இன் திஸ் வேர்ல்ட் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4147
படத்தின் இயக்குநர் 'Michael Winterbottom' என்ற பெயர் போட்டவுடன், என்னை மறந்து நான் கைகளைத் தட்டினேன். உண்மையான உழைப்பிற்கு நாம் கொடுக்கும் பரிசு அதுவாகத்தான் இருக்க முடியும்!
படத்தில் இடம் பெறும் பல காட்சிகளைப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நடைபெறும் சம்பவமா அல்லது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளா என்ற சந்தேகம் நமக்கு உண்டாகும். இரண்டுமேதான். பல காட்சிகள் படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்குத் தெரியாமலே, ஒரு சிறிய டிஜிட்டல் கேமராவின் உதவியால் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஜமால் உண்மையிலேயே ஒரு ஆஃப்கான் அகதியே. அவனையும், இனாயத்தையும் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் ஈரானியர் உண்மையிலேயே ஈரானிய போலீஸ்காரரே. இனாயத்தாக நடித்த இளைஞர் சந்தையில் வர்த்தகம் செய்பவர். அவர் அழகாக இருந்ததால், இந்த நடிக்கும் வாய்ப்பு. பல இடங்களில் பொய் சொல்லித்தான் படப்பிடிப்பையே அனுமதி வாங்கி நடத்தியிருக்கிறார்கள்.
இதில் சந்தோஷமும், ஆச்சரியமும் பட வேண்டிய விஷயம் -- பதினெட்டு வயது வரைதான் லண்டனில் இருக்க முடியும் என்று அனுமதிக்கப்பட்ட ஜமால், தென் கிழக்கு லண்டனில் இப்போதும் ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். படத்தில் 'நடித்ததற்காக' கிடைத்த பணத்தில் இனாயத் ஒரு லாரியை விலைக்கு வாங்கி, காபுலுக்கும் பெஷாவருக்குமிடையே சரக்குகள் ஏற்றி அனுப்பும் வர்த்தகத்தில் இப்போது ஈடுபட்டிருக்கிறான்.