மக்கள் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 4246
வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?
விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.
உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.
கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?
அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.
பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?
படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?
அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்' என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.
வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?
தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு' என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.
சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?
என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.
எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?
இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.
நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே? உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்?
ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே.