வார் ஹார்ஸ்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4442
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
வார் ஹார்ஸ் - War Horse
(அமெரிக்க திரைப்படம்)
2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் - 'War Horse.' போர் பின்னணியைக் கொண்ட, அதே சமயம்- கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான படமிது.
உலக புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரான Steven Spielberg இயக்கி, உலகமெங்கும் உள்ள பட ரசிகர்களாலும், பத்திரிகையாளர்களாலும், விமர்சகர்களாலும் இன்று வரை இப்படம் பாராட்டப்பட்டுக் கொண்டு இருப்பதிலிருந்தே, இப்படத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.
1982ஆம் ஆண்டில் 'War Horse' என்ற பெயரில் Michael Morpurgo எழுதிய நாவலே, படத்திற்கான அடிப்படை.
படத்தின் திரைக்கதையை Lee Hall, Richard Curtis இருவரும் சேர்ந்து எழுதினார்கள்.
Kathleen Kennedyயுடன் இணைந்து இப்படத்தை Steven Spielberg தயாரித்தார்.
ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இப்படம் 146 நிமிடங்கள் ஓடிக் கூடியது.
ஆறு அகாடெமி (ஆஸ்கார்) விருதுகளுக்காகவும், இரண்டு Golden Globe விருதுகளுக்காகவும், ஐந்து Bafta விருதுகளுக்காகவும் இப்படம் எல்லோராலும் சிபாரிசு செய்யப்பட்டது.
பரபரப்பாக பேசப்பட்ட 'War Horse' படத்தின் கதை என்ன?
இதோ...
1912ஆம் ஆண்டு. Albert என்ற சிறுவன் ஒரு குதிரையின் பிரசவத்தைப் பார்க்கிறான். தன் தாயின் மடியிலிருந்து வெளியே வந்த அழகான குதிரைக் குட்டியையே அவன் ஆசையுடன் பார்க்கிறான். அந்த குதிரைக் குட்டி படிப்படியாக வளர்ந்து, துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருப்பதையும், தன் தாயுடன் சேர்ந்து வயல் வெளிகளில் ஓசை உண்டாக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருப்பதையும் அவன் பார்க்கிறான்.. அதே பகுதியில் ஆல்பெர்ட்டும், அவனுடைய தந்தை Tedம், தாய் Roseம் சேர்ந்து வசிக்கிறார்கள்.
ஒரு நாள் ஒரு இடத்தில் படிப்படியாக வளர்ந்த அந்த குதிரை ஏலத்தில் விடப்படுகிறது. நிலத்தை உழுவதற்கு ஒரு குதிரை தேவை என நினைக்கும் ஆல்பெர்ட்டின் தந்தை டெட், ஏலம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். பலரும் அதை ஏலத்தில் எடுப்பதற்காக கேட்கின்றனர். நல்ல ஒரு தொகைக்கு அந்த இளம் குதிரையை ஏலத்தில் எடுத்து, வீட்டிற்குக் கொண்டு வருகிறார் டெட்.
மிகப் பெரிய விலைக்கு குதிரையை ஏலத்தில் எடுத்ததால், பண்ணை வீட்டின் உரிமையாளருக்கு கட்டப்பட வேண்டிய குத்தகைப் பணத்தை அவரால் கட்ட முடியாமல் போய் விடுகிறது. அதனால் கோபமடைந்த அந்த மனிதர் 'இளவேனிற் காலத்திற்குள் குத்தகைப் பணத்தை கட்டவில்லையென்றால், வீட்டையும், நிலத்தையும் நானே எடுத்துக் கொண்டு, உங்கள் அனைவரையும் வெளியே விரட்டி விடுவேன்' என்று கூறுகிறார். அந்த குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் பணத்தை கட்டி விடுவதாக கூறுகிறார் டெட். கற்களும், பாறைகளும் நிறைந்த அந்த நிலத்தை உழுது, அதில் முள்ளங்கி விளைவித்து, எப்படியாவது பணத்தைக் கட்டி விடலாம் என்ற நினைப்பு அவருக்கு.
தான் மனதில் அளவற்ற அன்பு வைத்து நேசித்த குதிரையை தன் தந்தை ஏலத்தில் எடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்தது குறித்து ஆல்பெர்ட்டுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவன் அதற்கு Joey என்று பெயரிட்டான். அதனுடனே எப்போதும் அவன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டான். அதற்கு பல பயிற்சிகளையும் அவன் தந்தான். அவன் ஏதோ ஒரு இடத்தில் நின்று கொண்டு 'வா' என்று கூறுவான். உடனே அந்த இளம் குதிரை தாவித் தாவி ஓடி வந்து, அவனுக்கு முன்னால் நிற்கும். அவன் தன் இரு கைகளையும் குவித்து வைத்துக் கொண்டு, ஆந்தை கத்துவதைப் போல, ஓசை எழுப்புவான். அதைக் கேட்டு அவனை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் ஜோய். ஆல்பெர்ட்டின் மிகவும் நெருங்கிய நண்பனான Andrew, அந்தக் காட்சிகள் அனைத்தையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான்.
டெட் முன்பு ராணுவத்தில் இருந்தவர். அவர் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஃப்ளாஸ்க்கிலிருந்து மதுவை ஊற்றி பருகிக் கொண்டே இருப்பார். Second Boer War தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்றபோது, அதில் அவர் ஈடுபட்டு, பல பதக்கங்களையும் வாங்கியிருக்கிறார். அவற்றையெல்லாம் ரோஸ், தன் மகன் ஆல்பெர்ட்டிடம் ஆர்வத்துடன் காட்டுகிறாள். போரின்போது நெருப்பு விபத்து ஏற்பட்டு, மிகுந்த காயத்திற்கு உள்ளாகிறார் டெட். அதற்காக அவருக்கு ஒரு சிறப்பு விருது தரப்படுகிறது. அப்போது தரப்பட்ட ஒரு முத்திரை பதிக்கப்பட்ட கொடியை ரோஸ், தன் மகனிடம் கொடுக்கிறாள். போரில் தான் செய்த சாகசங்கள் குறித்த பெருமை அவனுடைய தந்தைக்கு இப்போது இல்லை என்றும், போர் தந்த வெறுப்பில் கொடிகளையும், தான் பெற்ற பதக்கங்களையும் அவர் வீசி எறிந்து விட்டார் என்றும் தான் அவற்றை எடுத்து இதுவரை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் அவள் கூறுகிறாள்.
ஆல்பெர்ட் குதிரை ஜோய்யை நிலத்தை உழுவதற்கு பயிற்சி தருகிறான். பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு, அந்த கட்டாந்தரையை அது மிகவும் அருமையாக உழுகிறது. அதில் முள்ளங்கியை விளைய வைக்கிறார்கள். இதற்கிடையில், ஒரு பலத்த மழை பெய்கிறது. அது வளர்ந்து நின்றிருந்த பயிர்களை முழுமையாக அழித்து விடுகிறது. அதனால் தான் தர வேண்டிய குத்தகை பணத்திற்காக, ஆல்பெர்ட்டிற்கே தெரியாமல் டெட், குதிரை ஜோய்யை குதிரைப் படையைச் சேர்ந்த Captain James Nichollsக்கு விற்று விடுகிறார்.
முதல் உலகப் போர் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அந்த குதிரை வியாபாரம் நடக்கிறது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட ஆல்பெர்ட், கேப்டனிடம் சென்று 'ஜோய்யை போருக்கு அழைத்துச் செல்லக் கூடாது' என்று கெஞ்சுகிறான். 'நீ அந்த குதிரையைப் பற்றி கவலைப் படாதே. நான் மிகவும் கவனமாக அதைப் பார்த்துக் கொள்வேன். போர் முடிந்த பிறகு- நானே குதிரையைத் திருப்பித் தருகிறேன்' என்று கூறுகிறார் அவர். ஆல்பெர்ட் ராணுவத்திற்குள் நுழைய முயற்சிக்கிறான். ஆனால், வயது குறைவு காரணமாக அவன் மறுக்கப்படுகிறான். கேப்டன் குதிரை ஜோய்யுடன் கிளம்புவதற்கு முன்னால், ஆல்பெர்ட் தன் தந்தை போரின்போது பெற்ற முத்திரை பதித்த கொடியை அதன் சேணத்தில் கட்டி விடுகிறான்.