வார் ஹார்ஸ் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4420
ஜோய்க்கு ராணுவ பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்போது அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் Topthorn என்ற இன்னொரு குதிரை, அதற்கு அறிமுகமாகிறது. அது ஒரு உயரமான கருப்பு குதிரை. அந்த இரு குதிரைகளும் நண்பர்களாக ஆகிறார்கள். அந்த இரு குதிரைகளும் France, Flanders ஆகிய நாடுகளுக்கு போரில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. போரில் Nicholls பலருடனும் சேர்ந்து கொல்லப்படுகிறார். ஜெர்மனியர்கள் குதிரைகளைக் கைப்பற்றுகிறார்கள்.
14 வயது சிறுவனான Michael, ராணுவ உயர் அதிகாரியிடம் 'இந்த குதிரைகளை ஆம்புலன்ஸ் வண்டியை இழுத்துச் செல்வதற்கு பயன்படுத்தலாம் என்கிறான். அதைத் தொடர்ந்து அவனும், அவனுடைய சகோதரன் Guntherம் குதிரைகளை ஓட்டிச் செல்கிறார்கள். இருவரும் அந்த குதிரைகளுடன் இத்தாலிக்குத் தப்பித்துச் செல்ல முயல்கிறார்கள். ஒரு பண்ணையின் காற்றாலையில் அவர்கள் இருவரும் இரவில் தங்கியிருக்க, ஜெர்மனிய வீரர்களால் அவர்கள் 'துரோகிகள்' என்று கண்டு பிடிக்கப்பட்டு, சுட்டு கொல்லப்படுகிறார்கள்.
மறுநாள் காலையில், ஒரு ஃப்ரெஞ்ச் இளம் பெண் காற்றாலைக்குள் அந்த இரு குதிரைகளையும் பார்க்கிறாள். அவள் பெயர் Emilie. அவள் அங்கு தன் வயதான தாத்தாவுடன் வசிக்கிறாள். அப்போது அங்கு வந்த ஜெர்மனிய போர் வீரர்கள், அங்கிருக்கும் உணவுப் பொருட்களை அபகரித்துச் செல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், எமிலி இரு குதிரைகளையும் தன் படுக்கையறையில் மறைத்து வைத்து விடுகிறாள். அதன் மூலம் ஜெர்மனியர்களிடமிருந்து குதிரைகள் தப்பி விடுகின்றன. எமிலி எலும்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். எங்கே குதிரைச் சவாரி செய்தால், அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று அவள் அதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறாள். எனினும், அவளுடைய பிறந்த நாளை முன்னிட்டு, அவளை குதிரை ஜோய்யின் மீது ஏறி, சவாரி செய்ய அவளுடைய தாத்தா அனுமதிக்கிறார். தங்களுடைய நிலத்தையொட்டி இருக்கும் மலையை நோக்கி அவள் குதிரையைச் செலுத்துகிறாள். ஆனால் நீண்ட நேரமாகியும் எமிலி திரும்பி வரவில்லை. அப்போதுதான் தான் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதையே அந்த தாத்தா உணர்கிறார். கருப்பு குதிரையான Topthorn மலையை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்க, அதற்குப் பின்னால் தாத்தா செல்கிறார். அப்போதுதான் அவருக்கே தெரிகிறது - ஜெர்மனிய போர் வீரர்கள் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள் என்ற விஷயம். எமிலி எவ்வளவோ மன்றாடுகிறாள். ஆனால், அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இரு குதிரைகளையும் ஜெர்மனிய வீரர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்கிறார்கள். ஜோய்யின் சேணத்தில் ஆல்பெர்ட்டால் முன்பு கட்டப்பட்ட, முத்திரை பதிக்கப்பட்ட கொடி இப்போது தாத்தாவிடம் இருக்கிறது. ஜோய்யின் சேணத்தில் கட்டப்பட்டிருந்த அதை, அவர் எடுத்துக் கொள்கிறார்.
ஜெர்மனிய போர்க் கருவிகளை இழுத்துச் செல்வதற்கு Joey, Topthorn என்ற அந்த இரு குதிரைகளையும் பயன்படுத்துகின்றனர். அந்த கடுமையான வேலையில் ஈடுபட்ட பல குதிரைகள் இதற்கு முன்பு இறந்திருக்கின்றன. எனினும், Friedrich என்ற குதிரைகளின் மீது அன்பு வைத்திருக்கும் அதிகாரி அந்த இரு குதிரைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.
1918 ஆம் ஆண்டில் ஆல்பெர்ட் போருக்குச் செல்வதற்கு தேந்தெடுக்கப்படுகிறான். அவனுடன், அவனுடைய நெருங்கிய நண்பனான Andrewவும். இருவருக்கும் தலைமை தாங்கும் அதிகாரியாக இருப்பவன், ஆல்பெர்ட்டின் நிலத்திற்குச் சொந்தக்காரரான Lyonsஇன் மகன் David. Albert, Andrew இருவரும் மற்ற போர் வீரர்களுடன் சேர்ந்து, ஜெர்மனிக்குச் சொந்தமான ஒரு பாலைவனப் பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்கு ஒரு வாயு குண்டு வெடித்து, விஷ வாயு பரவுகிறது.
மற்ற குதிரைகளை விட, மிக அதிகமான காலம் Joey, Topthorn என்ற அந்த இரு குதிரைகளும் ஜெர்மனிய ராணுவத்திற்குச் சேவை செய்கின்றன. இறுதியில் கம்பீரமான அந்த கருப்பு குதிரையான Topthorn ஒரு நாள் களைப்படைந்து, மரணத்தைத் தழுவுகிறது. Friedrichஐ மற்ற ஜெர்மனிய வீரர்கள் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். ஜோய் அங்கிருந்து தப்பி, யாருக்கும் சொந்தமற்ற (no man's land) இடத்திற்குள் நுழைகிறது. முற்றிலும் முட் கம்பிகளால் சூழப்பட்டிருக்கும் அந்த இடத்தில் புயலென பாய்ந்தோடுகிறது ஜோய். முட் கம்பிகள் ஜோய்யின் உடலில் குத்தி, காயம் உண்டாக்குகின்றன.
தங்களுக்கென்று இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் அமர்ந்து, பிரிட்டிஷ் வீரர்களும், ஜெர்மனிய வீரர்களும் இரவு நேர பனிப் படலத்திற்கு மத்தியில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் அந்த உயரமான குதிரையைப் பார்க்கின்றனர். இவ்வளவு பெரிய போரில் ஒரு குதிரை உயிருடன் தப்பித்திருக்கிறதா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. Colin என்ற பிரிட்டிஷ் படை வீரன் ஒரு வெள்ளை நிற கொடியை அசைத்தவாறு, அந்த நிலப் பகுதிக்குள் நுழைகிறான். குதிரையைப் பிடித்துக் கொண்டு வந்து, பிரிட்டிஷ் படையில் சேர்த்து விட வேண்டும் என்பது அவனுடைய நோக்கம். அதே நேரத்தில் - Peter என்ற ஜெர்மனிய வீரர் கம்பிகளை முறிக்கும் 'wire cutter' உடன் வருகிறார். உடல் முழுக்க முட் கம்பிகள் சுற்றியிருக்க, சிறிதும் அசைய முடியாமல், மாட்டிக் கொண்டிருக்கும் ஜோய்யை அந்த கொடுமையிலிருந்து அவர்கள் இருவரும் விடுதலை செய்கிறார்கள். அந்த குதிரையை யார் எடுத்துக் கொள்வது என்பதற்காக காசை போட்டுப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த Colin வெல்கிறான். மீண்டும் பிரிட்டிஷ் பக்கம் வந்து சேர்கிறது ஜோய். எதிர்பாராத ஒரு நட்பு அந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே அந்த இடத்தில் உண்டாகிறது.