Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6634
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
செல்லுலாய்ட் - (Celluloid)
(மலையாள திரைப்படம்)
2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்து, படவுலகில் பரபரப்பை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கும் ஒரு சிறந்த படம்.
பல மாறுபட்ட மலையாள திரைப்படங்களை இயக்கி, தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்று வைத்திருக்கும் கமல் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். அவரின் மனைவியாக நடித்திருப்பவர் திறமை வாய்ந்த நடிகையான மம்தா மோகன்தாஸ்.
‘மலையாள சினிமா’வின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கியிருக்கும் இந்த வித்தியாசமான படத்திற்கு அடிப்படையாக அமைந்தவை சேலங்காட் கோபாலகிருஷ்ணன் எழுதிய ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையும், வினு ஆப்ரஹாம் எழுதிய ‘நஷ்ட நாயிக’ என்ற நூலும்தான்.
இவ்விரு நூல்களில் இடம் பெற்ற சம்பவங்களைத் திரைக்கதையாக்கி, நேர்த்தியான ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கும் கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஜே.ஸி. டேனியல் அடிப்படையில் ஒரு தமிழர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருவாங்கூர் பகுதியில் குடியிருந்தவர். நல்ல வசதி படைத்த குடும்பப் பரம்பரையில் வந்தவர். அவருக்கு கலையின் மீதும், சினிமாவின் மீதும் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும். அவர் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, பல்வேறு இடங்களையும் பார்க்கிறார். பல வகையான மனிதர்களையும் சந்திக்கிறார். பல்வேறு மனித வாழ்க்கைகளையும் தெரிந்து கொள்கிறார். சினிமா சம்பந்தப்பட்ட பலருக்கும் கடிதங்கள் எழுதுகிறார்.
சினிமாவை இந்தியாவிற்கு முதன் முதலாக கொண்டு வந்த இந்திய படவுலகின் தந்தையான தாதா சாஹிப் பால்கேயை பம்பாய்க்குச் சென்று நேரில் சந்திக்கிறார். தான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருப்பதையும், சினிமாவின் மீது தான் கொண்டிருக்கும் அளவற்ற வெறியையும், தான் வசிக்கும் திருவாங்கூர் பகுதிக்கு சினிமாவைக் கொண்டு வருவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பால்கேயிடம் அவர் வெளியிடுகிறார். சினிமாவின் மீது ஜே.ஸி.டேனியல் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாட்டைப் பார்த்து பால்கே மனதில் மகிழ்ச்சி அடைகிறார். அப்போது பால்கேயின் படப்பிடிப்பு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்குக் கிளம்பும் பால்கேயிடம், படப்பிடிப்பைப் பார்க்க தான் விரும்புவதாக கூறுகிறார் டேனியல். வெளி மனிதர்கள் யாரையும் பொதுவாக தன்னுடைய படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று கூறும் பால்கே, டானியலை அனுமதிக்கிறார். டேனியல் படப்பிடிப்பு நடப்பதை நேரில் பார்க்கிறார்.
அதைத் தொடர்ந்து வெளி நாட்டிற்குச் சென்று படப்பிடிப்பு கருவியுடன் ஊருக்குத் திரும்புகிறார். படம் பிடிக்க பயன்படும் கேமராவை அவர் எல்லோருக்கும் காட்ட, அனைவரும் அதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். காணாமல் போகும் ஒரு சிறுவனை மையமாக வைத்து கதையை தான் உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் டேனியல். ஒரு சிறுவன் திடீரென்று காணாமல் போகிறான். அவனைத் தேடி பல இடங்களிலும் அலைந்து, இலங்கைக்கு கடத்தப்பட்டிருக்கும் அவனை எப்படி கதாநாயகன் கண்டு பிடித்து, கொண்டு வந்து சேர்க்கிறான் என்பதே கதை. படத்தின் கதாநாயகன் வேடமிட்டு நடிப்பவர் ஜே.ஸி.டேனியல். படத்தை இயக்குபவரும் அவரே. ஒளிப்பதிவாளர் வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரர்.
படத்தின் பெயர் ‘விகத குமாரன்’. தனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு ஸ்டூடியோவை அமைக்கிறார் டேனியல். அங்கு படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்படுகின்றன. படத்திற்கு டேனியல் கதாநாயகன். கதாநாயகி? அந்தக் காலத்தில் படத்தில் நடிப்பதற்கு பொதுவாக பெண்கள் அவ்வளவு எளிதில் முன் வருவதில்லை. அதற்காக கதாநாயகியைத் தேடி பம்பாய்க்குச் செல்கிறார் டேனியல். அங்கு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை அவர் தேர்வு செய்கிறார். அவளை திருவாங்கூருக்குக் கொண்டு வரவும் செய்கிறார். இப்போதைய சினிமா நடிகைகள் பண்ணக் கூடிய அவ்வளவு அட்டகாசங்களையும் அந்த நடிகை அப்போதே பண்ணுகிறாள். பயணம் செய்வதற்கு விமானம் கேட்கிறாள். தங்குவதற்கு நட்சத்திர விடுதி கேட்கிறாள். அந்த வசதிகளைச் செய்து கொடுக்க மறுக்கும் டேனியல், அவளை மீண்டும் பம்பாய்க்கே திருப்பி அனுப்பி வைத்து விடுகிறார்.
இப்போது கதாநாயகிக்கு என்ன செய்வது? அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது- ரோஸம்மா என்ற இளம் பெண்ணைப் பற்றி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவள் வயலுக்கு கூலி வேலைக்குச் சென்று கொண்டிருப்பவள். நாற்று நட்டும், களை பறித்தும் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள். தன் ஏழை பெற்றோருடன் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாநிறம் கொண்ட பெண் அவ்வப்போது அந்த பகுதியில் நடக்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நாடகங்களில் நடிப்பதுண்டு. அவளைப் பற்றி கேள்விப்பட்ட டேனியல், அவள் நடிக்கும் நாடகத்தைப் போய் பார்க்கிறார். ரோஸம்மாவின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அவள்தான் தன்னுடைய கதாநாயகி என்ற முடிவுக்கு அப்போதே வந்து விடுகிறார் டேனியல். அவளின் குடிசைக்குச் சென்று, டேனியல் அவளின் பெற்றோரிடம் பேசுகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
முதலில் தயங்கும் ரோஸம்மாவிற்கு டேனியல் தைரியம் கூறுகிறார். தான் கூறும் வசனத்தைப் பேசி, தான் கூறியபடி நடித்தால் போதும் என்கிறார். முதல் நாள் படப்பிடிப்பிற்கு மாட்டு வண்டியில், சோற்றுப் பாத்திரத்துடன் முண்டு, ரவிக்கை கோலத்துடன் வந்து இறங்குகிறாள் அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கள்ளங்கபடமற்ற ஏழைப் பெண். அவளுக்கு ஒப்பனை செய்யப்படுகிறது. ஜரிகை போட்ட புடவையும் ரவிக்கையும் தரப்படுகிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்த ரோஸம்மாவால் சிறிதும் நம்ப முடியவில்லை. தானா அது?
டேனியல் கூறியபடி ரோஸம்மா நடிக்கிறாள்... வசனம் பேசுகிறாள்... நடக்கிறாள்... அமர்கிறாள்... பார்க்கிறாள்... சிரிக்கிறாள்... டேனியல் அவளை மனம் திறந்து பாராட்டுகிறார். ரோஸம்மா என்ற பெயர் ரோஸி என்று மாற்றப்படுகிறது. படப்பிடிப்பு நடப்பதை டேனியலின் மனைவி ஜேனட் அங்கு ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன் அன்பு கணவரின் கனவு நல்ல முறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் பிரகாசமும், பூரிப்பும் அவளுடைய முகத்தில்...
மதிய வேளையில் சாப்பிடுவதற்காக எல்லோரும் அமர்ந்திருக்க, எங்கோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த ஈயப் பாத்திரத்திலிருந்து கஞ்சியை எடுத்து குடித்துக் கொண்டிருக்கிறாள் ரோஸம்மா. அங்கு வந்த டேனியல் ‘நீ ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய்? எங்களுடன் வந்து உட்கார்ந்து, அங்கிருக்கும் உணவைச் சாப்பிடு. நீ இப்படத்தின் கதாநாயகி’ என்கிறார். ஆனால், அதற்கு மறுத்து விடுகிறாள் ரோஸம்மா. வயலுக்கு கூலி வேலைக்குச் செல்லும்போது, அவள் இப்படித்தானே மண்ணில் அமர்ந்து தூக்குப் பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் கஞ்சியைக் குடிப்பாள்?