Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

இன் திஸ் வேர்ல்ட் - Page 2

பயணம் பல மணி நேரங்கள் நீடித்துக் கொண்டிருக்கும்.  மலை, சமவெளி, பாலைவனம், மேடு, பள்ளம் என்று கன்டெய்னர் லாரி போய்க் கொண்டே இருக்கும்.  நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு, அது இத்தாலியை அடையும்.  கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படும் ஒரு 'ஷெட்'டிற்குள் அது நுழைந்து நிற்க, அதிலிருந்து சரக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கப்படும்.  இறுதியில் உள்ளே இருக்கும் மறைவிடம் திறக்கப்பட, உள்ளே....  இறந்த நிலையில் இனாயத், அந்த கணவன், அவனுடைய மனைவி... மயங்கிய நிலையில் ஜமால் சோர்வடைந்து படுத்திருக்கிறான்.  அவனைத் தட்டி எழுப்ப, திகைப்புடன் அவன் எழுந்திருக்கிறான்.  இனாயத், அந்த குடும்பத்தின் தலைவன், தலைவி ஆகியோரை அசைத்துப் பார்க்க, அவர்களிடம் எந்தவித அசைவும் இல்லை.  அவர்கள் எப்போதோ இறந்து விட்டனர்.  படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து தன்னுடைய அழகான தோற்றத்தால் நம் உள்ளங்களில் இடம் பிடித்த, துணிச்சலுடன் ஜமாலை அழைத்துக் கொண்டு சாகசப் பயணம் மேற்கொண்ட, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்ட இனாயத் இறுதி மூச்சை விட்டு விட்டான் என்பதை நினைக்கும்போது நமக்கே மனதில் கவலை உண்டாகத்தான் செய்யும்.  அதே நேரத்தில் -- இப்படிப்பட்ட இக்கட்டான பயணத்தில் உயிருடன் ஒரு மனிதன் இருந்தால்தான் ஆச்சரியம் என்பதையும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், தன் தந்தையும் தாயும் மரணத்தைத் தழுவியிருக்க, அவர்களின் அந்த செல்லப் பையன் உயிருடன் இருப்பான்!  கணவனும், மனைவியும் இறந்து விட்டார்கள் என்பதை அங்கு இருப்பவர்கள் தெரிந்து கொண்டு, அவர்களைப் புரட்டிப் போட, அவர்களுக்கு நடுவிலிருந்து குழந்தை நெளிவான் பாருங்கள்!  அந்த இடத்தில் நம்மையும் மீறி நமக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்ளும்.  பெரியவர்களே இறந்து போக, காற்றே புக முடியாத ஒரு இடத்தில் உயிருடன் ஒரு கைக் குழந்தை இருப்பது என்றால்....?  மனதில் நாம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது.  அங்குள்ள மனிதர்கள் ஆசையுடன் அந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்போது, பாசத்துடன் அவனை நமக்கும் கொஞ்ச வேண்டும் போல தோன்றும்.  இனி அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன, அவனை வளர்க்கப் போவது யார், எந்தவித கவலையும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொள்ளப் போவது யார்?  அவன் எப்படி வளர்வான்?  என்னவாக ஆவான்?  -- இந்த அத்தனை கேள்விகளும் அப்போது நம் மனங்களில் அடுத்தடுத்து எழும்.  காலம்தான் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும்.

இப்போது நம்முடைய ஜமாலின் விஷயத்திற்கு வருவோம்.  திகைப்படைந்து எழுந்த ஜமால் தன்னைச் சுற்றிலும் இறந்து கிடப்பவர்களைப் பார்ப்பான்.  இனாயத்தை அசைத்துப் பார்ப்பான்.  மூக்கில் கையை வைத்துப் பார்ப்பான்.  மூச்சு வரவில்லை என்பது தெரிந்ததும், தன் அன்பிற்குரிய இனாயத் இறந்து விட்டான் என்பதை அவன் உணர்ந்து கொள்வான்.  தாங்க முடியாத கவலை அவனுடைய முகத்தில் வந்து ஆக்கிரமிக்கும்.  தன்னுடைய ஒரு பாதியே தன்னை விட்டுப் போய் விட்டதைப் போல அவன் உணர்வான்.  தான் இந்த அகன்ற உலகில் அனாதையாக விடப்பட்டதைப் போன்ற ஒரு எண்ணம் அவனுக்குள் உண்டாகும்.

ஆனால், அதையே நினைத்துக் கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டிருக்க முடியுமா?  அந்த கன்டெய்னர் லாரியிலிருந்து வேகமாக குதித்து, உலகத்திலிருந்தே தப்பித்து ஒடுவதைப் போல ஜமால் புயலென பாய்ந்து ஒரு ஓட்டம் ஓடுவான் பாருங்கள்....!  மொத்த படத்திலேயே என் மனதில் இப்போதும் நின்று கொண்டிருக்கும் ஒரு அருமையான காட்சி அது.  நீண்ட தூரம் ஓடி.... ஓடி.... ஒரு இடத்தில் போய் நிற்பான், இனி தன் உயிருக்கு எந்த வித பாதிப்புமில்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அப்போதுதான் அவனுக்குள் உண்டாகியிருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, இத்தாலியிலேயே பல நாட்கள் வாழ்வான் ஜமால், பரபரப்பான இத்தாலியின் சாலைகளில் அவன் பல பொருட்களையும் விற்பனை செய்வான்.  அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பான்.  பொருட்களை விற்பனை செய்து நடந்து போய்க் கொண்டிருப்பதற்கு மத்தியில், ஒரு ரெஸ்ட்டாரெண்டில் இருந்த பெண்ணிடம் அவளுடைய பர்ஸைத் திருடிக் கொண்டு அவன் ஓடுவான்.  அவள் கலங்கிப் போய் அழுவாள்.  அதை அவன் பொருட்படுத்தினால் தானே!  நீண்ட தூரம் ஓடிய பிறகு, அநத் பர்ஸுக்குள் இருந்த பண நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பர்ஸை ஒரு புதருக்குள் வீசி எறிந்து விடுவான்.

அந்த பணத்தைக் கொண்டு பாரிஸுக்கு புகை வண்டியில் ஒரு டிக்கெட் எடுப்பான்.  அங்கிருந்து 'Sangatte Asylum Seekers Camp' என்ற அகதிகள் முகாமிற்குச் செல்வான்.  அங்கிருக்கும் பல அகதிகளையும் அவன் பார்க்கிறான்.  அவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையைப் பார்த்து, கவலைப்படுகிறான்.  அந்த இடத்தில் யூசெஃப் என்ற ஒரு புதிய நண்பன் அவனுக்கு அறிமுகமாகிறான்.  அவனுடன் சேர்ந்து அவன் ஒரு லாரியில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.  இறுதியாக.... தான் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டானோ, அந்த இடத்திற்கு போய் சேர்கிறான்.  ஆம்.... லண்டன் மண்ணில் அவன் கால் பதிக்கிறான்.  ஆரம்பத்திலிருந்து அவனுடன் சேர்ந்து பயணித்த இனாயத் அவனுடன் இப்போது இல்லை.  எனினும், அவன் ஒருவனாவது நினைத்த இலக்கை அடைந்தானே!  அந்த வகையில் சந்தோஷம்தான்...

தான் லண்டனை அடைந்ததும், ஜமால் செய்த முதல் வேலையே தன்னுடைய மாமாவிற்கு பொது தொலைபேசி மூலம் பேசியதுதான்.  'மாமா, நான் லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டேன் என்கிறான்.  அவனுடைய மாமா 'இனாயத் எங்கே?' என்று கேட்க, 'இனாயத் இந்த உலகத்தில் இல்லை' (not in this world) என்று பதில் கூறுவான் ஜமால்.  என்ன அருமையான பதில்!  ஒரு சில சொற்களில் எவ்வளவு பெரிய உண்மையை அந்தச் சிறுவன் கூறி விட்டான்!  இனி ஜமாலின் உலகம் லண்டன்தான்.... உயர்வோ, தாழ்வோ எதுவாக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையை இனிமேல் அவன் அங்கு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.....

இப்போது மீண்டும் பாகிஸ்தான் அகதிகள் முகாம்.  பெஷாவரில் அகதிகளும், குழந்தைகளும், வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் உயிர்களும் கவலைகளுடன் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.  குழந்தைகள் வறுமைக்கு மத்தியில் சிரிக்கின்றனர்...  ஆச்சரியப்படுகின்றனர்....  அழுகின்றனர்... ஏக்கத்துடன் நடந்து திரிகின்றனர்....  பேந்தப் பேந்த விழிக்கின்றனர்...  தங்களுடைய எதிர்காலம் என்னவென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

'In this World' திரைப்படம் அத்துடன் முடிகிறது.  டைட்டில் ஓடுகிறது.  அதில் ஒரு டைட்டில்: 'ஜமால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கிறான்.  அங்கு அது மறுக்கப்படுகிறது.  எனினும், பதினெட்டு வயது ஆரம்பமாகும் வரை, அவன் அங்கு இருக்கலாம் என்ற அனுமதி  மட்டும் கிடைக்கிறது'.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version