Category: சினிமா Published Date Written by சுரா Hits: 5073
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஃபேஸ் டூ பேஸ்(Face to Face)
(மலையாள திரைப்படம்)
மம்மூட்டி கதாநாயகனாக நடித்த படம். இயக்கம்: வி.எம்.வினு. ஒளிப்பதிவு: அஜயன் வின்சென்ட்.
2012ஆம் ஆண்டு நவம்பரில் திரைக்கு வந்தது.
ஒரு கொலையைச் சுற்றி பின்னப்பட்ட க்ரைம் பாணி கதையைக் கொண்ட படம். இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்றபடி இளமை ததும்பவும், ஹை-டெக் உத்திகள் சகிதமாகவும் வினு படத்தை இயக்கி யிருக்கிறார்.
ஒரு இளைஞன் சிலுவையில் இறந்து தொங்கவிடப்பட்டிருக்கிறான். இதுதான் ஆரம்ப காட்சி.
மிகப் பெரிய கோடீஸ்வரரும். அந்த நகரத்தின் முக்கியமான பிரமுகரின் மகனுமாக அவன் ஏன் சிலுவையில் இறந்து தொங்க வேண்டும்? அவனைக் கொலை செய்து சிலுவையில் தொங்க விட்டது யார்? அந்த கொலைக்கான காரணம் என்ன?
இதுதான் கதை.
காவல்துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக காவல் துறையினரின் மேலதிகாரிகளால் வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு விடுகிறார் மம்மூட்டி. பாலச்சந்திரன் என்ற பணி நீக்கம் செய்யப்பட்ட மம்மூட்டி அதற்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலுக்குள் நுழைகிறார். அது அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.
எப்போதும் மதுவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாலச்சந்திரன் அதன் விளைவாக உண்டாகும் பல கசப்பான சம்பவங்களால் தன்னுடைய மனைவியையும், குழந்தையையும் கூட பிரிந்து விடுகிறார். அருமையான குடும்ப வாழ்க்கையை இழந்து, செய்து கொண்டிருந்த வேலையையும் இழந்து... மனதிற்குள் கவலையும் விரக்தியும் குடி கொண்டிருந்தாலும், வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் தத்துவங்கள் பேசிக் கொண்டு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் அவர்.
கம்ப்யூட்டருக்கு முன்னால் எப்போதும் உட்கார்ந்து கொண்டு googleஐயும், Facebookஐயும், You tubeஐம் சதா நேரமும் மேய்ந்து, அலசிப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய மூளை மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிலுவையில் தொங்க விடப்பட்ட இளைஞனைக் கொலை செய்தது யார்? எதற்காக அந்த கொலையைச் செய்தார்கள் என்பதை அந்த சஸ்பென்ட் செய்யப்பட்ட காவல் துறை மனிதர் மனதில் ஆராய்ச்சி செய்து பார்க்கிறார். நடைபெற்ற சம்பவங்களை அலசிப் பார்த்து, கம்ப்யூட்டரின் உதவியுடன் பல புதிய விஷயங்களையும் கண்டு பிடிக்கிறார். அவர் பணியாற்றிய காவல் துறையில் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் உயரதிகாரிகள் கம்ப்யூட்டரைப் பற்றியோ, மடிக் கணிணியைப் பற்றியோ, ஹை-டெக்கான தொழிலம்சங்களைப் பற்றியோ எதுவும் தெரியாமல் இருக்க, இன்றைய இளைஞர்களின் மூளையைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாலசந்திரனின் மூளை.
காவல் துறை அந்த கொலை சம்பந்தமாக இதுவரை செய்திருக்கும் விசாரணையும், கண்டு பிடிப்புகளும் தவறான வை என்பதை அவர் உணர்கிறார். அப்படியானால், உண்மையில் நடந்தது என்ன? அவரே நேரடியாக களத்தில் இறங்குகிறார். கேரளத்திலிருந்து கர்நாடகாவிற்கு காரில் விரைகிறார். கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் தனியாக இருக்கும் ஒரு மிகப் பெரிய கட்டிடத்திற்குள் நுழைகிறார். அந்தக் கட்டிடத்திற்குள் தனக்கு இதற்கு முன்பு அறிமுகமான நான்கு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு வருகிறார். வயது வேறுபாடு பற்றி சிறிதும் கவலைப்படாமல், அந்த இளைஞர்களுடன் பாலச்சந்திரன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்... அவர்களுடன் சேர்ந்து மது அருந்துவார்... பாடுவார்... ஆடுவார். அதனாலேயே, பாலச்சந்திரனை அந்த ஹை-டெக்கான இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பாலச்சந்திரன் எங்கு அழைத்தாலும், அவர்கள் வருவார்கள். அப்படித்தான் அந்த கட்டிடத்திற்குள்ளும் வந்தார்கள். வந்த இடத்தில் துப்பாக்கியைத் தூக்கினார் பாலச்சந்திரன். சிலுவையில் தொங்கிய இளைஞனின் மரணத்திற்கும் அந்த நான்கு இளைஞர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது... அதை பாலச்சந்திரன் எப்படி கண்டு பிடித்தார்? அந்த இளைஞர்களில் யார் அந்த கொலையைச் செய்தது? ஏன் செய்ய வேண்டும்?
இதில் திருப்பம் என்னவென்றால்- அந்த நான்கு இளைஞர்களில் ஒருவன் பாலச்சந்திரனின் மகன். சிறு வயதில் தன் தந்தையை விட்டு பிரிந்து, தன் தாயுடன் கர்நாடகாவிற்குச் சென்ற அவன் இப்போது வளர்ந்து இளைஞனாக ஆகியிருக்கிறான்.
பாலகனாக தான் பார்த்த தன் மகனை துடிப்பு நிறைந்த இளைஞனாக பார்க்கிறார் பாலச்சந்திரன். துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டு தன்னையே சுடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் தந்தையை பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான் அந்த மகன்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது?
அந்த இளைஞர்களுக்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? தன் பணியிலிருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்ட பாலச்சந்திரன் மீண்டும் காக்கிச் சட்டையை அணிந்து, கம்பீரமாக நடைபோட்டாரா?
இப்படத்தின் உச்சக்கட்ட காட்சி யாரும் கற்பனை பண்ண முடியாத ஒன்று என்றால்- அதற்குப் பின் உண்டாகும் திருப்பம் நாம் சிறிதும் நினைத்திராதது. படத்தின் சிறப்பே அதுதான்.
பாலச்சந்திரன் என்ற முன்னாள் காவல் துறை அதிகாரியின் பாத்திரத்தில் மம்மூட்டி உயிர்ப்புடன் வாழ்ந்திருக்கிறார். இந்த வயதில் - தன்னுடைய உடலமைப்பில் தீவிர கவனம் செலுத்தி, ஆச்சரியப்படும் வகையில் அதை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருக்கும் மம்மூட்டியை நாம் காட்டாயம் பாராட்ட வேண்டும். எந்தவித மிகை நடிப்பும் இல்லாமல், மிடுக்காக ஒவ்வொரு காட்சியிலும் வந்து இயல்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் மம்மூட்டி- நம்மை சோர்வின்றி படம் பார்க்க வைக்கிறார்.
காட்சிக்குக் காட்சி தானே வர வேண்டும் என்றில்லாமல், இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் தந்து, அவர்களில் ஒருவனாக தன்னையும் ஆக்கிக் கொண்டு நடித்திருக்கும் மம்மூட்டியின் நடைமுறை சிந்தனைக்கும், பரந்த மனதிற்கும் ஒரு பாராட்டு.
கோவா, எர்ணாகுளம், மூணாறு ஆகிய இடங்களில் வளர்ந்திருக்கும் இப்படத்தின் பெண் கதாபாத்திரங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த ராகிணி த்விவேதியும், ரோமா அஸ்ரானியும் நடித்திருக்கிறார்கள். இது தவிர, கலாபவன்மணி, விஜயராகவன், சித்திக், மாமுகோயா, அபு சலீம் ஆகியோரும் படம் முழுக்க வருகிறார்கள்.
அஜயன் வின்சென்டின் காட்சிக்கேற்ற லைட்டிங் படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. சம்ஜித் முஹமத்தின் படத்தொகுப்பு பாராட்டும் வகையில் இருக்கிறது.
மொத்தத்தில்-
‘ஹைடெக்’கான ஒரு க்ரைம், த்ரில்லர் படம்- மம்மூட்டியின் அலட்டல் இல்லாத நடிப்பு முத்திரையுடன்.