அல்லது மகளின் படிப்படியான வளர்ச்சியில் பெரும்பான்மையான பங்கு வகிப்பவள் தாய்.
தெய்வங்களிடம் சரண் அடையும் பொழுது நம் மனது எந்த அளவிற்கு இறகுபோல் லேஸாகிறதோ... அதுபோல தாயிடம் நம் கஷ்டங்களைக் கூறும்பொழுது, நஞ்சு போன்ற துன்பம் கூட பஞ்சுபோல பறக்கும். இதைத்தான் கவிஞர், 'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதியில்லை... தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வம் இல்லை' என்று பாடினார். தாய்மையை மிக ஆழமாகவும், அழகாகவும் வார்த்தைகளில் வடித்துள்ளார்!
அம்மாவைப் பற்றிய பாடல்கள் அத்தனையும் ஆத்மார்த்த மானவை.
விலை கொடுத்து வாங்க முடியாதது தாய்மை. விலை மதிப்பிட முடியாததும் தாய்மை. தாய்மை ஒரு தவம். தாய்மையின் அன்பை அனுபவிப்பது ஒரு வரம்.
நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், தாய்க்கே தீங்குகள் புரிந்தாலும், அவற்றை மன்னித்து, மறந்து நமக்கு மேன்மேலும் நன்மைகளை செய்பவள் தாய்.
அன்பில் விளைந்த அமுதம் தாய். நம்மில் மலர்ந்த தெய்வம் தாய். உயிரில் கலந்த உறவு தாய். நெஞ்சில் சுடர்விடும் தீபம் தாய். நாம் அடி எடுத்து வைக்கும் பாதைகளெல்லாம் நம்மோடு தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்துபவள் தாய். நம் வாழ்வெனும் சோலையில், வீசும் தென்றல் தாய். ஆறுதல் அளித்திடும் அருள்மொழி மொழிபவள் தாய். கலங்கிடும் வேளையில் நம்மை காப்பவள் தாய். தாய் இல்லாத வாழ்வு வெறுமையாகும். தாயின் அன்பில்தான் வாழ்வு முழுமை அடையும். அம்மா தன் வயிற்றில் சுமந்த பிள்ளையான நாம் அனைவரும், நம் அம்மாவை இதயத்தில் சுமந்து ஆராதிக்க வேண்டும்.