மேட்ரிட் 1987 - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4462
தனக்கு பெண்ணின் உடல் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதைப் போலவே, விஸ்கி, சிகரெட்டின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருக்கிறது என்கிறார் மைகேல். அவர் கூறுகிறார் : `சில இளைஞர்கள் சாகும் வரை குடித்துக் கொண்டே இருக்கிறார்கள், அப்படிப்பட்டவன் பிரிட்டிஷ்காரன் குடிப்பதைப் போன்றவன். சரீரத்தைத் தளர்வடையச் செய்வதற்காக மது அருந்துபவன் ஸ்பெயின் நாட்டுக்காரன். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ்காரன் மது அருந்துகிறான். அவர்களுக்கு அது ஒரு தொழிலைப் போல. ஒரு பொழுதுபோக்கினைப் போல அல்ல....' அவர் தொடர்ந்து கூறுகிறார் : `நீ சிலர் மீது உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பாய், அவர்களை நீ சந்திக்கிறாய் அல்லவா? அவர்களை அதற்குப் பிறகு வாழ்க்கைக்குள் நுழையவே விடக் கூடாது என்பதற்கான முதல் அடிதான் அந்தச் சந்திப்பு. நீ உடல்களையும், இறந்த மனிதர்களையும் மட்டுமே வழிபட முடியும். உள்ளே இருப்பவை அழுக்கடைந்தவை, அழுகிப் போனவை, அசிங்கமானவை. அதற்குள் போகாமல் இருப்பதே நல்லது.'
இப்போது அவர்களுக்கு வேறொரு கவலை வந்து சேர்கிறது. Miguelக்கு மனைவி இருக்கிறாள். வீட்டில் இருக்கும் அவள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள். ஏஞ்ஜெலாவிற்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகள் இன்னும் வரவில்லையே என்ற கவலையுடன் இருப்பார்கள். ஒரு புகழ் பெற்ற பாசிச வீரரின் மகள்தான் ஏஞ்ஜெலா என்ற தகவல் அப்போதுதான் மைகேலுக்குத் தெரிய வருகிறது. அவளுடைய தந்தையை அவர் பார்த்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால்- அவளுடைய அக்காவைக் கூட அவருக்குத் தெரியும். `அவளின் தங்கையா நீ?' உன் அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும். வேறொரு வகையில் கூறுவதாக இருந்தால்- பல வருடங்களுக்கு முன்பு நான் அவளை மனதிற்குள் விரும்பினேன். அவளை எப்படியும் அடைய வேண்டும் என்று நினைத்தேன். சிறிது முயற்சித்திருந்தால், உன் அக்காவுக்கும் எனக்குமிடையே உடலுறவு கூட உண்டாகி இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ அப்போது அது நடக்கவில்லை. அதற்குப் பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை' என்கிறார் மைகேல். அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஏஞ்ஜெலா.
இப்போது திரும்பவும் அவர்கள் குளியலறையின் தாழ்ப்பாளைத் திறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், திறக்க முடியவில்லை. மேலே இருந்த வென்டிலேட்டரின் வழியாக மைகேல் கத்துகிறார். `தாழ்ப்பாள் சிக்கிக் கொண்டது, யாராவது உதவிக்கு வர முடியுமா?' என்று கேட்கிறார். ஆனால், யாருமில்லை. வாரக் கடைசி என்பதால், எல்லோரும் அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு உயிர் கூட இல்லை.
மீண்டும் குளியலறைக்குள் அந்த நடுத்தர வயதைத் தாண்டிய மனிதரும், அந்த அழகு தேவதையும்... நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏஞ்ஜெலாவின் சரீரத்தையே கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மைகேல். தன் உடலின் மீது அவருக்கு அடக்க முடியாத ஒரு ஆர்வம் இருக்கிறது என்பதை ஆரம்பத்திலிருந்து ஏஞ்ஜெலா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் ஒரு இளம் பெண்ணை இப்படி காம வெறியுடன் பார்க்கிறோமே என்பதைப் பற்றியெல்லாம் Miguel சிறிதும் கவலைப்படவில்லை.
`என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போதும் உங்களுக்கு இருக்கிறதா?' என்று கேட்கிறாள் ஏஞ்ஜெலா. `ஆமாம்....' என்கிறார் மைகேல். பிறகென்ன? விளக்கை அணைக்கும் ஏஞ்ஜெலா தன் உடலில் சுற்றியிருந்த டவலை நீக்குகிறாள். இருவருக்குமிடையே உடலுறவு நடக்கிறது... அந்தச் சிறிய குளியலறைக்குள்ளேயே. அதற்காக மனதிற்குள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், தவறு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு தேவையில்லை என்றும் கூறுகிறார் அவர். தனக்கு அப்படிப்பட்ட குற்ற உணர்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்கிறார் அவர். அதைக் கேட்டு அவளுக்கு அவர் மீது கோபமும், எரிச்சலும் உண்டாகின்றன. அவருக்கு ஆணவம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தன் கட்டுரையில் தான் எழுதப் போவதாகவும் அவள் கூறுகிறாள்.
கோபத்தில் இருக்கும் ஏஞ்ஜெலாவின் குணத்தை மாற்றி, சாந்தமாக்குவதற்காக மைகேல் ஒரு கதை கூறுகிறார். அந்த கதையை ஒரு திரைப்படமாக கற்பனை பண்ணி அவர் கூறுகிறார். அந்தத் திரைப்படத்தை திரையரங்கில் தாங்கள் பார்ப்பதைப்போல அவர் கூறுகிறார். அதில் வரும் சிறுவன் தான் படுக்கும் படுக்கையை விட்டு எந்தச் சூழ்நிலையிலும் எழுந்து வர முடியாது என்கிறான். தன்னிடம் எந்த தவறும் இல்லை என்கிறான் பையன். திடீரென்று சிறுவன் மறைந்து விடுகிறான். தங்களுடைய மகன் படுக்கையை விட்டு காணாமல் போய் விட்டான் என்பதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அவன் ஓடி விட்டான் என்பதற்காக கவலைப்படுவதா என்ற குழப்ப நிலையில் இருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்கள். இந்தக் கதையின் மூலம் மைகேல் என்ன கூற விரும்புகிறார் என்பது புரிகிறதா?
மைகேல் கதையைக் கூறி முடிப்பதற்கும், அவரின் நண்பன் லூயிஸ் அங்கு வெளியே வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த இருவரும் சற்று முன்பு சத்தம் போட்டு அழைத்தார்களே... அந்தக் கூக்குரலைக் கேட்ட ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, அவசர அவசரமாக கிளம்பி அங்கு வந்திருக்கிறான் லூயிஸ்.
வெளியிலிருந்து குளியலறையின் தாழ்ப்பாளை லூயிஸ் திறக்க, நிர்வாணமாக வெளியே வருகிறார்கள் இருவரும். மிகவும் வேகமாக தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ஏஞ்ஜெலா. செல்லும்போது தன்னுடைய கண்ணாடியை அங்கேயே அவள் மறந்து, வைத்து விட்டுச் சென்று விடுகிறாள். லூயிஸ் மைகேலிடம், திரும்பவும் அவர் ஏஞ்ஜெலாவைப் பார்ப்பாரா என்று கேட்டதற்கு, Miguel கூறுகிறார் : `இந்தக் கண்ணாடி இங்கேயே இருக்கட்டும், அவள் திரும்பவும் வருவதாக இருந்தால், இந்த வீட்டிற்குத்தான் வருவாள்.' அவருடைய வார்த்தைகளில்தான் என்ன ஆழமான அர்த்தம்!
ஏஞ்ஜெலா தன் பெற்றோரைத் தேடி வேக வேகமாக நடந்து செல்ல, படம் முடிவடைகிறது.
இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, ஒரு சிறிய குளியலறைக்குள் முழு படத்தையும் படமாக்கிய இயக்குநர் David Truebaவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். Miguel ஆக நடித்த Jose Sacristan ஐயும், ஏஞ்ஜெலாவாக வாழ்ந்த Maria Valverde யையும்தான்.