வார் ஹார்ஸ் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4420
விஷ வாயு பரவியதில் ஆன்ட்ரூ கொல்லப்படுகிறான். ஆல்பெர்ட் தப்பிக்கிறான். தற்காலிகமாக அவனுடைய கண் பாதிக்கப்படுகிறது. தன் கண்களை அவன் 'பேன்டேஜ்' மூலம் மூடியிருக்கிறான். அவன் பிரிட்டிஷ் மருத்துவ முகாமில் இருக்கிறான். யாருக்கும் சொந்தமற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட வினோதமான குதிரையைப் பற்றி அவன் கேள்விப்படுகிறான். ராணுவ டாக்டர், காயம் பட்டிருக்கும் குதிரை ஜோய்யைக் கீழே படுக்க வைக்கும்படி கூறுகிறார். ஆனால், ராணுவ அதிகாரியோ குதிரையைச் சுட்டுக் கொல்வதற்கு முயற்சிக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு ஆந்தையின் குரல் வருவதைக் கேட்கிறது ஜோய். தன் சிறு வயதில் கேட்ட அதே ஆந்தையின் சத்தம். ஆல்பெர்ட் படை வீரர்களுக்கு மத்தியில், ஆந்தையின் ஓசையை உண்டாக்கியவாறு வேகமாக நடந்து வருகிறான். ஜோய் தன் இளமைக் கால நண்பன் ஆல்பெர்ட்டை நோக்கி பாய்ந்தோடுகிறது. தான் வளர்த்த குதிரை அது என்று எல்லோரிடமும் கூறுகிறான் ஆல்பெர்ட். அவர்கள் அதை நம்ப மறுக்க, 'பேன்டேஜ்' போடப்பட்ட கண்களுடன் அவன் குதிரையின் உடலில் இருக்கும் அடையாளங்களைக் கூறுகிறான். நான்கு கால்களின் கீழ்ப் பகுதியிலும் வெள்ளை நிற அடையாளம் இருக்கும் என்கிறான். அதன் நெற்றிப் பகுதியில் வெள்ளை நிற நட்சத்திரம் இருக்கும் என்கிறான். சேறு படிந்த நிலையில் இருக்கும் ஜோய்யை நீர் விட்டு கழுவிப் பார்க்கிறார்கள். அவன் சொன்ன அடையாளங்கள் அப்படியே இருக்கின்றன.
1918ஆம் ஆண்டு, 11வது மாதமான நவம்பர் மாதத்தில், 11ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு போர் முடிவுக்கு வருகிறது. அப்போது ஆல்பெர்ட்டிற்கு கண் பார்வை மீண்டும் கிடைக்கிறது. அதிகாரிகளின் குதிரைகள் மட்டுமே வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படும் என்ற தகவல் தெரிந்து, தன் நண்பர்களிடம் பண உதவி பெற்று தன் குதிரை ஜோய்யை ஏலத்தில் எடுக்க நினைக்கிறான் ஆல்பெர்ட். ஆனால், ஒரு ஃப்ரெஞ்ச் கசாப்பு கடைக்காரர் அதிகமான தொகைக்கு அந்த குதிரையை ஏலத்தில் கேட்கிறார். அப்போது எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், மிகப் பெரிய ஒரு தொகைக்கு அதை ஏலத்தில் எடுக்கிறார் திடீரென்று அங்கு வந்த ஒரு மனிதர் அவர்- எமிலியின் தாத்தா. அவர் அந்த குதிரையை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்ல தீர்மானித்திருக்கிறார். தன் பேத்தி எமிலி இறந்து விட்டதாக அவர் ஆல்பெர்ட்டிடம் கூறுகிறார். தன் பேத்தி பாசம் வைத்திருந்த குதிரை ஜோய்யைப் பெறுவதற்காக, மூன்று நாட்கள் அவர் நடந்தே அங்கு வந்திருக்கிறார்.
குதிரையைத் தனக்கு தரும்படி கெஞ்சுகிறான் ஆல்பெர்ட். முதலில் அவர் மறுத்து விடுகிறார். ஆனால், குதிரை ஜோய் ஆல்பெர்ட்டைப் பார்த்தவுடன் பாசத்துடன் ஓடி வருகிறது. அதைப் பார்த்ததும், அவர் ஆச்சரியப்படுகிறார். தான் வைத்திருந்த முத்திரை பதிக்கப்பட்ட கொடியை அவனிடம் அவர் காட்டுகிறார். தன் தந்தைக்குச் சொந்தமானது அது என்கிறான் ஆல்பெர்ட். அந்தக் குதிரை அவனுக்குச் சொந்தமானதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, அவனிடமே குதிரையை ஒப்படைக்கிறார் அவர். அவனிடம் அதை ஒப்படைப்பதுதான், தன் பேத்தி எமிலிக்குச் செய்யும் பொருத்தமான நினைவு அஞ்சலியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.
ஆல்பெர்ட் தன் செல்ல குதிரை ஜோய்யுடன் தன் வீட்டை நோக்கி வருகிறான். அவன் தன் பெற்றோரைப் பாசத்துடன் இறுக தழுவுகிறான். ராணுவத்தில் கொடுக்கப்பட்ட முத்திரை பதித்த கொடியைத் தன் தந்தையிடம் தருகிறான். ஆல்பெர்ட்டின் வயதான தந்தை தன் மகனை நோக்கி கையை நீட்டுகிறார். இப்போது அவரைப் போலவே, அவனும் ஒரு முன்னாள் போர் வீரன்.
அத்துடன் படம் முடிவடைகிறது. அருமையான ஒரு படத்தைப் பார்த்த முழு திருப்தியுடன் நாம் 'Steven Spielberg'இன் பெயரைப் பார்த்ததும், நம்மை மறந்து கைகளைத் தட்டுகிறோம்.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்- ஜோய்யாக நடித்திருக்கும் குதிரையும்தான்...