Lekha Books

A+ A A-

மேட்ரிட் 1987 - Page 2

Madrid 1987

அந்த ஃப்ளாட்டிற்குள் இருவரும் நுழைகிறார்கள். எல்லா வசதிகளும் கொண்ட வீடு அது. இருவரும் கைகளில் விஸ்கியை வைத்துக் கொண்டே உரையாடலைத் தொடர்கிறார்கள். லூயிஸ் வரைந்த ஓவியங்கள் பல அங்கு இருக்கின்றன. அந்த ஓவியங்களை மிதித்துக் கொண்டு மைகேல் நடக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள் ஏஞ்ஜெலா. ` லூயிஸே இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.  வாழ்க்கையையும், அனுபவங்களையும் கலந்து பார்க்கக் கூடியவன் அவன்' என்கிறார் Miguel. அத்துடன் நிற்காமல்- `ஓவியர்களைப் பார்த்து நான் மிகவும் பொறாமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், அவர்களுக்கு வார்த்தை என்பதே தேவையில்லை. ஆனால், வார்த்தைகளால் விவரித்துக் கூற முடியாத விஷயங்களைக் கூட, வார்த்தைகளின் மூலம் விளக்கிக் கூறுவதற்கு இலக்கியம் படாதபாடு படுகிறது' என்கிறார் மைகேல்.

அவர்களுக்கிடையே விஸ்கி பருகிக் கொண்டே உரையாடல் நீடிக்கிறது. `நம் இருவருக்குமிடையே நிறைய கண்ணாடிகள் இருக்கின்றன. நான் பார்க்கும் கண்ணாடியை விட, நீ பார்க்கும் கண்ணாடியில் என்ன பார்க்கிறாயோ, அது குறைவான ஆர்வத்தைத் தருவதாகவே இருக்கும்' என்கிறார் மைகேல். அதன்மூலம் தன்னுடைய பல வருட அனுபவத்தை சூசகமாக அவளிடம் அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து முத்தத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. `உண்மையாக கூறுவதாக இருந்தால்- முத்தம் விஷயத்தில் நான் ஆர்வத்தை இழந்து விட்டேன். நீ, டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும்போது, அது உனக்கு ஒரு மிகப் பெரிய விஷயமாகத் தோன்றும். யாரையாவது முத்தமிடும்போது, நீ மலையின் உச்சியை அடைந்து விட்டதைப் போல உணர்வாய். காலப் போக்கில்-முத்தம் என்பது வழக்கமான ஒரு விஷயமாக தோன்ற ஆரம்பித்து விடும். தாளில் எதையாவது எழுதி, வேலையை முடிப்பதைப்போல... என்று மைகேல் தொடர்ந்து கூறுகிறார்: `நீ ஒரு அறிவாளி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், நான் ஏராளமான அறிவாளிகளை ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். எனினும், ஒரு புதிய உடலைப் பார்ப்பது என்பது... உனக்கு எந்தச் சமயத்திலும் சோர்வே உண்டாகாது'- இப்படி கூறிக் கொண்டே அவர் ஏஞ்ஜெலாவின் முகத்தையும், சரீரத்தையும் வெறித்துப் பார்க்கிறார்.

அவர் எழுந்து நடக்க, அவரைப் பின்பற்றி நடக்கிறாள் அந்த இளம் பெண். திடீரென்று அவர் படுக்கையறைக்குள் நுழைகிறார். நுழைந்தவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல் ஏஞ்ஜெலாவிடம், அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் கழற்றி எறிந்து விட்டு, நிர்வாணமாக தனக்கு முன்னால் வரும்படி கூறுகிறார். அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைந்து விடுகிறாள். தான் மிகவும் உயரத்தில் வைத்துப் பார்த்த மனிதர் இந்த அளவிற்கு கீழ்த் தரமான குணம் கொண்டவராக இருக்கிறாரே என்று மனதில் வெறுப்புடன் அவள் நிற்கிறாள். தனக்கு மனதில் எதையும் மறைத்து வைக்கத் தெரியாது என்றும், எதையும் வெளிப்படையாக செயல்படுத்தும் குணம் கொண்டவன் தான் என்றும் மைகேல் கூறுகிறார்.

அவள் அங்கிருந்து புறப்பட ஆரம்பிக்கிறாள். அதைப் பார்த்து மைகேல், அவளைத் தடுத்து நிறுத்துகிறார். தன்னுடைய தைரிய குணத்தை நிச்சயம் ஒருநாள் அவள் புரிந்து கொள்ளப் போவது உறுதி என்கிறார் அவர்.

மைகேல் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருக்கிறார். வெளியே ஏதோ கிறீச்சிடும் சத்தம் கேட்கிறது. என்னவென்று பார்த்தால்- கதவைத் திறந்து கொண்டு ஏஞ்ஜெலா உள்ளே வருகிறாள். மேற்சட்டை மட்டும் அணிந்திருக்கிறாள். சரீரத்தில் வேறு ஆடை எதுவுமில்லை. அதைப் பார்த்து இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார் Miguel. வாயைத் திறந்து வார்த்தைகள் எதுவும் பேசாமல், அவளுடைய நிர்வாண உடலின் மீது வர்ணத்தைப் பூசுகிறார். அந்த வர்ணத்தைக் கழுவுவதற்காக ஏஞ்ஜெலா அந்த அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் நுழைகிறாள்.

அவள் குளியலைறைக்குள் இருக்க, அதற்குள் மைகேலும் நுழைகிறார். அதைப் பார்த்து என்ன சொல்லுவது என்றே தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருக்கிறாள் ஏஞ்ஜெலா. மைகேலோ தாழ்ப்பாளைப் போடுகிறார். அங்கிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணும் ஏஞ்ஜெலா, தாழ்ப்பாளை நீக்க முயல, அது செயல்படாமல் இருக்கிறது. சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரிந்து கொண்டு, மைகேலும் தாழ்ப்பாளைத் திறப்பதற்காக முயற்சிக்கிறார். ஆனால், கதவு திறக்கவில்லை. ஏதோ காரணத்தால், தாழ்ப்பாள் திறக்க முடியாத அளவிற்கு மாட்டிக் கொள்கிறது. உள்ளேயிருந்து அதைத் திறக்க முடியாது. வெளியிலிருந்து திறந்தால்தான் வழியுண்டு. ஆனால், வெளியில் யாரும் இல்லையே! 

அவ்வளவுதான் - அந்தச் சிறிய குளியலறைக்குள் அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். மைகேல் இடுப்பில் ஒரு டவலைச் சுற்றியிருக்கிறார். வேறு ஆடை எதுவும் அவருடைய உடலில் இல்லை. அவளோ நிர்வாண கோலத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடைய தர்ம சங்கடமான நிலையைப் பார்த்து, தன் இடுப்பில் சுற்றியிருந்த டவலை அவிழ்த்து, அவளிடம் தருகிறார் மைகேல். ஏஞ்ஜெலா அதை தன் உடலில் சுற்றிக் கொள்கிறாள். 

முன்பு வெளியில் பேசிக் கொண்டிருப்பதைப் போலவே அந்த குளியலறைக்குள் இருந்து கொண்டு, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவள் அமர்ந்திருக்கும்போது, அவர் நிற்கிறார். அவர் அமரும் போது, அவள் நிற்கிறாள். அவ்வப்போது ஏஞ்ஜெலா டவலால் தன் உடலின் பாகங்களை மறைக்க முயற்சிக்கிறாள். பலவிதப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அவர்கள் உரையாடுகின்றனர்.

வரலாறு, இலக்கியம், ஆன்மீகம், மக்களின் வாழ்க்கை, அரசியல் - ஒன்றைக் கூட அவர்கள் விடவில்லை. பேசுகிறார்கள்... பேசுகிறார்கள்... பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஏஞ்ஜெலா ஆர்வத்துடன் ஒவ்வொன்றையும் பற்றி கேட்கக் கேட்க, தன்னுடைய அபார அனுபவத்தால் அவள் கேட்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் மிகவும் ஆழமாகவும், விளக்கமாகவும் பதில் கூறுகிறார் மைகேல். சில விஷயங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தன் பார்வையில் அந்த விஷயத்தை தான் அப்படித்தான் பார்ப்பதாக உறுதியான குரலில் கூறுகிறார் மைகேல். அவரின் பேச்சுக்களை மிகவும் ஆர்வத்துடன், கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள் ஏஞ்ஜெலா.

பேச்சுக்கு மத்தியில், 'இரண்டு நபர்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படலாம். ஆனால், அப்படி ஆசைப்படுவதற்கும், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வலிய இரண்டு பேர் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்கிறார் மைகேல். 

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel