Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மேட்ரிட் 1987

Madrid 1987

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

மேட்ரிட் 1987 – MADRID 1987

(ஸ்பானிஷ் மொழி திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படமிது. கதையை எழுதி இயக்கியவர் David Trueba. அதே வருடத்தில் நடைபெற்ற San Sebastian International Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

105 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான `மேட்ரிட்'டில் படமாக்கப்பட்டது. மொத்தம் படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களே பன்னிரெண்டுதான். இப்படத்தின் இயக்குநரான David Trueba ஒரு இளம் பத்திரிகையாளராக 1980 ஆம் ஆண்டில் இருந்தபோது, சந்திக்க நேர்ந்த அனுபவங்களே இப்படம் உருவாகுவதற்குத் தூண்டுதல்களாக இருந்தன.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற Sundane Film Festival லும் இப்படம் திரையிடப்பட்டது. 

படம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் தவிர, மீதி மொத்த படமும் ஒரு சிறிய குளியலறைக்குள்ளேயே நடைபெறுவதாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க வருபவை இரண்டே கதாபாத்திரங்கள்தாம். நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர், பதின் பருவத்தைச் சேர்ந்த ஒரு அழகிய இளம் பெண்.

இவர்கள் இருவரை மட்டுமே வைத்து ஒரு முழு படத்தையும் சிறிதும் சோர்வு உண்டாகாத அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் டேவிட் ட்ரூபா.

நான் 'Madrid 1987' படத்தைப் பார்த்தபோது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு விட்டேன். ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையைக் கூறுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நம் திரைப்பட இயக்குநர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, David Trueba எங்கோ மலையின் உச்சியில் இருக்கிறார். நம் இயக்குநர்களில் பெரும்பாலோர் பள்ளத்திற்குள் நின்று கொண்டு  செய்வதறியாது விழித்துக் கொண்டிருப்பதுதான் நம் ஞாபகத்தில் வருகிறது.

படத்தைப் பார்க்கும்போது எனக்கு சிறிதுகூட தளர்ச்சியே உண்டாகவில்லை. அந்த அளவிற்கு நூல் பிடித்ததைப் போல கதாபாத்திரங்களும், நேர்த்தியான திரைக்கதையும் அமைக்கப்பட்டிருந்தன. இன்னும் சொல்லப் போனால்- படத்தில் அந்த இரு கதாபாத்திரங்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களை பல மாதங்களுக்கு முன்பு நான் படத்தைப் பார்த்தபோதே, ஆர்வத்துடன் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்தேன் என்பதிலிருந்தே அதன் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

அந்த அளவிற்கு நான் சிறப்பித்துக் கூறும் ` Madrid 1987' படத்தின் கதைதான் என்ன? 

1987 ஆம் வருடம் Miguel என்பவர். ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய பத்திரிகையாளர். பல புகழ் பெற்ற பிரபல நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும், பத்திகளும், கட்டுரைகளும் எழுதக்கூடியவர் அவர். பல வருடங்களாக அவர் அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார். மனதில் படக்கூடிய எதையும் சிறிதும் மறைக்காமல், யாருக்கும் பயப்படாமல், பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் துணிச்சலுடன் எழுதக் கூடிய அவரின் எழுத்துக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு. அவரின் கட்டுரைகளுக்காகவே அவை பிரசுரமாகி வரும் பத்திரிகைகளை மக்கள் விரும்பி வாங்குவார்கள்.

அவரின் தனித்துவ எழுத்துக்களுக்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் ஸ்பெயின் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், என்னதான் பத்திரிகை உலகில் தன்னுடைய அபார எழுத்தாற்றலால் கொடி கட்டிப் பறந்தாலும், மக்கள் `ஆஹா, ஓஹோ' என்று புகழ்ந்தாலும், மைகேலின் மனதிற்குள் முழுமையான சந்தோஷம் என்பதே இல்லை. புகழ் இருக்கும் அளவிற்கு, பெரிய அளவில் தனக்கு வருமானம் இல்லை என்பதும் ஒரு காரணம்.

அதனால் ஒருவித விரக்தியின் எல்லையில்தான் Miguel வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவரைச் சந்திப்பதற்காக வருகிறாள் ஒரு டீன் - ஏஜ் இளம்பெண். காண்போரைச் சுண்டி இழுக்கக்கூடிய பேரழகு படைத்த அந்த இளம் தேவதையின் பெயர் Angela. பெயருக்கேற்றபடி உண்மையிலேயே அவள் ஒரு `ஏஞ்ஜெல்'தான். ஒரு ரெஸ்ட்டாரெண்டில் Miguel அமர்ந்திருக்க, அங்கு வருகிறாள் ஏஞ்ஜெலா. அதற்கு முன்பு மைகேலுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். அவரை தான் சந்திக்க விரும்புவதாக அவள் கூறியிருந்தாள். அவர்தான் அவளை அந்த நேரத்தில், ரெஸ்ட்டாரெண்டிற்கு வரச் சொல்லி கூறியிருந்தார்.

சொற்பொழிவு ஆற்றுவதிலும், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதிலும் மிகவும் ஆர்வமுடையவள்  ஏஞ்ஜெலா. ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுத அவள் விரும்புகிறாள்.  அதற்கு அவள் தேர்ந்தெடுத்த நபர் Miguel. அவரைப் பற்றியே ஒரு பன்முகத் தன்மை கொண்ட கட்டுரையை அவள்  எழுத நினைக்கிறாள். அதற்காகத்தான் அவள் மைகேலைத் தொடர்பு கொண்டாள். அவளின் திறமை என்ன என்பது தெரியாததால், இதற்கு முன்பு அவள் எழுதியிருக்கும் கட்டுரைகளை, தன்னைச் சந்திக்க வரும்போது, கையில் எடுத்துக் கொண்டு வரும்படி அவர் கூறியிருந்தார். அதன்படி அவள் தான் எழுதிய சில கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகளுடன் அங்கு வருகிறாள். 

தனக்கு எதிரில் அவளை அமரச் சொன்னார் Miguel. அவள் தந்த கையெழுத்துப் பிரதிகளை அவர் இப்படியும், அப்படியுமாக புரட்டிப் பார்த்தாலும், அவற்றைப் பார்ப்பதில் அவருக்கு பெரிய அளவில் ஆர்வமோ, ஈடுபாடோ இல்லை என்பதே உண்மை. அவளுடைய எழுத்துக்களில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டும் அவர், அவளுக்கு எழுத்தில் இருக்கும் ஆர்வத்தையும், திறமையையும் பாராட்டவும் செய்கிறார். அவளின் எழுத்துக்களைப் பார்ப்பதைவிட, அவரின் கவனம் முழுவதும் அந்த அழகுச் சிலையின் மீதே முற்றிலும் இருக்கிறது. அவரின் கண்கள் அவளை தலையிலிருந்து  பாதம் வரை மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவளின் உடலழகில் அந்த வயதான மூத்த பத்திரிகையாளர் சொக்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்.

`எழுத்தில் உனக்கு இருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் இங்கேயே அமர்ந்து எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும்? என் நண்பன் Luisக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட் இருக்கிறது. அவன் வார இறுதி என்பதால், வெளியூர் போயிருக்கிறான். திங்கட்கிழமைதான் வருவான். அந்த வீட்டின் சாவியை அவனிடமிருந்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். அதுவரை நாம் அந்த ஃப்ளாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். வா.... நாம் அங்கு போவோம்' என்கிறார் Miguel. ஆரம்பத்தில்  சற்று தயங்கினாலும், தான் வந்த விஷயம் முடிய வேண்டுமே என்பதற்காக அவருடன் அந்த வீட்டிற்குச் செல்ல சம்மதிக்கிறது நம் பேரழகு பெட்டகம்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version