
அக்கம் பக்கம் பழகுவோரிடமும், நமக்கு அறிமுகமே இல்லாத பெண்மணிகளை பொது இடங்களில் சந்திக்கும் பொழுதும் அவர்களை 'அம்மா' என்று சகஜமாக அழைக்கிறோம். 'அப்பா' என்று எல்லோரையும் அழைக்க முடியாது. தான் பெற்ற பிள்ளையாக இல்லாவிட்டாலும் கூட, வேறு யார் 'அம்மா' என்று அழைத்தாலும் அந்த அழைப்பில் மகிழ்ச்சி அடைவது தாய்மை. தான் பெறாத பிள்ளைகளின் மீது தான் பெற்ற பிள்ளைபோல அன்பு செலுத்தும் மகத்தான மனம் தாய்க்கு உண்டு.
பிற்காலத்தில் பிள்ளைகள் தன்னை உட்கார வைத்து சோறு போடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் பிள்ளைகளை தாய் வளர்ப்பதில்லை. 'என் உயிர் உள்ள வரை என் பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்வேன், என் கடமைகளை செய்வேன்' என்கிற உணர்வில்தான் வளர்க்கிறாள். அந்த உணர்வு உன்னதமானது. தாய்மை நிரம்பி ததும்பும் அபூர்வமான உணர்வு!
அம்மா என்பது உலகப் பொதுவான வார்த்தை. மா, மாம், மம் என்று அம்மா தொடர்பான வார்த்தைகளாலேயே அம்மாவை அழைக்கின்றார்கள் உலகம் முழுதும்.
காணாமல் போன பிள்ளை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்து விட்டான் என்ற செய்தி வந்து அடையாளம் காட்டச் சொல்லி காவல்துறையினர் அழைப்பார்கள். பல வருடங்களுக்குப் பிறகும் கூட குழந்தையாய் இருந்தபோது தொலைந்து போன மகனை மிகச் சரியாக அடையாளம் காட்டும் சக்தி தாய்க்கு மட்டுமே உண்டு. காணாமல் போன பிள்ளை கிடைக்கும் வரை பிள்ளையையே நினைத்து நினைத்து உள்ளம் உருகும் தாய்க்கு, குழந்தையின் முகம் மறக்குமா?
உத்யோகம் நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் பிள்ளையைப் பிரிந்திருக்கும் தாய், பிள்ளையை நினைத்து உருகுவாள். மருகுவாள். பிள்ளைக்கு அது பிடிக்குமே, இது பிடிக்குமே... என்று நினைத்து ஏங்குவாள். தான் சாப்பிடும் பொழுது மகன்/மகள் சாப்பிட்டானோ, இல்லையோ என்று கலங்குவாள். பிள்ளையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவும், அதிகப் பொருள் ஈட்டவும் அவன் பிரிந்து வெகுதூர சென்றிருக்கும் பிரிவுத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் தியாகச்சுடர் தாய். அவள் நினைத்தால் 'நீ இங்கே இரு. நீ சம்பாதிக்கும் தொகை போதும். என் கூடவே இரு' என்று சொல்லலாம். வற்புறுத்தலாம். ஆனால் பிள்ளையின் எதிர்காலம் செல்வ வளமாக இருக்கும் பொருட்டு அவனது பிரிவைத் தாங்கிக் கொள்ளும் தியாகத்தை செய்பவள் தாய்.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்' என்றுதான் வள்ளுவர் எழுதி இருக்கிறாரே தவிர தகப்பன் என்று எழுதவில்லை. தகப்பனுக்கும் தன் மகன் சான்றோன் என புகழப்படும் பொழுது சந்தோஷம்தான். என்றாலும் தாயின் பங்கு இவ்விஷயத்தில் மிக அதிகம். ஒரு ஆண், யாருக்காவது மிக உண்மையாக, உன்னதமான சேவை செய்தால், அந்த ஆணைக் கூட 'தாயுமானவன்' என்றுதான் குறிப்பிட்டு பாராட்டுகிறார்கள். தாய், 'தங்கத்தாய்' 'தெய்வத்தாய்' என்று போற்றப்படுகின்றாள். ஒரு பெண், தாயாகும் பொழுது அவளது மனம் மாறுகிறது. கடுமையான குணம் உள்ள பெண்ணும் தாயான பின் இனிமையான குணம் உள்ளவளாய் மாறுகின்றாள். பெரும்பாலும் 'அப்பா' தான் பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிப்பார் என்பார்கள். அம்மா... மிகவும் அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து அறிவுரை கூறுவாள். கெஞ்சுவாள்... கதறுவாள். பிள்ளைகளைத் திருத்துவதற்கு தன் அன்பு எனும் அஸ்திரத்தை அயராமல் பயன்படுத்துவாள். 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். கல்லைக் கனியாக மாற்றும் கனிவான பாசம் கொண்டவள் தாய். தாய்மையின் சிறப்பைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் போதாது. குளிர்காலத்தில் சிறு நெருப்பில் ஒரு மிதமான வெப்பத்தில் நமக்கு ஒரு இதமான சுகம் கிடைக்கும். அது போல தாயின் ஸ்பரிஸத்தில், தாயின் அன்பில் அந்த இதமான சுகம் கிடைக்கின்றது. அளவிடமுடியாத ஆறுதல் கிடைக்கின்றது.
உண்மையிலேயே பிள்ளைகள் தவறு செய்திருந்தாலும் 'என் பிள்ளை தப்பு பண்ணி இருக்க மாட்டாள்/மாட்டான்' என்று திடமாக நம்புவது தாய் மனம்.
ராஜ்ஜியத்தை ஆளும் மகாராஜா, நாட்டை ஆளும் மந்திரி... யாராக இருந்தாலும் சரி, அவர்களை பெற்றெடுத்து, பேணி வளர்த்தது தாய்தான். தாய் இல்லாமல் யாரும் இல்லை.
தன் மகன் முரடனாகவோ, போக்கிரியாகவோ இருந்தால் கூட அவன் 'பசிக்குதும்மா' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், உடனே அவன் பசியாற உணவை எடுத்துப் போடுவாள் தாய். அவன் ருசித்து, சாப்பிடும் பொழுது, நயமாக அவனுக்கு புத்திமதிகள் கூறி அவனைத் திருத்த முயற்சிப்பவளும் தாய்தான்.
தாயை மதிப்பவன் தரணியில் தலை நிமிர்ந்து வாழ முடியும். தாய்க்குத் தலை வணங்கினால் நிலை பெற்ற நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
மகனுக்கு திருமணம் ஆனபின், அன்றுவரை, தான் வளர்த்த அன்பு மகனை மருமகள் என்ற இன்னொரு பெண்ணிடம் தாரை வார்த்துக் கொடுப்பவள் தாய். மனைவி என்ற ஸ்தானத்தில் மகனுக்கென்று ஒரு துணைவி வந்தபின் அந்த நிலைமாற்றத்தைத் தாங்கிக் கொள்வதற்கு மனதளவில் மிகுந்த பாடுபடுபவள் தாய். தனக்கு மருமகள் என்ற ஸ்தானத்தில் மகனது மனைவியாய் தன் மகனின் வாழ்வில் பங்கெடுப்பவள்தான் அந்தப் பெண் என்ற போதும் அன்று வரை மகனுக்கு அனைத்துமாக இருந்த அந்தத் தாயின் மனதில் ஒரு பய உணர்வு தோன்றும். ஒரு திகில் உணர்வு அவளைத் தாக்கும். அத்தகைய உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் தாய் உள்ளம் தவியாய் தவிக்கும்.
தன் மகனைத் 'தன்னிடமிருந்து மருமகள் பிரித்து விடுவாளோ' என்ற அச்சத்தில் அவளது தாய்மை பரிதவிக்கும். மாமியாருக்கும், மருமகளுக்கும் 'புரிந்து கொள்ளுதல்' எனும் நேயம் மலரும் வரை, தாயின் இதயத்தை ஒரு துயர வண்டு துளைத்துக் கொண்டிருக்கும்.
இது நாள் வரை தான் பரிமாறி சாப்பிட்ட மகன், தான் எடுத்துக் கொடுத்த உடைகளைப் போட்ட மகன், தலைவலி என்றால், தன் கையால் தைலம் தேய்த்துக்கொண்ட மகன்... இன்று மனைவி எனும் இன்னொரு பெண்ணின் சேவையில் அவனது வாழ்வு மாறி விட்டதே என்ற ஏக்கத்தில் தவிப்பது அவளது தாய்மை உணர்வு. தாய்மை உணர்வின் வெளிப்பாடுகளை மருமகள் புரிந்துக் கொள்ளாத படியால் 'கொடுமை படுத்தும் மாமியார்' எனும் பழிச்சொல்லை ஒரு தாய் ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. அவளது ஆழமான அன்பே, அவளுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகின்றது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook