Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மக்கள் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி - Page 2

magazine-interview-of-makkal-thilagam

ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?

சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.

சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?

இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.

ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?

தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version