அம்மா... நீ...சுமந்த பிள்ளை...
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 7494
அம்மா என்றால் அன்பு. அம்மா என்றால் தெய்வம். அம்மா என்றால் பாசம். அம்மா என்றால் தியாகம். அம்மா எனும் வார்த்தைக்கு இந்த உலகமே மயங்கும். உலகமே மயங்கும் தாய்மையின் உலகம்? மிகவும் சின்ன உலகம். தாயின் இதயத்தில் அவளது பிள்ளைகளும், அவர்களின் நலன் மட்டுமே அடங்கியுள்ள சின்னஞ்சிறு உலகம். ஆனால் அதற்குள் தோணும் அன்பு வெள்ளமோ... வானத்தைப் போன்று பரந்து விரிந்தது. அம்மாவின் அன்பு, ஆர்ப்பரிக்கும் கடலைப்போல அல்லாமல், அமைதியான நதியைப் போன்றது.
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, ஒரு தாயும் உருவாகிறாள். அவளுக்குள் தாய்மையும் பிறக்கிறது. குழந்தையாய் பிறந்து, சிறுமியாய் வளர்ந்து, பருவப் பெண்ணாக மலர்ந்து, ஒருவனுக்கு மனைவியாய் அமைந்து, அதன்பின் தாயாகும் பொழுதுதான் பெண்மை முழுமை அடைகிறது.
கர்ப்பத்தில் குழந்தை உருவான நாள் முதல் மசக்கை, வாந்தி, தலைசுற்றல் என்று அவள்படும் உடல்ரீதியான உபாதைகள்தான் எத்தனை... எத்தனை?
தாய்மை அடைந்துவிட்ட பெருமையையும், பெருமிதத்தையும் அனுபவிக்கிறாள் பெண். திருமணமானபின் நெஞ்சில் கணவனை சுமந்து வாழ்வதை விட, கர்ப்பம் ஆனபின் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பேரின்பமாக பெண் உணர்கிறாள்.
'எனக்கு இது பிடிக்கும்,' 'எனக்கு இது வேணும்' என்று அவளுக்காக ஆசைப்படும் பெண், பிள்ளை பெற்ற பிறகு, 'என் பிள்ளைக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது' என்ற ஒரே சிந்தனையில் வாழ்கிறாள்.
'தான்', 'தனது' என்ற தன்னலமே தாய்மைக்குக் கிடையாது. 'என் மகள், என் மகன்' என்ற எண்ணம்தான் எப்போதும் அவளது உள்ளத்தில் உலவிக் கொண்டிருக்கும்.
பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை என்றால் துடித்துப் போகும் அன்பு கொண்டவள் தாய். மருந்து கொடுக்கும் பொழுது அந்த மருந்தை, தான் ருசித்த பிறகே குழந்தைக்குக் கொடுப்பாள். கசப்பு மருந்து என்றால் மேலும் அதிக தேனைக் கலந்து கொடுப்பாள்.
காய்ச்சல் கண்ட பிள்ளையின் அருகிலேயே இருந்து விடிய விடிய நெற்றியில் ஈரத்துணி போட்டுக் கொண்டிருப்பாள். காய்ச்சல் குறைந்துள்ளதா என்று நெற்றியையும், கால்களையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து தூக்கத்தைத் தொலைத்து கண் விழிப்பாள். பிள்ளை உடல் தேறி குணமாகும் வரை, அவள் உணவு உண்பதில் விருப்பம் இன்றி பட்டினி கிடப்பாள். தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டு விரதம் இருப்பாள்.
பிள்ளைகளுக்கு நோய் வந்து விட்டால் 'அந்த நோய் தனக்கு வந்திருக்கக் கூடாதா... என் பிள்ளை இத்தனை கஷ்டப்படுகிறதே' என்று வேதனைப்படுவாள்.
'என் உயிரை எடுத்துக் கொள் தெய்வமே, என் பிள்ளையின் உயிரைக் கொடுத்துவிடு' என்று ஆண்டவனிடம் மன்றாடுவாள் தாய். பிள்ளையின் வாந்தியை சிறிதும் அருவறுப்பின்றி கையில் ஏந்திப் பிடிப்பவள் தாய். மல ஜலத்தை சுத்தம் செய்பவள் தாய். உடல் நிலை சரியாகும் வரை உடன் இருந்து, பிள்ளையை விட்டு அகலாமல் அருகிலிருந்து சேவை செய்பவள் தாய்.
'பத்து மாத பந்தம்' என்று தாய்மை பற்றி கூறுவார்கள். பத்து மாத பந்தம் என்பது உடல்கூறு சம்பந்தப்பட்டது. குழந்தையை வயிற்றில் சுமப்பது பத்து மாதங்கள். ஆனால் தன் குழந்தைக்கு அறுபது வயதானாலும் அந்த பந்தத்தை விட்டுவிடாமல் தொடர்பவள் தாய்.
தனக்கென்று எதையுமே யோசிக்காத தாயின் மனது, தன் பிள்ளைகளுக்கென்று எல்லாவற்றையும் யோசிக்கும். 'என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், அந்தப் படிப்பினால் வாழ்க்கையில் உயர வேண்டும்' என்ற சிந்தனை உடையவள் தாய்.
'படி' 'படி' என்று சொல்வது பிள்ளைக்கு பிடிக்காவிட்டாலும் அவர்களது நலன் கருதி, எதிர்கால வளம் கருதி படிப்பைப் பற்றி நயமாகவும், அன்பாகவும் வலியுறுத்துபவள் தாய். 'தன் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும்' என்ற தியாக மனப்பான்மையினால் அவ்விதம் செய்கிறாள்.
பிள்ளை படிக்கும்பொழுது அவளும் சேர்ந்து, கண் விழித்து, தேனீர் போட்டுக் கொடுப்பது, உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாள். கணவனை தன் நெஞ்சில் சுமக்கும் மனைவி, தாய் என்ற ஸ்தானத்திற்கு வந்த பிறகு தன் பிள்ளையைத்தான் நெஞ்சில் சுமக்கிறாள். பிள்ளைகளுக்குப் பிறகுதான் கணவன் என்ற நிலைமை உருவாகி விடுவதற்குக் காரணம் தாய்மை.
பெண்மை, தாய்மையாகும் பொழுது தாய்மை, தெய்வீகமாகி விடுகின்றது. தாயை தெய்வமாக மதிக்கும் பிள்ளைகள் உருவாகுவதற்குக் காரணம் தாயின் பாசம்... நேசம்... தியாகம்... சேவை ஆகியவை.
பிள்ளைகளின் மனதில் நெருக்கமாய் பதிபவள் தாய்தான். தாய்க்குப்பின்தான் தகப்பன். தோளில் சுமக்கும் தகப்பனைவிட நெஞ்சில் சுமக்கும் தாயின் அன்பைத்தான் பெரிதாக மதிக்கின்றார்கள் பிள்ளைகள்.
தாயின் கையினால் ஊட்டி வளர்க்கப்படும் பொழுது, அந்த ஸ்பரிஸ உணர்வினால் குழந்தையின் ரத்தத்தில் பாசம் கலக்கிறது.
ரத்தத்தை பாலாக்கிக் கொடுத்து வளர்க்கும் தாய், பாலுடன் சேர்த்து அன்பு, பாசம் இவற்றையும் சேர்த்து ஊட்டி வளர்க்கின்றாள். படிப்படியாக குழந்தையை வளர்க்கும் பொழுது, தன் உடல் தேய்வதையும் பொருட்படுத்தாமல் பிள்ளையின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்.
ஏழ்மை நிறைந்த சூழ்நிலையில், இருக்கும் சிறிதளவு உணவையும் பிள்ளைக்காக எடுத்து வைத்து, அவன் வந்ததும் அவனது பசி தீர்க்க முற்படுவாள். பாத்திரத்தின் சப்தம் கேட்டால் உணவு கொஞ்சமாக இருப்பதை புரிந்துகொண்டு விடுவானே என்று கரண்டியை ஓசைப்படாமல் போட்டு பரிமாறுவாள். பிள்ளை, வயிறு நிறைய உண்பதைப் பார்ப்பதிலேயே அவளது வயிறு நிறையும்.
மனவேதனையிலும், பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்ட ஒரு துக்கமான சூழ்நிலையில், அம்மாவின் முகத்தைப் பார்த்தாலே துன்பம் தூள் தூளாகும். அவளது மடியில் நம் முகம் புதைத்தாலோ... அலாதியான ஒரு அமைதி கிடைக்கும். 'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை, தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வம் இல்லை' என்று அனுபவித்து பாடி இருக்கிறார் கவிஞர்.
வீடு, சொத்துக்கள் இவற்றை விட ஒரு தாயின் பிரார்த்தனை தான் மிக்க மதிப்பு வாய்ந்த சொத்தாகும். பிள்ளைகளுக்காக கடவுளிடம் தாய் வேண்டிக் கொள்ளும்பொழுது அந்த பிரார்த்தனையின் வலிமை மிக அதிகம்.