மக்கள் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 4245
மக்கள் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி
(கதிர்)
நீ ங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான்.
நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?
வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.
மேடையில் எப்படி அனுபவம்?
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.
பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.
உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.
சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.
நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.
நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.
உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.
ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.
மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.
கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.